• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளம் – பிரதமர்

Byadmin

Sep 24, 2025


சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளமாகும் என்றும் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்வதற்கு “SL MICE EXPO 2025”  ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை மாநாட்டு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “SL MICE EXPO 2025”  கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு, செப்டம்பர் 23ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள் கலந்துகொள்வதுடன், “SL MICE EXPO 2025”  கண்காட்சி இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெற இருக்கின்றது.

இலங்கையை MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions)  துறையில் ஒரு முன்னணி நாடாக மாற்றுவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு MICE பிரிவில் தமது சேவைகள், தயாரிப்புகள் மற்றும் திறமைகளை காட்சிப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்குமான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“இது ஒரு கண்காட்சி மட்டுமன்றி. நம் நாட்டு வர்த்தகர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் நேரடியாக சர்வதேச ரீதியில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் அறிவைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். இத்தகைய கண்காட்சிகள் இலங்கையை ஒன்றுகூடல்கள்இ மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான தளமாக மாற்றுவதற்கான வாய்ப்பை பெற்று தருகின்றது.

இலங்கை பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறைக்கு ஒரு மிக முக்கியமான இடம் இருக்கின்றது. 2024ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறை மூலம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை தேசிய பொருளாதாரத்திற்கு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.\

அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் துறைகளில் சுற்றுலாத்துறை மூன்றாவது பெரிய துறையாக விளங்குகின்றது. இந்த நிலமையானது அபிவிருத்திக்கும் தேசிய பொருளாதாரத்தின் சாதகமான மாற்றத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

இலங்கையின் பெறுமதியும், புவியியல் அமைவும் ஆசியா, வளைகுடா, மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் நிலவுகின்ற தொடர்புகள் காரணமாக, சர்வதேச வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது ஒரு தனித்துவமான தளமாக மாறி இருக்கின்றது. அது மாத்திரமின்றிஇ பல்வேறு இயற்கை அழகுஇ பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கலாச்சாரம் மற்றும் நமது நாட்டின் சர்வதேச தரத்திலான விருந்தோம்பல் ஆகியவற்றை சர்வதேச வர்த்தக சமூகத்திற்கு அனுபவிப்பதற்கான வாய்ப்பு இலங்கையில் இருக்கின்றது.

குறிப்பாக, இந்த கண்காட்சி வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கும் உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்கும் இடையில் ஒரு நல்ல உறவை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகின்றது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சும், இலங்கை மாநாட்டு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த கண்காட்சியானது, இலங்கையை MICE மையமாக மாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பெற்றுக் கொடுக்கும் பங்களிப்புக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் தீர ஹெட்டியாராச்சி, பதில் பொது முகாமையாளர் அச்சினி தந்துன்னகே மற்றும் 30 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

By admin