பட மூலாதாரம், NASA
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்கள் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் அங்கு எப்படி வாழ்ந்தார், அவருடைய ஆரோக்கியத்தில் இந்த விண்வெளி வாழ்க்கை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் என்ன என்று பலவும் விவாதிக்கப்படுகின்றன.
அதேநேரத்தில், மற்றுமொரு கேள்வியும் இதனூடாக எழுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், உள்ளாடைகள், தண்ணீர், காபி பருகிய பொருட்கள், பயன்படுத்திய பண்டங்கள் போன்ற குப்பைகளை என்ன செய்வார்கள்? விண்வெளியில் சுற்றித் திரியும் பல கோடி குப்பைகளின் நிலை என்ன?
விண்வெளி வீரர்கள் எவ்வளவு குப்பைகளை உற்பத்தி செய்கிறார்கள்?
விண்வெளியில் துணி துவைக்க முடியாது. ஆகையால் அங்கு வசிப்பவர்கள் உள்ளாடைகளை தோராயமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மற்ற ஆடைகளை சில நாட்கள் அல்லது வாரத்திற்கு ஒருமுறை மாற்றுவார்கள்.
அப்படி ஒருமுறை பயன்படுத்திய அழுக்கு ஆடைகளை மீண்டும் துவைத்துப் பயன்படுத்தும் வசதி அங்கு கிடையாது. ஆகையால், அவை குப்பையாகவே சேர்கின்றன.
அதேபோல, அவர்கள் தண்ணீர், காபி குடிக்கப் பயன்படுத்திய பொருட்கள், உணவருந்தப் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் குப்பையாகவே சேர்கின்றன.
தண்ணீர் பெரும்பாலும் காற்று புகாத, சீல் செய்யப்பட்ட பைகளில் ஒரு ஸ்டிராவுடன் வழங்கப்படுகிறது. விண்வெளி வீரர்கள் அந்த ஸ்டிராவை பயன்படுத்தி தண்ணீரைப் பருக வேண்டும். தண்ணீர், காபி, ஜூஸ் போன்ற திரவங்களைப் பருக இத்தகைய பவுச்களே விண்வெளியில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், இவையனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை என்பதால் குப்பையாகச் சேர்கின்றன.
அதேபோல, காற்று புகாத கன்டெய்னர்களில், நீண்ட நாட்களுக்கு வைத்துப் பயன்படுத்தும் வகையில்தான் உணவும் அடைத்து வைத்து அனுப்பப்படுகின்றன. ஆகவே அவையும் சாப்பிட்டு முடித்த பிறகு குப்பையாகச் சேரும்.
அதுபோக அவர்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும் சிறுநீர் மற்றும் மலமும் கழிவாகச் சேர்கிறது. இதில், சிறுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மீண்டும் தண்ணீராகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மலம் கழிவாகவே சேர்கிறது.
விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஆடைகள் என்ன ஆகும்?
பட மூலாதாரம், NASA
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்கள் உடுத்தும் ஆடைகள், சாப்பிட்ட பிறகு மீதமிருக்கும் குப்பைகள், அவர்களின் மலம், அவர்கள் பயன்படுத்திவிட்டுப் போடும் பழைய பேட்டரிகள் மற்றும் பிற பொருட்கள் எனப் பல குப்பைகள் சேர்கின்றன.
அவற்றை என்ன செய்வார்கள்?
பொதுவாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் வாழும் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற பொருட்களை அவ்வப்போது ஒரு சரக்கு விண்கலம் மூலமாக அனுப்பி வைப்பார்கள்.
அப்படி அனுப்பி வைக்கப்படும் விண்கலத்தில் இருக்கும் சரக்குகள் காலியான பிறகு, அதிலேயே தங்கள் குப்பைகளை அடைத்து வைத்து, விண்வெளி நிலையத்தில் இருந்து அன்-டாக் செய்வார்கள். (undock – சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்திருக்கும் விண்கலத்தைத் தனியாகப் பிரித்துவிடும் செயல்முறை).
அப்படி அன்-டாக் செய்யப்பட்ட குப்பைகள் நிரப்பிய விண்கலம், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியிலும் விழும். அப்படியொரு சம்பவம் கடந்த ஆண்டிலும் நடந்தது.
கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி, இத்தாலியில் வாழும் அலெஜான்ட்ரோ ஒட்டேரா என்பவரின் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு ஏதோ வானிலிருந்து விழுந்துள்ளது. அதை ஆய்வு செய்தபோது, விண்ணில் 400கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கழிவாக வீசப்பட்ட ஒரு பேட்டரி அவரது கூரையைப் பிய்த்துள்ளது.
இப்படியாக, கோடிக்கணக்கான குப்பைகள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த விண்வெளிக் குப்பைகளைக் கையாள்வது ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது.
விண்வெளியை நிரப்பி வரும் குப்பைகள்
பட மூலாதாரம், Getty Images
கடந்த 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதியன்று, முதல் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதில் விண்ணுக்குச் சென்ற ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளில் இருந்து விண்வெளி யுகம் தொடங்கியது.
இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட விண்கலங்களை மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர். அப்படி ஒவ்வொரு முறை அனுப்பும்போதும் விண்வெளியில் நிறைய குப்பைகள் சேர்கின்றன.
இப்படியாக விண்வெளியில் குப்பைகள் நிரம்பி வழிந்தால் என்றாவது ஒருநாள் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சம் நிலவியது. பின்னர் அது நடக்கவும் செய்தது. கடந்த 2001, பிப்ரவரி 11ஆம் தேதி, காஸ்மோ 2251, இரிடியம் 33 ஆகிய செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று மோதின.
பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு முறை விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவும்போதும், அதிலிருந்து பல கழிவுகள் அங்கு மிதக்கத் தொடங்குகின்றன.
ஒரு புரிதலுக்காக, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
ஏவும்போது உந்துதலைக் கொடுக்கும் ராக்கெட்டின் பாகங்கள், விண்வெளிக்குச் சென்ற பிறகு கழன்றுவிடும். அதோடு, அந்த ராக்கெட்டின் தலைப்பகுதியில் வைக்கப்படும் விண்கலம் தனியே பிரிந்த பிறகு, அந்த மேல் பகுதியும் பிரிந்துவிடும்.
இறுதியாக விண்கலத்தில் இருக்கும் கேமராக்களுக்கு போடப்பட்டிருக்கும் மூடிகளும் பிரிந்து வெளியேற்றப்படும். இந்தப் பாகங்கள் அனைத்துமே ஏற்கெனவே பறந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குப்பைகளோடு சேர்ந்துகொள்ளும்.
இவை மட்டுமின்றி, இன்னும் பல்லாயிரம் செயற்கைக்கோள்களும் குப்பைகளாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. விண்ணில் செலுத்தப்படும் ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும் ஓர் ஆயுள் இருக்கும். அந்த ஆயுள் முடிந்த பிறகு அவை குப்பையாகச் சுற்றுகின்றன.
அமெரிக்கா 1958இல் வான்கார்ட்-2 என்ற செயற்கைக்கோளை ஏவியது. அது இன்னமும் விண்வெளியில் குப்பையாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இதேபோல, விண்வெளி வீரர்கள் சில நேரங்களில் விண்வெளி நிலையத்திற்கு வெளியே பராமரிப்புப் பணிகளுக்காகச் செல்ல வேண்டியிருக்கும். அப்போது அவர்களின் கையில் இருக்கும் கருவிகள் தவறி விழலாம். அவையும்கூட பூமியைச் சுற்றி விண்வெளிக் குப்பையாகவே வலம் வருகின்றன.
இப்படியாக விண்வெளியில், கிரிக்கெட் பந்து அளவுக்கு இருக்கும் சுமார் 30,000 கழிவுகள் சுற்றி வருகின்றன. மேலும், ஒரு சென்டிமீட்டர் அளவுள்ள கழிவுகள் 6,70,000 மற்றும் ஒரு மில்லிமீட்டர் அளவுள்ள கழிவுகள் 1.7 கோடி விண்வெளியில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விண்வெளிக் குப்பைகளைக் குறைக்க இஸ்ரோ என்ன செய்கிறது?
பட மூலாதாரம், ISRO
இப்படி கோடிக்கணக்கில் சுற்றி வரும் விண்வெளிக் குப்பைகளை எப்படிக் கையாள்வது?
இதற்கு இஸ்ரோ சில முயற்சிகளை எடுத்தது. ராக்கெட்டுக்கு விண்வெளியில் உந்துவிசை வழங்கும் பாகத்தை ஏன் வீணாகச் சுற்றவிட வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் சிந்தித்தனர்.
அதற்குப் பதிலாக, அதிலும் சில ஆய்வுக் கருவிகளை வைத்து, அதையும் ஓர் ஆய்வு நிலையமாகப் பயன்படுத்த முயற்சி எடுத்தனர்.
பிஎஸ்எல்விசி-37, பிஎஸ்எல்விசி-38 ஆகியவற்றில் பாகத்தை ஆய்வுக் கருவியாக மாற்ற முடியுமா என்றும் முயன்றார்கள். அந்தப் பரிசோதனைகளை வைத்து பிஎஸ்எல்விசி-44 ராக்கெட்டில் அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
விண்வெளிக் குப்பைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு என்ன ஆபத்து?
இப்படியாகப் பல கோடி குப்பைகள் விண்வெளியில் சுற்றி வரும்போது அவை ஒன்றோடொன்று மோதி விபத்துகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.
அந்த விபத்துகள் விண்வெளியில் இயங்கி வரும் செயற்கைக் கோள்களை பாதிக்கலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள். அவை அதன் மீதும் மோதக்கூடிய ஆபத்து இருக்கிறது.
பட மூலாதாரம், NASA
இதைக் கருத்தில் கொண்டு சர்வதேச அளவில் விண்வெளிக் குப்பைகளைக் கட்டுப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் முக்கியமாக, செயலிழந்த, வாழ்நாள் முடிந்துபோன செயற்கைக்கோள்களை என்ன செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது.
அதற்குத் தீர்வாக, செயற்கைக்கோள்களை பூமியின் வளிமண்டலத்தை நோக்கிய திசையில் செலுத்தி, சுற்ற வைத்தால், அது தொடர்ச்சியாக உராய்வை எதிர்கொண்டு, முற்றிலுமாக எரிந்துவிடும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அல்லது அவற்றை விண்வெளியில் தொலைதூரத்திற்கு வீசிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
மேலும், விண்வெளியில் வலை போன்ற ஓர் அமைப்பை உருவாக்கி, குப்பைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அகற்றிவிடலாமா என்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ், இந்தியாவின் இஸ்ரோ ஆகிய அரசு சார்ந்த விண்வெளி நிறுவனங்கள் சர்வதேச விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் முனைப்பு காட்டும். ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 50,000 சிறு நேனோ செயற்கைக்கோள்களை தனியார் துறை ஏவப்போவதாக மதிப்பிடப்படுகிறது. விண்வெளிப் பயணங்கள் மற்றும் திட்டங்களில் தனியாரின் பங்கும் பெரியளவில் வளர்ந்து வருகிறது.
எது எப்படியோ, கடந்த 70 ஆண்டுகளில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் குப்பைகளைப் போட்டு, மனித இனம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இப்போது இருக்கும் மிகப்பெரிய சவால், அந்தக் குப்பைகளை என்ன செய்யப் போகிறோம் என்பதுதான்.
ஏற்கெனவே கோடிக்கணக்கில் விண்வெளிக் குப்பைகள் சேர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அரசு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்கள், இந்தச் சவாலைக் கையாள எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.