திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது:
மனிதர்கள் வாழ தகுதியான கிரகம்: கல்வியை தாய்மொழியில்தான் சிறப்பாக கற்க முடியும். அதேவேளையில், ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் உலக அளவில் நாம் செல்லமுடியும். உலக அளவில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதை கல்வி யின் மூலம் அடைய முடியும் என்பதை என்னை உதாரணமாக வைத்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.
சமுதாயத்துக்கான பல்வேறு பணிகளை இந்திய விண்வெளித் துறை செய்துள்ளது. சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்து மனிதர்கள் வாழத் தகுதியான கிரகமாக செவ்வாய்க் கிரகம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பழைய காலத்திலும் அறிவியல் இருந்தது. இன்றும் உள்ளது. ஆனால், அறிவியல் இன்று பல வகைகளில் மேம்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு விண்வெளித் துறையில் முக்கியமானது. விண்வெளித் துறையில் ஏற்கெனவே அது செயல்படுத்தப்பட்டு அடுத்த பரிமாணத்தை நோக்கிச் சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.