பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஆதரவுடைய ‘சதர்ன் டிரான்சிஷனல் கவுன்சில்’ (Southern Transitional Council) கடந்த வாரம் யேமனின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் எண்ணெய் வளங்களை மீண்டும் கைப்பற்றியது.
சவுதி ஆதரவு பெற்ற படைகள் விலகிய பிறகு, யேமனில் அந்தப் பகுதிகள் பிரிவினைவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
2022 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த பகுதியில் அமைதி நிலவி வந்த நேரத்தில் சதர்ன் டிரான்சிஷனல் கவுன்சிலின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, யேமன் விவகாரத்தில் மத்திய கிழக்கின் இரண்டு பெரிய நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கிடையேயான கசப்புணர்வை மீண்டும் தூண்டியுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை அவரவர் பாணியில் வெளியிட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடைய ஸ்கை நியூஸ் அல்-அரேபியா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடைய அல்-அரேபியா நியூஸ் ஆகியவை தென்கிழக்கு ஏமனில் நடந்த நிகழ்வுகளை வெளியிடும்போது வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டன.
டிசம்பர் 8 அன்று ஒரு ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், யேமன் மீதான அதன் நிலைப்பாடு “சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டைப் போலவே” இருப்பதாகக் கூறினார்.
ஆனால், சமீபத்தில் இந்த பகுதியில் நடந்த நிகழ்வுகள், யேமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் குறித்து சவுதி தலைமை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைக் காட்டுகிறது.
பட மூலாதாரம், al-Masirah
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஆதரவுடைய சதர்ன் டிரான்சிஷனல் கவுன்சில் (STC) ஏமனில் சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஸ்கை நியூஸ் அல் அரேபியா (Sky News Al Arabiya) STC-இன் விவரணையின் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது.
இதில் STC தலைவர் மன்சூர் சலே உடனான நேர்காணலும் அடங்கும்.
அந்த நேர்காணலில், யேமனில் ஹூத்திகளை தனது இயக்கம் சமீபத்தில் எவ்வாறு தோற்கடித்தது என்பதை அவர் விளக்கினார்.
ஸ்கை நியூஸ் அல் அரேபியா தொலைக்காட்சிக்கான அவரது நேர்காணலில், இந்த மோதலின் நோக்கம் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையைக் கொண்டு வருவதாகும் என்றும் சலே கூறினார்.
ஏமன் மற்றும் பிற முக்கிய விவகாரங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையேயான வளர்ந்து வரும் பதற்றம் குறித்த விரிவான பகுப்பாய்வை பிபிசி மானிட்டரிங் 2025 ஜூன் 16 அன்று வெளியிட்டது.
அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே வளர்ந்து வரும் போட்டி
பட மூலாதாரம், Getty Images
யேமன் மோதலானது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா இடையே நிலவியல், அரசியல் மற்றும் உலகப் பொருளாதார விவகாரங்களில் வளர்ந்து வரும் இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது.
இந்த இரண்டு வளைகுடா நாடுகளும் ஒபெக்-இல் (OPEC- Organization of Petroleum Exporting Countries) எடுக்கும் முடிவுகள் மற்றும் சூடான், யேமன் மற்றும் பிற எல்லைப் பிரச்னைகள் மீதான அவற்றின் நிலைப்பாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன.
மேலும், இரு நாடுகளும் ஆப்பிரிக்காவில் பிராந்திய அதிகாரம் மற்றும் செல்வாக்குப் பெறுவதற்காகவும் போட்டியிடுகின்றன.
பிராந்திய அரசியலில் சவுதி அரேபியா ஒரு முக்கியப் பங்கு வகிப்பதோடு, முதலீடுகளின் மையமாக மாறுவதில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது அதிகாரத்தையும் வளங்களையும் ஆப்பிரிக்காவிலும் செங்கடலிலும் தனது செல்வாக்கை விரிவாக்கப் பயன்படுத்துகிறது.
பல ஊடக அறிக்கைகளின்படி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக்-இல் எண்ணெய் உற்பத்தி தொடர்பான முடிவுகள் காரணமாக சவுதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இணையதளமான ’71’ ஆனது, ஒபெக்-இன் உள்ளே இருக்கும் வேறுபாடுகள் மற்றும் பதற்றமான சூழல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையேயான கூட்டணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறுகிறது.
‘தி எகனாமிஸ்ட்’ (The Economist) பத்திரிகையில் வெளியான ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒபெக்-ஐ உடைக்குமா?’ என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையைப் பற்றி அது விவாதித்தது.
இந்தக் கட்டுரை, ஐக்கிய அரபு அமீரகம் “மிகப் பெரிய அளவில் கூட்டமைப்பு விதிகளை (Cartel Rules) மீறியுள்ளது” என்று கூறியது.
ஒபெக்-ஐ உருவாக்கிய ஒரு முக்கியமான நாடான சவுதி அரேபியா, இந்த அமைப்பின் கொள்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. ஆனால் விதிகளை மீறுபவர்களைக் கடுமையாகக் கையாளவில்லை என்று ‘தி எகனாமிஸ்ட்’ கூறுகிறது.
சவுதி அரேபியா இதனைக் குறித்து அறிந்திருந்தாலும், அபுதாபியுடன் ஒரு மோதலை விரும்பவில்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையேயான பிளவுக்கு மற்றொரு காரணம், யசத் பகுதியை ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பாதுகாக்கப்பட்ட கடல்சார் பகுதியாக அறிவித்தது தான்.
மார்ச் 2024 இல், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு புகாரைப் பதிவு செய்ததுடன், இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்று கூறியது.
சவுதி அரேபியா, இரு நாடுகளுக்கும் இடையேயான 1974 ஜெட்டா ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், “ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் தனது கடற்கரைக்கு அப்பால் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அல்லது அணுகுமுறைகளையும் சவுதி அரேபியா ஏற்றுக்கொள்ளாது” என்று கூறியது.
ஐரோப்பிய சர்வதேச சட்ட இதழின் (EJIL) வலைப்பதிவின்படி, யசத், இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லைகள் தொடர்பான பரந்த சர்ச்சையில் சமீபத்திய ‘மோதல் புள்ளியாக’ மாறியுள்ளது.
1974 ஜெட்டா ஒப்பந்தம் இருந்தபோதிலும், எல்லைப் பிரச்னைகள் மீண்டும் எழுவது, இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையேயான “பேசப்படாத ஒரு போட்டி மனப்பான்மையை” பிரதிபலிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
யேமன் குறித்த இரு நாடுகளின் நிலைப்பாட்டிலும் மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
ஏமன் விவகாரத்தில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
2015 ஆம் ஆண்டில், இரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி தலைமையிலான போரில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு முக்கியப் பங்கை வகித்தது.
ஆனால், மறுபுறம், ஏமனின் தெற்கு கடற்கரையில் கால் பதிக்கவும், செங்கடல் மற்றும் துறைமுக வர்த்தக வழித்தடங்களுக்கான அணுகலைப் பெறவும், ஐக்கிய அரபு அமீரகம் எஸ்டிசி படைகளுக்கு ஆதரவளித்தது.
கடந்த காலங்களில், எஸ்டிசி அரசுப் படைகளுடன் நேரடி மோதலில் ஈடுபட்டதுடன், தெற்கு யேமனின் சில பகுதிகளையும் கைப்பற்றியது.
ஆனால், இந்த ஆதரவுதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு விதை போட்டது. ஏனென்றால், சவுதி அரேபியா ஏமனில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் ராணுவத்தை ஆதரிக்கிறது.
சமீபத்திய ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகம் ஏமனில் தனது ராணுவ இருப்பை அதிகரித்துள்ளது.
சவுதி ஆதரவுடைய ஏமன் அரசாங்கத்துடன் படைகளுக்குப் பயிற்சி அளிப்பது, உளவுத் தகவல்கள் பகிர்வதை ஊக்குவிப்பது மற்றும் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
2021 ஆம் ஆண்டில், அசோசியேட்டட் பிரஸ்ஸின் ஒரு அறிக்கை, பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள மயூண் (பெரிம்) தீவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விமான நிலையத்தைக் கட்டி வருவதாகக் கூறியது.
உத்தி சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவில் ஒரு ராணுவத் தளத்தை நிறுவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேற்கொண்ட முயற்சிகள் சவுதி அரேபியாவுக்கு கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் மாறியது.
சூடானும் மறைமுகப் போரும்
பல ஆய்வாளர்கள், சூடானில் நடக்கும் போரை ஐக்கிய எமிரேட்ஸும் சவுதி அரேபியாவும் “மத்திய கிழக்கில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகப் பார்க்கின்றன” என்று கூறுகின்றனர்.
சூடான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைமுகப் போருக்கான போர்க்களமாக மாறிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சூடானில் செயல்படும் துணை ராணுவப் படைகளான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) மற்றும் சூடான் ஆயுதப் படைகள் (Sudanese Armed Forces) உட்பட இரண்டு தீவிர குழுக்கள் தொடர்பாக சவுதி அரேபியா நடுநிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்தப் போரை அமெரிக்காவின் உதவியுடன் முடிவுக்குக் கொண்டுவர அது முயன்றது.
சில ஊடகச் செய்திகளின்படி, சவுதி அரேபியாவின் நிலைப்பாடு சமீபத்தில் மாறியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மெக்காவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உடனான சந்திப்புக்குப் பிறகு, சூடானின் ‘நடைமுறை’ அதிபரும் ராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ஃபத்தாஹ் அல்-புர்ஹானுக்கு சவுதி அரேபியா ஆதரவளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஃப் மற்றும் அதன் கூட்டணிகள் சூடானில் ஒரு இணையான அரசாங்கத்தை அமைத்துள்ள நேரத்தில் சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த மாற்றம் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான பிளவை விரிவுபடுத்தியது.
சூடானின் ராணுவத்தால் வழிநடத்தப்படும் அரசாங்கம், ஆர்.எஸ்.எஃப்-க்கு ராணுவ உபகரணங்களை வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது குற்றம் சாட்டுகிறது.
பிராந்திய தலைமை மீதான விருப்பம்
பட மூலாதாரம், Getty Images
சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பிராந்திய தலைமைத்துவத்திற்காக ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இரு நாடுகளின் தலைவர்களும் ராஜ்ஜீய ரீதியாக ஒருவரையொருவர் முக்கியத்துவம் குறைந்தவர்களாகக் காட்டுவதற்காக, மற்றவரது முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துள்ளனர்.
சவுதி அரேபியா தனது போட்டியாளரான இரானுடனான உறவை மேம்படுத்தி, சீனாவின் மத்தியஸ்தத்துடன் ராஜ்ஜீய உறவுகளை மீட்டெடுக்க மார்ச் 2023 இல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து பிராந்திய தலைமைக்கான அதன் விருப்பத்தையும் அறியலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரானுடனான தனது ஈடுபாட்டை அதிகரித்தது. மேலும், டிசம்பர் 2021 இல் அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெஹ்ரானுக்கு ஒரு அரிதான பயணத்தை மேற்கொண்டார்.
சவுதி-இரான் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது ‘அமைதிக்கு முன்னுரிமை கொள்கையின்’ (Peace First Policy) கீழ் வரவேற்றது.
இதற்கிடையில், இரானுடனான ஒப்பந்தம் சவுதி அரேபியாவின் தலைமைக்கான விருப்பத்தை வலுப்படுத்தினாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிராந்திய அரசியலில் ஒரு முக்கியப் பங்கைப் பெற விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய மோதல்களின்போது, சவுதி அரேபியா தன்னை ஒரு முக்கியமான நாடாக நிலைநிறுத்தியுள்ளது. முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
மறுபுறம், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீராக்குவதற்காக அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் செய்யப்பட்ட ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ (Abraham Accord) முக்கியப் பங்கை வகித்ததுடன், செங்கடல் மற்றும் ஆப்பிரிக்காவில் தனது செல்வாக்கை அதிகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முயற்சி செய்து வருகிறது.
இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தும் அபிரகாம் ஒப்பந்தத்தில் முதலில் இணைந்த நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும்.
இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
இஸ்ரேலுடன் உறவுகளைச் சீராக்குவதற்கு முன், ஒரு பாலத்தீனிய அரசு நிறுவப்பட வேண்டும் என்று சவுதி அரேபியா வலியுறுத்தியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு