0
‘அருந்ததி’, ‘பாஹ்மதி’, ‘பாகுபலி’ ஆகிய படங்களில் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா ஷெட்டி கதையின் நாயகியாக நடித்திருக்கும் காடி ( Ghatti) படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காடி’ ( Ghatti) எனும் திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு, ரவீந்திர விஜய், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாகர் நாகவல்லி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கஞ்சா எனும் போதை செடிக்கு வளர்த்து விற்பனை செய்யும் பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு முதன் முதலாக பான் இந்திய திரைப்படத்தில் நடித்திருப்பதால்.. அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.