சென்னை: தமிழகத்தில் சாதிய கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டங்களை குறைந்தளவில் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளது போல தமிழகத்தில் சாதிய கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தருகிறது. சாதிய படுகொலைகளை கடுமையான சிறப்புச் சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் என்று அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
அத்தகைய சட்டங்கள் இன்றியமையாதது என்றாலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சிறப்பு சட்டங்கள் குறைந்த சதவீத அளவு கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை இருப்பதற்கான காரணங்களையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் சாதிய படுகொலைகளை நிகழ்த்துவோர் அஞ்சும் நிலைமை ஏற்படும். தூத்துக்குடி கவின் செல்வ கணேஷ், விருத்தாச்சலம் ஜெயசூர்யா போன்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களோடு சாதிய கொலை எனும் சமூக தீமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கண்டனம்: அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “வீரம் செறிந்த இலங்கை தமிழர் விடுதலைப் போராட்டத்தையும், இலங்கை தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கும் முயற்சி கடும் கண்டனத்துக்குரியதாகும்.
அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான கிங்டம், இலங்கை தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. எனவே தமிழகத்தில் கிங்டம் தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.