சென்னை: பிஹார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது என்று சந்தேகப் பார்வையை முன்வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடலின் வழியே சமூக நீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக மத்திய பாஜக அரசு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆனால், முக்கியமான வினாக்களுக்கு இன்னும் விடையில்லை. இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடிவுறும்? இவர்கள் இதனைத் தற்போது அறிவித்திருப்பது ஒன்றும் தற்செயலானது அல்ல. பிஹார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது இதனை அறிவித்திருக்கிறார்கள்.
நாம் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கோரியபோது, “மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள்” என நம் மீது குற்றம்சாட்டிய அதே பிரதமர், அவர் தொடர்ச்சியாகத் தூற்றிய அதே கோரிக்கைக்கு இப்போது பணிந்துவிட்டார். முறையாகத் திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள்நலத் திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூக நீதியை அடையவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்றியமையாததாகும். அநீதிக்குத் தீர்வு காணவேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டும்.
இன்றைய அறிவிப்பு தமிழக அரசும் திமுகவும் போராடிப் பெற்ற வெற்றி ஆகும். முதன்முதலாக நாம்தான் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அனைத்துத் தளங்களிலும் இதனை வலியுறுத்தினோம். ஒவ்வொரு முறை பிரதமரை நேரில் சந்திக்கும்போதும், பலமுறை கடிதங்கள் எழுதியும் இதனை மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.
மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கலாம் என சிலர் கோரியபோது கூட, நாம்தான் உறுதியாகச் சொன்னோம். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் பொறுப்பு. மத்திய அரசுதான் இதனை நாடு தழுவிய அளவில் மேற்கொள்ள முடியும், அதுதான் சென்சஸ் சட்டப்படி சட்டரீதியாகவும் செல்லும் என்றோம். நமது நிலைப்பாடு சரி என இன்று நிறுவப்பட்டுள்ளது. திராவிட மாடலின் வழியே சமூக நீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு சொல்வது என்ன? – சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, எதிர்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்க்க முடிவு செய்துள்ளது. நாடு மற்றும் சமூகத்தின் முழுமையான நலன்கள் மற்றும் மதிப்புகளுக்கு தற்போதைய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் மத்தியப் பட்டியலில் 69-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை நடத்தியிருந்தாலும், இந்த ஆய்வுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கத்தில் வேறுபடுகின்றன. சில கணக்கெடுப்புகள் முற்றிலும் அரசியல் கோணத்தில் நடத்தப்படுகின்றன. இது சமூகத்தில் சந்தேகங்களை உருவாக்குகிறது.
இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், நமது சமூகக் கட்டுமானம் அரசியல் நிர்ப்பந்தத்தின் கீழ் வராமல் இருப்பதை உறுதி செய்யவும், சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு தனி கணக்கெடுப்பாக நடத்துவதற்குப் பதிலாக பிரதானக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவடைவதை உறுதி செய்யும். மேலும், நாட்டின் முன்னேற்றம் தடையின்றி தொடரும். சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அது சமூகத்தின் எந்தப் பிரிவினரிடமும் பதற்றத்தை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடத்தப்பட்ட அனைத்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளிலும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 2010-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் விவாதிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பரிந்துரைத்தன. எனினும், முந்தைய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதிலாக சமூக – பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் கணக்கெடுப்பைத் தேர்ந்தெடுத்தது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.