• Thu. May 1st, 2025

24×7 Live News

Apdin News

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தலைவர்கள் வரவேற்பு: இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் கருத்து | political leaders welcome caste-wise census

Byadmin

May 1, 2025


சென்னை: மத்திய அமைச்சரவையின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப்படும் என்ற மத்திய அமைச்சரவைக் குழுவின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி. பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி மட்டும்தான் மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.

மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமான ஒன்றாகத்தான் இருக்கும் என்பதாலும், தமிழகத்தில் உள் இடஒதுக்கீடு வழங்க கூடுதல் புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும், தமிழக அரசு 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்கீழ் மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய அமைச்சரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். குறிப்பாக, மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை, வாய்ப்பு கிடைக்க வகுக்கும் திட்டங்களும், சட்டங்களும் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் முறையாக சென்றடையும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மக்கள் அனைவரின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்துவதற்கு அடிப்படையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நேரத்தில், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளி விவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி. இதேபோல பாமக தலைவர் அன்புமணியும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.



By admin