பட மூலாதாரம், Getty Images
பஹல்காமில் தாக்குதல் சம்பவம் மக்களால் அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவியது.
ஆனால், அடுத்து நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது
1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் 1951-ஆம் ஆண்டில் இருந்து பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சாதி அடிப்படையிலான அரசியல் வளர்ந்து வரும் சூழலில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளும் அதிகரித்தது.
சமூக – பொருளாதார அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அதன் தரவுகள் வெளியிடப்படவில்லை.
1931-ஆம் ஆண்டு, இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 52% ஆக இருந்தது. ஆனால் தற்போது இது அதிகரித்திருக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
சமீக காலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியத்துவம் பெறத் துவங்கியது. குறிப்பாக எதிர்க்கட்சியினரிடம் இருந்து இதற்கான வேண்டுகோள் அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் இது தொடர்பான தெளிவான நிலைப்பட்டை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக் கொண்டிருக்கவில்லை.
அக்கட்சியில் உள்ள சில தலைவர்கள் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று கூறி வந்தனர். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த கணக்கெடுப்பிற்கு ஆதரவு அளித்துள்ளது. பாஜகவும் இதற்கு ஆதரவான திசை நோக்கி சென்றிருக்கலாம்.
சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பை பதிவு செய்யும் சிலர் இதனால் சமூகத்தில் பிளவுகள் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். ஆனால் சமூக அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள், சரியான புள்ளிவிபரங்கள் கிடைக்காத வரை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சரியான கொள்கைகளை உருவாக்க இயலாது என்று வாதிடுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பல கேள்விகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. உதாரணத்திற்கு, இந்த அறிவிப்பை இப்போது அரசாங்கம் வெளியிட்டது ஏன்? பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டதா?
இதன் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? இது சாதி குழுக்களுக்கு இடையே யார் உயர்ந்தவர் என்பதற்கான போராட்டத்தை அதிகரிக்குமா?
வாக்கு வங்கிகளுக்காக இதனை தங்களுக்கு சாதகமாக அரசியல் கட்சிகள் மாற்றிக் கொள்ளுமா? துல்லியமான புள்ளி விபரங்கள் கிடைத்த பிறகு 50% இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பை நீக்க எழும் கோரிக்கைகள் அதிகரிக்குமா?
இந்த விஷயங்கள் குறித்து இந்த வாரம் பிபிசி ஹிந்தியின் ‘தி லென்ஸ்’ நிகழ்வில் விவாதித்தார் கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடகவியல் இயக்குநரான முகேஷ் ஷர்மா.
ஐக்கிய ஜனதா தளத்தின் முத்த தலைவர் கே.சி. தியாகி, தி ஹிந்துவின் மூத்த துணை ஆசிரியர் சோபனா நாயர், தலித் விவகாரங்கள் தொடர்பாக பணியாற்றும் பத்மஶ்ரீ சுக்தேவ் தோராட், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் நிதிஷா கால்கோ ஆகியோர் இந்த விவாத நிகழ்வில் பங்கேற்றனர்.
பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது ஏன்?
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சமயத்தில் இதை அறிவிக்கக் காரணம் என்ன?
இதற்கு பதில் அளித்த சோபனா, “சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது பாஜக. அதன் பிறகு, இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தது,” என்றார்.
“அது மட்டுமின்றி பிகார் தேர்தல் நெருங்கி வருகிறது. உத்தரப்பிரதேச தேர்தலுக்கு முன்பு ஏதேனும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றால் தற்போது மேற்கொள்ளவதுதான் சரியாக இருக்கும் என நினைத்திருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இதை அறிவித்திருப்பது ஒரு திசை திருப்பும் முயற்சி போன்று தோன்றலாம். ஆனால் இந்த திட்டம் அதைவிடவும் பெரியது என்கிறார் சோபனா.
பட மூலாதாரம், YouTube/RSS
சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம் பயனடைபவர்கள் யார்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்குமா அல்லது துருவப்படுத்துமா? பிகார் சாதிவாரிக் கணக்கெடுப்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?
இதற்கு பதில் அளித்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி. தியாகி, “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில், இந்த சமூகத்தில் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்றார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு உள்ளது. சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கியிருத்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு, 50% என்ற இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பை நீக்குதல், தனியார் மற்றும் நீதித்துறையில் இட ஒதுக்கீடு என்று பல அம்சங்களை உள்ளடக்கியது இது,” என்று கூறுகிறார்.
”சாதி பாகுபாட்டை அதிகரிக்கும் என்று கூறி சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். ஆனால் இந்த சமூகத்தில் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக பாகுபாடு நிலவி வருகிறது. ஏன் ஒரே சாதியில் இருந்து வந்தவர்கள் மட்டுமே குப்பையை அகற்ற வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்புகிறார் அவர்.
“சோகமான வரலாறு என்னவென்றால், இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த கேள்வி எழும் போதெல்லாம் அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆனால் இன்று இதனை தடுத்து நிறுத்தும் துணிச்சல் ஒரு கட்சிக்கும் இல்லை. பிகாரில் நிதீஷ் குமார் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தினார். அதில் பிற்படுத்தப்பட்டவர்கள் மத்தியில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரிவை உருவாக்கினார்” என்று விளக்கினார் தியாகி.
பட மூலாதாரம், Getty Images
சமூகத்தில் பிளவுகளை அதிகரிக்குமா?
சாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகத்தில் பிளவை ஏற்படுத்துமா?
இந்த கேள்விக்கு பதில் அளித்த பத்மஶ்ரீ சுக்தேவ் தோராட், “சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று கூறுவது தவறானது. இட ஒதுக்கீடு குறித்து அம்பேத்கர் பேசும் போதும் இதே கேள்வி எழுந்தது. ஏற்கனவே சாதி அடிப்படையிலான பிளவும் சீரற்ற தன்மையும் சமூகத்தில் நிலவுகிறது. ஆனால், இட ஒதுக்கீடு சம நிலையை உருவாக்குகிறது. சமநிலை சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்று விளக்கினார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு இட ஒதுக்கீடு குறித்து மட்டும் பேசவில்லை. இது பொருளாதாரம், கல்வி நிலை குறித்த தகவலையும் வழங்கும் என்கிறார் அவர்.
“இது எந்த சமூகத்தினர் எத்தகைய பின்னணியில் இருந்து வருகின்றனர் என்று கூறும். யாரிடம் நிலம் இல்லை? எந்த சமூகம் வர்த்தகத்தில் இல்லை? எந்த சமூகத்திடம் மூலதனம் இல்லை? எந்த சமூகத்தினர் உடல் உழைப்பைச் செலுத்துகிறார்கள், யார் அலுவலக பணிக்கு செல்கிறார்கள்? என்பதையெல்லாம் வெளிக்கொணரும். இட ஒதுக்கீடு என்பது மிகவும் சிறியது. கல்வி மற்றும் பொருளாதார ரீதியிலான அதிகாரமளித்தலுக்கு தேவையான கொள்கைகளை உருவாக்க இது உதவும்,” என்று கூறுகிறார் தோராட்.
பட மூலாதாரம், Getty Images
பெண்களுக்கு ஏற்படும் பயன்கள் என்ன?
பெண்களுக்கு எத்தகைய தாக்கத்தை இது ஏற்படுத்தும்? இதற்கு பதில் அளித்த நிதிஷா கால்கோ, “ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் பல விவகாரங்களில் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் திருநர் சமூகத்தின் நலன்களும் இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம். வளங்கள் மீது குறிப்பிட்ட சாதியினர், வர்க்கத்தினர் வைத்திருக்கும் பிடி இதன் மூலம் தளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பெண்களுக்கான இட ஒதுக்கீடோ அல்லது உள் ஒதுக்கீடோ, பாலினம் தொடர்பான பல்வேறு மாற்றங்களை இது ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். இதன் மூலம் பெண்களுக்கு தேவையானது கிடைக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
நீதி மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டிற்கு பாஜக ஒப்புதல் அளிக்குமா?
சாதிவாரிக் கணக்கெடுப்பு விபரங்கள் வெளியான பிறகு, தனியார் மற்றும் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டையும், 50%க்கும் மேல் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பாஜக உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா?
இதற்கு பதில் அளித்த தியாகி, “வாஜ்பேயின் பாஜகவுக்கும் இன்றைய பாஜகவுக்கும் இடையே நிறைய வித்யாசங்கள் உள்ளன,” என்றார்.
”சமீபத்தில் பிகாரில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற மோதி, பாஜக இரண்டு சாதியினர் அல்லது வர்க்கத்தினருக்கான கட்சி இல்லை என்றார். இது பல சாதியினர், பல வர்க்கத்தினரை உள்ளடக்கியது. இது பின்தங்கிய மற்றும் தலித்துகளுக்கான கட்சி. இந்த போக்கு வாஜ்பேய் காலத்திலோ, அத்வானி காலத்திலோ இல்லாதது. இது பாஜக தொண்டர்கள் மத்தியில் சிந்தனையைத் தூண்டியது. சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து பிகாரில் அறிவிக்கப்பட்ட போது, அதற்கு பிகார் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள பாஜகவினர் மெல்லிய குரலில் தங்கள் எதிர்க்குரலை பதிவு செய்தனர். இது மாற்றத்தை கண்ட சகாப்தம்,” என்றார் அவர்.
பட மூலாதாரம், ANI
தொகுதி மறுசீரமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இது தொகுதி மறுசீரமைப்பில் எத்தகைய தாக்கத்தைக் கொண்டிருக்கும்?
இதற்கு பதில் அளித்த சோபனா, ”தென்னிந்திய மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பு அறிவிப்பால் கவலை அடைந்துள்ளன என்பதால் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சிலர் நம்புகின்றனர். தெற்கில் தன்னுடைய கால் தடத்தை பதிக்க பாஜக முயற்சி செய்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இதற்காக கடுமையான பணிகளை மேற்கொண்டு வருகிறது அக்கட்சி. எனவே இந்த அறிவிப்பு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை அமைதியாக்கும்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் முதல்படி இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு. மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரிக் கணக்கெடுப்புடன் பாஜக இணைத்துவிட்டதால், காங்கிரஸ் பாஜகவை விமர்சனம் செய்ய இயலாது,” என்று கூறுகிறார்
பட மூலாதாரம், Getty Images
பின் தங்கிய வகுப்பினர் தங்களுக்கான பங்கை அதிகரிக்க கோரிக்கை வைப்பார்களா?
சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பிறகு, பின் தங்கிய வகுப்பினர் தங்களுக்கான பங்கை அதிகரிக்க கோரிக்கை வைப்பார்களா? அப்படியான சூழலில், அது பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
இதற்கு பதில் அளித்த நிதிஷா கால்கோ, “சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் கொள்கைகள் உருவாக்கப்படும் போது, அனுமானத்தின் அடிப்படையில் ஏன் கோரிக்கை எழுப்ப வேண்டும்?” என்று கேட்கிறார்.
“பல்கலைக்கழகங்களைப் பாருங்கள், பின்தங்கிய வகுப்பினர் கல்வி செயல்பாடுகளில் இடம் பெற்றுள்ளதை காண இயலும். பட்டியல் சாதியினர், பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சிறு சாதியினர் நாட்டின் அனைத்து வளங்களையும் கைப்பற்றிவிட்டனர். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தரவுகள் பொதுவெளியில் வெளியிடப்படுவதால், வளங்களில் அனைவருக்கும் நியாயமான பங்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கணக்கெடுப்பு முடிவுகள் சாதி அரசியலை ஊக்குவிக்குமா?
சாதிய அரசியலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள் குறித்து தியாகி பேசும் போது, “சாதி அடிப்படையிலான பாகுபாடு ஏற்கனவே நிலவி வருகிறது. 75 ஆண்டுகளாக பட்டியல் பிரிவினர் இட ஒதுக்கீட்டை பெற்று வருகின்றனர். ஆனால் அப்பிரிவில் இருந்து எத்தனை துணை வேந்தர்கள் வந்துள்ளனர்? ” என்றார்.
“1980-களில், வட இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அங்கே பாகுபாடு இல்லையா? அப்போது சமூகத்தில் பிளவுகள் ஏற்படவில்லையா? உண்மையில் பலம் வாய்ந்த மனிதர்களை உள்ளடக்கிய ஒரு வர்க்கம் அங்கே இருந்தது. அவர்கள்தான் ஊடகம் துவங்கி, ஆட்சி அதிகாரம் என அனைத்து மட்டத்திலும் இருந்தனர். அவர்கள்தான் இரண்டாயிரம் – மூவாயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர். நாம் அவர்களை பார்ப்பதை பழகிக்கொண்டோம்,” என்றார்.
“இது போன்ற சூழலில், ஒரு புதிய வர்க்கம் உருவாகும் என்றால் அது விநோதமாக இருக்கிறது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் யார்? மாற்றம் ஏதேனும் நிகழுமெனில் பதற்றம் நிலவும்,” என்று தியாகி குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இட ஒதுக்கீடு வரம்பு அதிகரிக்குமா?
இட ஒதுக்கீட்டிற்கான 50% வரம்பு நீக்கப்படுவதற்கான கோரிக்கைகள் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பிறகு அதிகரிக்குமா?
இதற்கு பதில் அளித்த சோபனா, “சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், 50% உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
இட ஒதுக்கீட்டின் மூலம் எந்த பிரிவினர் அதிகம் பயனடைந்தனர் என்பதற்கான தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கும். எனவே இது போன்ற சூழலில் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்,” என்று கூறுகிறார் சோபனா.
பட மூலாதாரம், @INCIndia
சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு பின்னால் உள்ள அச்சம் என்ன?
மத்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இருப்பினும் கூட சிலர் இது குறித்து அச்சம் அடைந்துள்ளனர். நிதிஷா இது குறித்து பேசும் போது, “ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளனர்.
குப்பையை அகற்றும் பணி, மலக்குழியில் இறங்கி செய்யும் பணிகளை ஏன் தலித் மக்கள் செய்ய வேண்டும்? ஏன் பிராமணர்கள் கோவிலில் மணி அடிக்க வேண்டும்? ஏன் பெண்களே சமைக்க வேண்டும்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து அச்சம் தெரிவிக்கும் மக்கள் குழப்பிக்கொள்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரோடு, முன்னேறிய பிரிவினரும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவாக உள்ளனர்,” என்று கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.