• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி! | Police inspector petition seeking to be approver in Sathankulam case dismissed

Byadmin

Aug 5, 2025


மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகன் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் இருவரையும் கொடூரமாக தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சிபிஐக்கு மாற்றியது. இதையடுத்து சிபிஐ வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர்கள் முருகன் , சாமதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து உட்பட 9 பேரை கைது செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாற அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முத்துக்குமரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதரின் மனுவுக்கு சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அப்போது விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் ஸ்ரீதர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவை ஏற்கக் கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

ஜெயராஜ் குடும்பத்தினர் சார்பில், சாத்தான்குளம் தந்தை வழக்கில் 105 சாட்சிகளில் 53 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான சாட்சியங்கள் ஸ்ரீதருக்கு எதிராகவே உள்ளன. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது இருவரிடமும் இருந்து சத்தம் வரவில்லை, இருவரையும் நன்றாக அடி என உதவி ஆய்வாளரிடம் ஸ்ரீதர் கூறியதாக சாட்சியம் கூறப்பட்டுள்ளது.

தந்தை, மகனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஸ்ரீதர் ரசித்ததாகவும் பெண் காவலர் கூறியுள்ளார். மற்ற காவலர்களால் என் உயிருக்கு ஆபத்து என ஏற்கெனவே ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அப்ரூவர் தேவை அல்ல. சம்பவத்தின் மூளையே ஸ்ரீதர் தான். இவரால் தான் இந்தச் சம்பவமே நிகழ்ந்தது. ஜெயராஜ், பெனிக்ஸ் தாக்கப்படுவதற்கு ஸ்ரீதரே முக்கிய காரணம். இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனால் ஸ்ரீதர் அப்ரூவராக மாற அனுமதி வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டது. இதையேற்று ஸ்ரீதரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.



By admin