பட மூலாதாரம், Getty Images
அமிலத்தன்மை (அசிடிட்டி) என்ற வார்த்தையை நாம் பலமுறை கேட்டிருப்போம். தற்போது அது நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
“அசிடிட்டிக்கான மாத்திரை சாப்பிட வேண்டும்”, “எதையாவது சாப்பிட்டால் அசிடிட்டி ஏற்படும்” என்பது போன்ற விஷயங்கள் நாம் பொதுவாகக் கேட்பதுதான்.
மாறிவரும் நமது வாழ்க்கை முறை, உட்கார்ந்துகொண்டே செய்யப்படும் வேலைகள், உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவை நாளுக்கு நாள் பல நோய்களை உருவாக்கி வருகின்றன. அவற்றில் ஒன்று அமிலத்தன்மை.
ஒரு முழு உணவை சாப்பிட்ட பிறகு குமட்டல், நெஞ்செரிச்சல் அல்லது புளிப்பு ஏப்பம் போன்றவை ஏற்படுவது தீவிர அறிகுறி அல்ல என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால் இந்த தொடர்ச்சியான நெஞ்செரிச்சல் ஒரு நாளைக்கு பல முறை அல்லது வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை ஏற்பட்டால், அது சாதாரண ‘அமிலத்தன்மை’ அல்ல. மாறாக கெர்ட் (GERD), அதாவது இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (Gastro Esophageal Reflux Disease).
தாமதமாக சாப்பிடுவது, துரித உணவு உண்பது, உட்கார்ந்த வேலைப் பழக்கம், எடை அதிகரிப்பு மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் கெர்ட் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுத்தன.
பலர் இதைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கெர்ட் உணவுக்குழாய் அழற்சி, புண்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பது போன்றவற்றுக்கு இது வழிவகுக்கும்.
எனவே, சாதாரண அமிலத்தன்மை மற்றும் கெர்ட் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைக் கண்டறிந்து, அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் புரிந்துகொள்வதும் சரியான சிகிச்சையைத் தொடங்குவதும் மிகவும் முக்கியம்.
இந்த கட்டுரையில், கெர்ட் (GERD) என்றால் என்ன, அது எதனால் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் என்ன என்பதை விரிவாக விவாதிப்போம்.
பட மூலாதாரம், Getty Images
நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ்
நெஞ்செரிச்சல் – மார்புப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் உணர்வு. குறிப்பாக வயிற்று அமிலம் மேலே உணவுக் குழாய் நோக்கி வரும் போது இது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
வயிற்று அமிலம் மேலே தொண்டைப் பகுதிக்கு வரும் நிலை அமில ரிஃப்ளக்ஸ் (acid reflux) எனப்படுகிறது. இது அவ்வப்போது ஏற்படுவது சாதாரணமானதே. ஆனால் இதேநிலை மீண்டும் மீண்டும் ஏற்பட்டால், அதனை கெர்ட் (GERD) என்று குறிப்பிடுகின்றனர்.
அமில ரிஃப்ளக்ஸின் மிகவும் பொதுவாக அறியப்படும் அறிகுறிகள் நெஞ்செரிச்சல் மற்றும் வாயில் புளிப்பு அல்லது கசப்பு சுவை தோன்றுதல். வயிற்று அமிலம் மேலே வரும்போது, தொண்டை அல்லது வாயில் எரிச்சல், குத்துவது போன்ற வலி அல்லது அசௌகரியமான உணர்வு ஏற்படலாம்.
சிலருக்கு அடிக்கடி விக்கல், இருமல், மூச்சுத்திணறல், வாய் துர்நாற்றம், வயிறு புடைப்பது போன்ற உணர்வு அல்லது குமட்டல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகள் பெரும்பாலும் சாப்பிட்ட பிறகு மோசமடைகின்றன. குறிப்பாக நீங்கள் படுக்கும்போது, தூங்கும் போது அல்லது சாப்பிட்டவுடன் குனிந்து வேலை செய்யும் போது மோசமாகின்றன. இந்த சூழ்நிலைகளில் வயிற்றில் அமிலம் உயர்வதே இதற்குக் காரணம்.
அமில ரிஃப்ளக்ஸுக்கு பல காரணங்கள் இருக்கலாம். காபி, காரமான அல்லது எண்ணெய் உணவுகள், சாக்லேட் மற்றும் மது போன்றவை இந்த சிக்கலை ஏற்படுத்தும்.
எடை அதிகரிப்பு, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் கர்ப்பம் ஆகியவை வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இது அமில ரிஃப்ளக்ஸ் அபாயத்தை அதிகரிக்கிறது. சில நேரங்களில் புரோஜெஸ்டிரோன் (progesterone) மற்றும் ஈஸ்ட்ரோஜன் (estrogen) போன்ற ஹார்மோன்களும் இதில் பங்கு வகிக்கின்றன.
சில மருந்துகள் (வீக்கத்தைக் குறைக்கும் ஐபுப்ரொஃபேன் போன்றவை) வயிற்றின் புறணியை எரிச்சலடையச் செய்து அமில வீக்கத்தை அதிகரிக்கும்.
வயிற்றின் மேல் பகுதி மார்புப் பகுதிக்குள் தள்ளப்படும் ஒரு வகை குடலிறக்கமும் (ஹையாட்டல் ஹெர்னியா) பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். வயிற்றுப் புண்கள் அல்லது வயிற்றுத் தொற்றுகள் (ஹெச். பைலோரி) அமில சமநிலையை சீர்குலைக்கும்.
பொதுவாக, வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம்.
ஆனால் அறிகுறிகள் தொடர்ச்சியாகவும் கடுமையானதாகவும் இருந்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். ஏனெனில் சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால், வயிற்று அமிலம் உணவுக்குழாய்க்கு சேதம் விளைவிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
கெர்ட்-க்கும் அமிலத்தன்மைக்கும் என்ன வித்தியாசம்?
அமிலத்தன்மை அடிக்கடி நீடித்தால், நீங்கள் நிச்சயமாக மருத்துவரை அணுக வேண்டும். ஆலோசனையின்படி மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது முக்கியம்.
எனவே, சில நேரங்களில் கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவ நிபுணரான டாக்டர் தத்தாத்ரேயா சலுங்கேவிடம் கெர்ட்-க்கும் அமிலத்தன்மைக்கும் உள்ள வித்தியாசம் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர், “கெர்ட் என்பது, வயிற்று அமிலம் மீண்டும் மீண்டும் உணவுக் குழாய் நோக்கி மேலே வரும் நீண்டகால நிலை. உணவுக் குழாயின் அடிப்பகுதியில் இருக்கும் லோயர் ஈசோபேஜியல் ஸ்பிங்க்டர் எனப்படும் வால்வு பலவீனமாகவோ அல்லது தளர்வாகவோ ஆகும்போது இந்த நிலை ஏற்படுகிறது.” என்றார்.
இந்த தொடர்ச்சியான அமில ரிஃப்ளக்ஸ் உணவுக்குழாயில் வீக்கம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம், மார்பு அசௌகரியம், இருமல் மற்றும் குரல் மாற்றங்கள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
“அதிக உணவை சாப்பிட்ட பிறகு எப்போதாவது நெஞ்செரிச்சல் ஏற்படுவது பொதுவானது. பொதுவாக பெரும் தொந்தரவாக இருக்காது. ஆனால், கெர்ட்-ல் இந்த அறிகுறிகள் தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு இரண்டு முறையோ கடுமையான வடிவத்தில் ஏற்படும். அவை தூக்கத்தையும் தினசரி செயல்பாட்டையும் பாதிக்கலாம்.”
“அதிகமாக சாப்பிடுதல் அல்லது கனமான, காரமான உணவுகள் காரணமாக ஏற்படும் அமிலத்தன்மை எளிய ஆன்ட் ஆசிட் (antacid) மருந்துகளால் குறைகிறது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏற்படாது” என்று டாக்டர் சலுங்கே கூறுகிறார். “அதேசமயம் கெர்ட்-க்கான அறிகுறிகள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை ஏற்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.
இந்த அறிகுறிகள் பெரும்பாலும் இரவில் ஏற்படும். அவை தூக்கத்தை சீர்குலைக்கலாம், விழுங்குவதில் சிரமம், வேலை செய்யும் திறன் குறைதல் அல்லது பசியின்மை போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.
“எடை குறைதல், அடிக்கடி வாந்தி, கறுப்பு மலம் அல்லது தொடர் மார்பு வலி போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நோய்க்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒரு முக்கிய காரணி என்று கூறுகிறார் நவி மும்பையில் உள்ள ஆரோக்யதாம் நர்சிங் ஹோம் டாக்டர் உஸ்மான் மாப்கர்.
“நவீன வாழ்க்கை முறை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் கெர்ட் பாதிப்பு அதிகரித்து வருகிறது.” என்கிறார் அவர்.
“எண்ணெய், காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பது போன்றவை இதற்குக் காரணம். புகைபிடித்தல், மதுபானம் மற்றும் சில வலி நிவாரணிகளும் இதை மோசமாக்குகிறது,” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை தேவையா?
“சிலருக்கு எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் தெரியாவிட்டாலும் கூட, கெர்ட் காரணமாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்” என்றார் டாக்டர் உஸ்மான் மாப்கார்.
“அவர்களுக்கு உணவுக் குழாயுடன் தொடர்புடைய பிரச்னைகள் உருவாகலாம். அதனால் உணவுக் குழாய் சுருங்குதல், பாரெட்டின் ஈசோபேகஸ் (Barrett’s esophagus) அல்லது புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட அதிகரிக்கலாம்.”
இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை தேவையா என்று டாக்டர் தத்தாத்ரேயா சலுங்கேவிடம் கேட்டோம்.
“மருந்துகளால் போதிய பயன் பெறாதவர்கள், அல்லது தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்ய முடியாதவர்கள் மற்றும் நீண்டகாலமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்க விரும்புவோருக்கு அறுவை சிகிச்சை ஒரு தேர்வாக இருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “எண்டோஸ்கோபி அல்லது பிஹெச் (pH) கண்காணிப்பு போன்ற சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது,” என்றும் தெரிவித்தார்.
உணவுமுறை, சிகிச்சை, மருந்து, உடற்பயிற்சி போன்ற உங்கள் வாழ்க்கை முறையில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினால், மருத்துவர் மற்றும் தகுதி வாய்ந்த பயிற்சியாளரின் உதவியை நாடுவது மிகவும் முக்கியம்.
உங்கள் உடல் மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வாழ்க்கை முறையை மாற்றுவது சிறந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு