சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரவீந்திர ஜடேஜா 49வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்ட உதவினார்.
துபை மைதானத்தில் நியூசிலாந்தின் 252 ரன்கள் என்ற இலக்கைத் சேஸ் செய்வது எளிதான காரியமல்ல. ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தியது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்ததால், சில போட்டிகளை துபைக்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடியது. இந்தியா இறுதிப் போட்டியை எட்டியதால், இறுதிப் போட்டியும் துபைக்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் மக்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூறியது என்ன?
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட துபை புறப்படுவதற்கு முன்பு, முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், “அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
ஆனால் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்கவோ அல்லது தொடரில் தன்னை தக்க வைக்கவோ முடியவில்லை. போட்டியை நடத்தும் நாடாக இருந்தபோதிலும், பாகிஸ்தானால் சொந்த மண்ணில் இறுதிப் போட்டியை நடத்த முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, பாகிஸ்தானில் இருந்து பல வகையான கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் வெற்றி குறித்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஷ்டாக், சிட்டி 42 உடன் என்ற பாகிஸ்தான் செய்தி சேனல் நிகழ்ச்சியில் பேசும் போது, “இந்த வெற்றிக்கான இந்திய அணியின் பெருமிதத்தை நான் பறிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி.யிடம் நியாயமான முறையில் முடிவுகள் எடுக்கப்பட்டதா என்று உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கேட்க வேண்டும்? எதிர்காலத்தில் கிரிக்கெட் இந்த வழியில் தொடருமா? இதை விட நிலைமை மோசமாகுமா? இப்போது சாம்பியன்ஸ் டிராபி முடிந்துவிட்டது. ஆனால் ஐ.சி.சி.யிடம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சக்லைனின் கேள்விகள்
“எது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும் அதைப் பற்றிப் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த கிரிக்கெட் வேறு திசையில் பயணிக்கும் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் ஆசிய கோப்பை உள்ளது. இப்போது ஆசிய கோப்பையை நடத்துவது எப்படி இருக்கும்? விளையாட்டு உணர்வு மறைந்துவிடும், கிரிக்கெட் மீண்டும் ஒரு அதிகார விளையாட்டாக மாறும். கேன் வில்லியம்சன் வெளியே அமர்ந்திருந்தார். இவ்வளவு பயணம் செய்ய வேண்டியிருந்ததால், அந்த அணியால் சரியாகத் தயாராக முடியவில்லை.” என்று சக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார்.
இந்திய அணி எங்கும் பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் துபையில் உள்ள ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளையும் விளையாடும் சாதகமான சூழலை பெற்றது என்றும் சக்லைன் முஷ்டாக் கூறுகிறார். இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லாததால், இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தானில் இருந்து மற்ற அணிகள் துபைக்கு செல்ல வேண்டியிருந்தது.
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக், “சில விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தன என்பது உண்மைதான். ஆனால், அனைத்து அணிகளையும் தோற்கடிக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது பாராட்டத்தக்கது. ரோஹித் சிறப்பாக விளையாடியதுடன், அணியையும் சிறப்பாக வழிநடத்தினார்” என்றார்.
“சக்லைன் சொல்வது உண்மைதான். முன்பு பாகிஸ்தான் மட்டுமே இந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது, ஆனால் இந்த முறை மற்ற நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர். இப்போது அனைவரும் இதனைக் கவனித்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவைப் பாராட்ட வேண்டும். உங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே கூட நீங்கள் தொடரை இழப்பது பல முறை நடக்கும். வெற்றி பெற நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியாக வேண்டும்.” என்றார் இன்சமாம்.
“இறுதிப்போட்டியில் நியூசிலாந்து 280 ரன்கள் எடுத்திருந்தால், இந்தியாவுக்கு சவால் அதிகரித்திருக்கும். 250 ரன்களை துரத்திய இந்தியா 49 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. நியூசிலாந்து 280 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்திருந்தால் இந்தியாவுக்கு எளிதாக இருந்திருக்காது” என்று இன்சமாம்-உல்-ஹக் கூறினார்.
”இந்தியாவின் 2 சுழற்பந்து வீச்சாளர்களும் அற்புதமாக செயல்பட்டனர். இந்தியாவின் வெற்றியில் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக பங்களித்தனர். நியூசிலாந்தை 250 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தி இருக்காவிட்டால், இந்திய பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தம் அதிகரித்திருக்கும். வெற்றிக்கான பெருமை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆட்டம் முழுவதும் நியூசிலாந்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
குல்தீப்பின் ஆச்சரியம்
“சக்லைன் முன்வைக்கும் கேள்வியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நன்றாக விளையாடினால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள், ஆனால் மற்றவர்கள் தங்களை நியாயமாக நடத்தவில்லை என்று நினைக்கக் கூடாது.” என்றார் இன்சமாம்.
“வில்லியம்சனை ஆட்டமிழக்கச் செய்து குல்தீப் யாதவ் நியூசிலாந்துக்கு ஒரு பெரிய அடி கொடுத்தார். அதற்கு முன்பு, ரச்சின் ரவீந்திராவின் ஆட்டமிழப்பு நியூசிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தது. ஜடேஜா வழக்கமாக ஒன்றரை நிமிடங்களில் ஓவரை முடிப்பார். இந்த முறையும் அவர் தனது ஓவர்களை விரைவாக முடித்தார். நியூசிலாந்து பேட்டர்களால் ஸ்ட்ரைக்கை கூட ரொட்டேட் செய்ய முடியவில்லை. இந்திய பேட்டர்கள் சிறப்பாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். நியூசிலாந்து வீரர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.” என்பது அவரது கருத்து.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பிரபலமான கிரிக்கெட் நிகழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் சென்ட்ரலில் பேசும் போது, “தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி எங்கு விளையாடியிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கும். துபையில் அனைத்து போட்டிகளிலும் விளையாடியதால் இந்தியாவுக்கு சாதகமான சூழல் கிடைத்ததாக மக்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் பாகிஸ்தானில் விளையாடியிருந்தாலும் இந்திய அணி வென்றிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையையும் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் வென்றது. தற்போது ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
அதே நிகழ்ச்சியில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனுஸ் பேசுகையில், “குல்தீப் அற்புதங்களைச் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ரோஹித் 20 ஓவர்களுக்குப் பிறகு குல்தீப்பைக் கொண்டு வருவார் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அவர் முன்னதாகவே அவரைக் கொண்டு வந்து எங்களை ஆச்சரியப்படுத்தினார். நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் குல்தீப்பைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. குல்தீப்பை துரிதமாக உள்ளே கொண்டு வந்தது ஒரு நல்ல உத்தி என்று நான் நினைக்கிறேன். குல்தீப் வந்தவுடன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வில்லியம்சனை கட்டுப்படுத்துவது எளிதல்ல.” என்றார்.
ரோஹித் சர்மாவைப் பாராட்டிய வாசிம் அக்ரம், “கடந்த 4 ஆண்டுகளில் பவர் பிளேயில் ரோஹித் 70 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்றும் கூட, ரோஹித் எந்த கூடுதல் முயற்சியும் இல்லாமல் மிகவும் இயல்பாக பேட்டிங் செய்தார். அவரது டைமிங் அற்புதமானது. அவர் வலுவாக சிக்ஸர்களை அடிப்பதில்லை. மாறாக சரியான டைமிங்கில் பந்துகளை பவுண்டரி எல்லைக்கு வெளியே அனுப்பினார்” என்று கூறினார்.
ஷோயப் அக்தர் கூறியது என்ன?
“இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடுவதால் சாதகமான சூழல் கிடைத்தது என்று நீங்கள் சொன்னாலும், வெற்றி பெற நீங்கள் நன்றாக விளையாட வேண்டும். எந்தப் போட்டியிலும் தோல்வியடையாமல் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி இப்போது வெகுவாக முன்னேறியுள்ளது. 4 அல்லது 5 சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. குல்தீப் யாதவ் அற்புதங்களைச் செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். ரச்சின் ரவீந்திரா மற்றும் வில்லியம்சனை வெளியேற்றி குல்தீப் நியூசிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தார். இதன் பிறகு, நியூசிலாந்தால் நிமிர முடியவில்லை. குல்தீப்பின் கூகிள் பந்துவீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது. ரோஹித் சர்மா குல்தீப்பை நன்றாகப் பயன்படுத்தினார்.” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர், “பாகிஸ்தான்தான் தொடரை நடத்தியது எனும் போது, இறுதிப் போட்டியில் கோப்பையை வழங்கும் நிகழ்வில் பாகிஸ்தான் பிரதிநிதி ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது, ஆனால் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி யாரும் பரிசளிப்பு விழா மேடையில் இல்லை. இது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் போது நடந்துள்ளது. கோப்பையை வழங்க யாரும் ஏன் வரவில்லை என்று எனக்குப் புரியவில்லை? பாகிஸ்தான் பிரதிநிதிகள் அங்கே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று அக்தர் தெரிவித்துள்ளார்.