பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவின் வருகை குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, இதற்கான கோப்பை சுற்றுப் பயணமும் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) கோப்பை சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் நகருக்குக் கொண்டு செல்வதாக அறிவித்தது, ஆனால் ஐசிசி அதற்கு அனுமதி வழங்கவில்லை.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தகவலை பிசிபிக்கு ஐசிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பையைப் போன்று ஹைபிரிட் வடிவில், அதாவது சில போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவுடனான போட்டிகள் மட்டும் வேறு சில நாடுகளிலும் நடத்தப்படும் வகையில், சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளை நடத்த பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என்று அங்குள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
முன்பு ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. ஆகவே இலங்கையில் இந்தியாவின் போட்டிகளை ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முறை அத்தகைய அணுகுமுறைக்கு பிசிபி தயாராக இல்லை என்று பாகிஸ்தானில் கூறப்படுகிறது. அப்படியிருக்கும் சூழலில் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூறுவது என்ன?
பிடிஐ செய்தி முகமை, ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிட்ட செய்தி ஒன்றில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், “இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாது என்று ஐசிசியிடம் பிசிசிஐ கூறியதாக,” குறிப்பிட்டிருந்தது.
இந்த வாரம், பிசிசிஐ துணைத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் சுக்லா, “அரசு எங்களிடம் என்ன கூறுகிறதோ, எந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கிறதோ அதை நாங்கள் ஏற்று நடப்போம். அதையேதான் நாங்கள் ஐசிசி-யிடமும் கூறினோம்,” என்று தெரிவித்தார்.
நவம்பர் 8ஆம் தேதியன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஹ்சின் நக்வி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்பதாகப் பல செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்று ஏதாவது நடப்பதாக இருந்தாலோ அல்லது யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தாலோ, முறைப்படி எழுத்துப்பூர்வமாக அதை எங்களுக்குத் தெரிவிக்கவும்,” என்று கூறியிருந்தார்.
கடைசியாக இந்திய அணி 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு சென்றது. நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று இந்தியா முடிவு செய்திருந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு குறித்துப் பல கவலைகளை எழுப்பியது.
போட்டிகளுக்கு வெறும் 100 நாட்கள்கூட இல்லாத நிலையில் அனைத்துப் போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடக்குமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பத் தயாராக இல்லை என்று பிசிசிஐ மறுத்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவுக்குப் பிறகு போட்டிகளில் சில பாகிஸ்தானிலும், சில வெளிநாடுகளிலும் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இறுதியாக சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் நடத்தப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக, லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
கடந்த 2021ஆம் ஆண்டு அடுத்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை, 2025ம் ஆண்டில் பாகிஸ்தானில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்தது.
முன்னாள் பிசிபி தலைவர் கூறுவது என்ன?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி இதுகுறித்துக் கூறுகையில், ஐசிசிக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, முதலில் இந்தியா பாகிஸ்தானுக்கு வர வேண்டும், இரண்டாவது வாய்ப்பு ஹைப்ரிட் வடிவில் விளையாட வேண்டும். இவையிரண்டுமே ஏற்கப்படவில்லை என்றால், மூன்றாவதாக முழு தொடரும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும்.
பாகிஸ்தானின் தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியா இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அவர்கள் வரப் போவதில்லை. கபடி அணியையும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியையும் அனுப்பவில்லை. முன்பு டேவிஸ் கோப்பைக்காக டென்னிஸ் வீரர்கள் விளையாட வருவார்கள். இப்போது அவர்களும்கூட வருவதில்லை,” என்றார்.
நஜாம் சேத்தி, ”நம் முன் இருக்கும் இரண்டு வாய்ப்புகள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டுள்ளன, அத்தகைய சூழ்நிலையில் மூன்றாவது வாய்ப்பான, போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே கொண்டு செல்வது மட்டுமே மீதமுள்ளது. ஆனால் ஒருவேளை பாகிஸ்தான் மீண்டும் போட்டியைப் புறக்கணிக்க முடிவு செய்யலாம்” என்றார்.
பாகிஸ்தானுக்கு இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்கிறார் அவர். “பாகிஸ்தான் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், உள்நாட்டில் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் தலைகுனிய வேண்டியிருந்ததாகப் பேசப்படும்” எனக் கருதுகிறார் நஜாம் சேத்தி.
ஐசிசி எப்போதும் பிசிசிஐ பக்கமே இருக்கும் என்கிறார் அவர். அதேவேளையில், “இந்தப் போட்டியை இலங்கை அல்லது துபாய்க்கு மாற்றி, அதில் பாகிஸ்தான் விளையாடாவிட்டால், ஐசிசிக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் நஷ்டம் ஏற்படும். போட்டி வருவாயில் பெரும் பகுதி இந்தியாவுக்கும், சிறிய பகுதி பாகிஸ்தானுக்கும் செல்கிறது,” என்றார்.
இருப்பினும், இது இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பாதிக்காது எனக் கூறும் அவர், பிசிசிஐ பணக்கார வாரியம் என்பதே அதற்குக் காரணம் எனக் குறிப்பிடுகிறார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலை அப்படியல்ல, அதை அதிகம் பாதிக்கும் என்றும், வெளிநாட்டிலும் விளையாடாவிட்டால், அது பண இழப்பை ஏற்படுத்தும் எனவும் அது பிரச்னையாக மாறும் எனவும் கூறுகிறார் நஜாம் சேத்தி.
அவரது கூற்றுப்படி, ஒருவேளை பாகிஸ்தான் அத்தகைய முடிவை எடுத்து, தன்னை ஐசிசியில் இருந்து ஒதுக்கிக் கொண்டால், ஏற்கெனவே குறைவாக இருக்கும் அதன் வருமானம் மேலும் பெருமளவு குறையும்.
சாம்பியன்ஸ் கோப்பை முஸாஃபராபாத் நகருக்கு எடுத்துச் செல்லப்படாதது ஏன்?
வழக்கமாக சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி. போட்டி நடைபெறும் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் அந்தக் கோப்பையை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது வழக்கம்.
இஸ்லமாபாத்தில் சனிக்கிழமை (நவம்பர் 16) அன்று ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையின் சுற்றுப் பயணம் ஆரம்பமானது. இந்தக் கோப்பை வரும் நாட்களில் பாகிஸ்தானில் 8 இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் இந்தக் கோப்பையின் சுற்றுப்பயணம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் முசாஃபராபாத்திலும் கோப்பை வைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்தப் பட்டியலில் இருந்து அந்நகரம் நீக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த நகரம் அமைந்துள்ளதால், இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைக்குள்ளான பகுதியாக அது அறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது என்ன?
நவம்பர் 14ஆம் தேதியன்று தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தக் கோப்பையைப் பல்வேறு அழகான இடங்களுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியிருந்தது.
கார்து மற்றும் ஹன்சா பள்ளத்தாக்கு (கில்ஜித் பலுசிஸ்தான்), முரி (ராவல்பிண்டி), முசாஃபராபாத் நகரங்களின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
பாகிஸ்தானின் இந்தக் கோப்பை சுற்றுப்பயண திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) எதிர்ப்பு தெரிவித்தது. பி.சி.சி.ஐ தலைவரான ஜெய் ஷா வெள்ளிக்கிழமை அன்று ஐ.சி.சி. அதிகாரிகளுடன் பேசியதாகவும், பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக, பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ முகமையிடம் பேசியபோது, “ஜெய் ஷா ஐசிசி அதிகாரிகளை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தக் கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்வது தொடர்பான பாகிஸ்தானின் முடிவை விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டார்,” என்று கூறியுள்ளார்.
“பிசிசிஐ செயலாளர், கோப்பையை இஸ்லமாத்திற்கு கொண்டு செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், ஆனால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கோப்பை செல்லக்கூடாது என்றும் கூறியதாக” அந்த அதிகாரி பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
“இது தங்களின் தனிப்பட்ட முடிவல்ல. ஏற்கெனவே ஐசிசியுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவுதான்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை கூறியதாக பிடிஐ மற்றொரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக ஐசிசி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து எழும் கேள்விகள்
சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், கோப்பையின் சுற்றுப் பயணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.
இந்தக் கோப்பை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்குச் செல்லும். அதற்கு முன்பாக, சாம்பியன்ஸ் கோப்பை சுற்றுப்பயணம் இஸ்லாமாபாத்தில் இருந்து நவம்பர் 16 அன்று தொடங்கியது.
இந்தக் கோப்பையை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீருக்கு எடுத்துச் செல்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டபோது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
கோப்பை சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரை சேர்ப்பது குறித்து நஜாம் சேத்தி கூறுகையில், “பிசிபி சொந்தமாக இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில்லை. அதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் கிடைத்திருக்க வேண்டும். முன்னதாக, எந்தக் கோப்பைகள் வந்தாலும், அவை மூன்று அல்லது நான்கு பாகிஸ்தான் நகரங்களுக்கே எடுத்துச் செல்லப்படும்,” என்றார்.
அதோடு, கில்கிட், பால்டிஸ்தான் போன்ற பகுதிகள் கோப்பை சுற்றுப் பயணத்தில் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகக் கூறுகிறார் நஜாம் சேத்தி. இது நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் இது பிசிபியின் முடிவு அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த முடிவை எடுக்கும்போது, இப்படி ஒரு எதிர்வினை வரும் என்பதும் பிசிபிக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.
மேலும், “பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதைச் சாத்தியப்படுத்த தூதரக பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவைச் சமாளிக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிலிருந்து பின்வாங்கியுள்ளது. இப்போது இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும்,” என்றார் நஜாம் சேத்தி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு