பட மூலாதாரம், Getty Images
“ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இல்லாதது, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடாதது போல் இருக்கும்.”
இதைக் கூறியவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மின்சன்தான்.
பும்ரா ஏற்படுத்திய தாக்கத்தின் ஆழத்தை, போட்டியின் சுவாரஸ்யத்தை இவ்வளவு அழகாக, எளிமையாகக் கூற முடியாது. 9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான உத்தேச இந்திய அணியில் தொடக்கத்தில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருந்தாலும், இறுதி செய்யப்பட்டு நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடமில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் தோளில் தூக்கிச் சுமந்த பும்ரா, அதிக பணிப்பளு காரணமாக கடைசி டெஸ்டில் முதுகு வலியால் அவதிப்பட்டார். ஏற்கெனவே பும்ராவுக்கு முதுகுவலிப் பிரச்னை இருந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இதனால் 2022 செப்டம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை 11 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஒதுங்கி ஓய்வில் இருந்தார். ஆஸ்திரேலியா தொடருக்குப் பின் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை.
இப்போது பும்ராவுக்கு உடல்நிலை தேறிவிட்டாலும், அணியின் எதிர்காலம் கருதி பிசிசிஐ அவரை சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தேர்வு செய்யவில்லை.
குறுகிய கால இலக்குகளை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளின் நீண்டகால தாக்கத்தை பிசிசிஐ கவனத்தில் கொண்டு பும்ராவை சேர்க்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்தக் கூடியவரான பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடாததால் அவரின் சுமை அனைத்தும் முகமது ஷமி மீது விழுந்துள்ளது.
இந்திய அணியில் ஷமி தவிர்த்து அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ஹர்திக் பாண்டியா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், இந்த 3 பந்துவீச்சாளர்களும் ஷமிக்கு ஆதரவாக இருக்க முடியுமே தவிர பிரதானமாகச் செயல்பட முடியாது. ஏனென்றால், சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவம் இந்த 3 வீரர்களுக்குமே இல்லை.
சாம்பியன்ஸ் கோப்பை என்பது ஏறக்குறைய மினி உலகக்கோப்பை போன்றதுதான். இதில் பந்துவீச்சுக்கு தலைமை வகிக்கும் பந்துவீச்சாளர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்துவது, எதிரணி ஸ்கோரை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசுவது, புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது, டெத் ஓவர்களில் சக பந்துவீச்சாளர்களை வழிநடத்துவது, ஆலோசனைகள் தருவது என முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டும்.
ஜஸ்பிரித் பும்ரா இருந்திருந்தால், இந்தப் பணிகளை அவர் செய்திருப்பார், அவர் இல்லாத நிலையில் ஷமி அந்த இடத்தை நிரப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பும்ரா ஏன் தேவை?
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் பந்துவீச்சில் முக்கிய அச்சாணியாகவும், துருப்புச் சீட்டாகவும் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார்.
சிறந்த உதாரணத்தைக் கூற வேண்டுமென்றால், டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் பும்ராவுக்கு நிகர் பும்ராதான்.
பும்ரா இடத்தில் வேறு எந்த வேகப்பந்துவீச்சாளர் இருந்தாலும் இதைச் செய்திருக்க முடியாது என்பதை ரசிகர்கள் அறிவர். இந்திய அணியின் பந்துவீச்சுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும்.
சக பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் வராமல் எதிரணியின் எந்த பேட்டரை எப்படி வெளியேற்றுவது, புதிய பந்தில் விக்கெட்டை வீழ்த்தி எதிரணியினரைச் சுற்றலில் விடுவது என பும்ராவின் பணிகள் மகத்தானது.
இந்திய அணி ஏ பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுடன் மோதவிருக்கிறது. இதில் வங்கதேசம் அணி திடீரென அதிர்ச்சியளிக்கும் வகையில் விளையாடினாலும், பும்ரா இல்லாமல் இருந்தால்கூட இந்திய அணி சமாளித்து வெற்றி பெற்றுவிடும்.
ஆனால், பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
பட மூலாதாரம், Getty Images
இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் பும்ரா அதிகமான போட்டிகளை ஆடாவிட்டாலும், அவரின் பந்துவீச்சு இந்த அணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம்.
- பாகிஸ்தானுக்கு எதிராக 8 ஒருநாள் போட்டிகளில் 51 ஓவர்கள் வீசிய பும்ரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.5 எக்கானமி வைத்துள்ளார்.
- அதேபோல நியூசிலாந்துக்கு எதிராக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பும்ரா 121 ஓவர்களை வீசியுள்ளார், 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.8 எக்கானமி வைத்துள்ளார்.
- வங்கதேச அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 47 ஓவர்கள் வீசிய பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 4.4 எக்கானமி ரேட் வைத்துள்ளார்.
இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் குறைவான போட்டிகளில் பும்ரா பந்து வீசியிருந்தாலும், அவர் வைத்திருக்கும் எக்கானமி ரேட் அற்புதமானது. ஒருநாள் போட்டிகளில் எந்தப் பந்துவீச்சாளரும் இதுபோலக் குறைவான எக்கானமி ரேட் வைத்திருப்பது கடினம்.
குறிப்பாக, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்கள் போட்டிகளில் நடுப்பகுதி ஓவர்கள் மிகவும் முக்கியமானது. ஓர் அணியின் ஸ்கோர் மேலே உயர்வதும், கட்டுப்படுத்தப்படுவதும் இந்த நடுப்பகுதி ஓவர்களில்தான் தீர்மானிக்கப்படும்.
இதுபோன்ற முக்கியமான கட்டத்தில் பந்துவீசுவதற்கு பும்ரா எனும் பிரம்மாஸ்திரம் இந்திய அணியில் இருக்க வேண்டும். இப்போது பும்ரா இல்லாததால் நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் அவர் இடத்தை நிரப்ப சரியான வீரரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
இந்திய அணிக்கு எது முக்கியம்?
பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததைப் போல் உலக சாம்பியன்ஸ் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. அவரோடு, ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க் உள்பட 3 முக்கியப் பந்துவீச்சாளர்களே அந்த அணியில் விளையாடவில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு உலக அரங்கில் வெற்றியை தேடித் தந்ததே இந்த மூன்று பந்துவீச்சாளர்கள்தான். இவர்கள் இல்லாத நிலையில் ஸ்மித் தலைமையில் அனுபவமில்லாத இளம் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு அந்த அணி களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தேர்வு உணர்த்துவது நம்பிக்கையை மட்டும்தான்.
அதேபோல பும்ரா இல்லாத சூழலிலும் ஷமி தலைமையில் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இந்திய அணி அணுக வேண்டும்.
இடதுகை வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், அனுபவ வீரர் ஷமி புதிய பந்தில் பந்து வீசினாலும், நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சாளர்களைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியா, ஹர்சித் ராணா ஆகிய 2 வேகப்பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.
இவர்கள்தான் நடுப்பகுதி ஓவர்களில் ஆட்டத்தை கட்டுப்படுத்தக் கூடியவர்கள். பும்ரா இல்லாத இடத்தை நிரப்புவது கடினம் என்ற போதிலும், நம்பிக்கையுடன் அனுகுவது அவசியம்.
ஐந்து சுழற்பந்துவீச்சாளர்கள்
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 5 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.
துபை மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றதுதான் என்றாலும், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரேயொரு முழுநேர சுழற்பந்துவீச்சாளருடன்தான் களமிறங்குகிறது.
இதில் பும்ராவுக்கு பதிலாக கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மீது கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.
அதனால்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பளித்து வருணை பரிசோதித்துப் பார்த்தனர். டி20 போட்டிகளில் 4 ஓவர்கள் வீசி அனுபவப்பட்ட வருண், எவ்வாறு 10 ஓவர்களை வீசுவார் என்பது ஒரு சில போட்டிகளை வைத்து முடிவு செய்வது கடினம்தான்.
ஆனாலும், வருணின் புதிரான, மாயாஜால பந்துவீச்சு துபை போன்ற சுழற்பந்துவீச்சு ஆடுகளத்தில் நன்றாக எடுபடும் என நம்புகிறார்கள்.
நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதில் சினாமென் அல்லது மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் பங்கு முக்கியமானது.
இதில் குல்தீப் யாதவ் பந்துவீச்சு பெரியளவு பலன் அளிக்கும் என்றாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப்புக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை.
கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப் பந்துவீச்சு எந்த அளவுக்கு முக்கியமாக இருந்தது என்பதைப் புரிந்து அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
ஆதலால் பும்ரா எனும் கருப்புக் குதிரை இல்லாத நிலையில் வெற்றியைப் பெற இந்திய அணி சற்று கடினமாகப் போராட வேண்டியிருக்கும்.
வெற்றி வாய்ப்பு குறையுமா?
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியில் பும்ரா இல்லாதது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐசிசிக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணியில் பும்ரா இல்லாததால் இந்திய அணி சாம்பியன் வெல்லும் வாய்ப்பு 30 முத்ல 35 சதவீதம் பாதிக்கும் என்பது நிதர்சனம்.
பும்ரா ஒருவேளை விளையாடும் உடல் தகுதியைப் பெற்றால் நிச்சயம் டெத் ஓவர்கள் வேறு மாதிரியாக இருக்கும், முக்கியமான தருணத்தில் பும்ராவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, பும்ராவின் உடல்நிலை தேறினாலும் இந்த நேரத்தில் அவரை அணிக்குள் சேர்ப்பது மிக ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்தார்
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “பும்ரா இந்திய அணியில் இல்லாத நிலையில் கவனத்தை ஷமி மீது செலுத்த வேண்டும்.
ஆஸ்திரேலிய பயணத்தில் பும்ராவுக்கு பக்கபலமாக ஷமி போன்ற பந்துவீச்சாளர் இல்லாததுதான் அவர் உடல்நலக்குறைவு ஏற்படக் காரணமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு