பட மூலாதாரம், X/@ICC
- எழுதியவர், போத்தி ராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன.
நாளை பிற்பகல் பகலிரவு ஆட்டமாக நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி மோதுகிறது.
பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்ட இந்திய அணி தனது போட்டிகளை எங்கே விளையாடும்? கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எங்கே, எப்போது நடக்கும்?
சாம்பியன்ஸ் டிராபி என்றால் என்ன?
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த தொடர், தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. 2017-ஆம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபி நடக்கவில்லை.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த அணியும் விளையாட முன்வரவில்லை என்பதால் 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த தொடர் நடத்தப்பட்டது. .
2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது பின்னர் டி20 உலகக் கோப்பையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.
2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் என ஐசிசி அறிவித்தது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தானாகவே தகுதி பெற்றுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
8 அணிகள் எவை?
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் உள்ளன.
ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும் ஆட்டங்களில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறவில்லை.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி விளையாடும் போட்டிகள் எங்கே?
இந்தியா-பாகிஸ்தான் உறவில் நீடிக்கும் நெருடலால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது.
2008-ஆம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் சென்று இந்திய அணி விளையாடவில்லை.
2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் விளையாடியது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்துவிட்டது. 2023-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் நடத்திய போதிலும் இந்திய அணி அங்கு செல்லாமல் இலங்கை சென்று விளையாடியது.
பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டதால் இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் துபையில் நடத்தப்படுகின்றன. இந்திய அணி விளையாடும் அனைத்து லீக் ஆட்டங்களும் துபையில் நடைபெறும்.
குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) மோதுகின்றன. பிற்பகலில் தொடங்கும் இந்தப் போட்டி பகலிரவுப் போட்டியாக நடக்கிறது.
இந்திய அணி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் அந்த ஆட்டங்களையும் துபையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர்கள் இல்லாத தொடர்
ஒவ்வொரு அணியிலும் முக்கிய நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணத்திற்காகவும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப் பந்துவீச்சாளர்கள் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகிய 3 நட்சத்திர பந்துவீச்சாளர்களும் இல்லை. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் பங்கேற்கவில்லை. இதனால் பெரும்பாலும் புதிய வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதுகு வலி காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.
இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல், ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஏஎம் காஜன்பார், நியூசிலாந்து அணியில் பென் சீர்ஸ், லாக்கி பெர்குஷன் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
போட்டி அரங்குகள் புதுப்பிப்பு
கடந்த 1996-ஆம் ஆண்டுக்குப் பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டிகள் நடத்தப்படுவதால் மைதானங்கள், ஆடுகளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த லாகூர் கடாபி அரங்கு 117 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கராச்சி, ராவல் பிண்டியில் உள்ள விளையாட்டு மைதானங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
பரிசுத்தொகை எவ்வளவு?
இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு 60 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறை நடந்த சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையைவிட 53 சதவீதம் அதிகமாகும்.
ஐசிசி அறிவிப்பின்படி, இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையை சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும்.
2வது இடம் பிடிக்கும் அணி இந்திய மதிப்பில் 9.12 கோடி ரூபாயை பரிசுத் தொகையாகப் பெறும்.
அரையிறுதியுடன் வெளியேறும் இரு அணிகளுக்கும் 4.86 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்.
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் பங்கேற்பு உறுதித்தொகையாக தலா 1.08 கோடி ரூபாயும் வழங்கப்படும்.
பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் போட்டிக்கு சாம்பியன்ஸ் டிராபி புத்துயிர் தருமா?
கிரிக்கெட் உலகில் சமீப ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளை நடத்துவது குறைந்து வருகிறது. டெஸ்ட், டி20 போட்டிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் ஒருநாள் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டி20 ஃபார்மெட்டுக்கு மாறிவிட்ட பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் போட்டிக்கு மாற மிகுந்த சிரமப்பட்டு இளம் வயதிலேயே ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு வருகிறார்கள். சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நிலையில் திடீரென ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இருப்பினும் இன்னும் சில அணிகள் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தக்க வைக்க, அவற்றை தொடர்ந்து விளையாடி வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளது. அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தன்னை தயார் செய்துள்ளது.
இந்திய அணி கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி விளையாடிய நிலையில் சமீபத்தில்தான் இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடியது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடினாலும் பெரும்பாலான இருநாடுகளுக்கான தொடர்களில் ஒருநாள் போட்டித்தொடர்களைவிட, டி20 தொடர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
ஆனால், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் தங்களை ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தி ஃபார்மில் வைத்து வருகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை மனதில் வைத்து சமீபத்தில் முத்தரப்பு தொடரை நடத்தியது, டெஸ்ட் தொடர்களிலும் விளையாடியது. நியூசிலாந்து அணியும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்று தன்னை ஃபார்மில் வைத்துள்ளது.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் மறந்துவரும் ஒருநாள் கிரிக்கெட்டை ரசிகர்கள் மனதில் மீண்டும் எழ வைக்கவும், பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஏதுவான சூழலை உருவாக்கவும் பயன்படும் என்று ஐசிசி நம்புகிறது.
பட மூலாதாரம், Getty Images
வரலாற்று சிறப்பு மிக்க தருணம்
பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ” சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கும். 29 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் உலக அணிகள் சேர்ந்து விளையாடுவதால், இது தேசமே கொண்டாடக் கூடிய விளையாட்டு தொடர். பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது, இருப்பினும் 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2009 டி20 உலகக் கோப்பையை வென்றோம்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா ஏ.எஃப்.பி செய்தி தளத்துக்கு அளித்த பேட்டியில் ” பாகிஸ்தான் பாதுகாப்பான தேசம் என்று உலகிற்கு நாங்கள் சமீப காலமாக உணர்த்தியுள்ளோம். இதுபோன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஐசிசி தொடர்களை எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவோம். எங்களின் கண்ணோட்டத்தை இந்த கிரிக்கெட் உலகம் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடப்பதில் நீண்ட இடைவெளி ஏன்?
கடைசியாக 1996ம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை, இந்தியாவோடு இணைந்து, பாகிஸ்தான் நடத்தியது. அதன்பின் ஐசிசி சார்பில் எந்தப் போட்டியையும் பாகிஸ்தான் நடத்தவில்லை. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப்பின் இப்போது மீண்டும் ஐசிசி சார்பில் போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது.
2009ம் ஆண்டு இலங்கை அணி லாகூரில் விளையாடியபோது, அங்கு திடீரென தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விளையாட ஐசிசி உறுப்பு நாடுகளின் அணிகள் மறுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் சென்று இலங்கை அணி விளையாடியது.
அப்போதிருந்து பாகிஸ்தானில் மெல்ல மெல்ல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டன. பாகிஸ்தானில் சூழல் படிப்படியாக மாறி, தற்போது ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி நடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.