பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் டிராபி 2025இன் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு நியூசிலாந்து அணி நாடு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, இப்போது அங்குள்ள ஊடகங்களில் அது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.
நியூசிலாந்தின் முன்னணி நாளிதழான நியூசிலாந்து ஹெரால்டு, “1.438 பில்லியன் மக்கள் தொகையையும் கிரிக்கெட்டுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்ட இந்தியா, மும்பையைவிட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்தை தோற்கடித்தது” என்று குறிப்பிட்டது.
இந்தியாவின் வெற்றிக்கான காரணங்களைப் பட்டியலிட்டு, “இந்த வெற்றியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் போட்டியில் இந்தியா சிறந்த அணியைக் கொண்டிருந்தது, மேலும் பல விஷயங்களும் அதற்குச் சாதகமாக அமைந்தன.
பாகிஸ்தான் போட்டியை நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு விளையாட மறுத்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஐந்து போட்டிகளையும் துபையில் மட்டுமே விளையாடியது. அதேபோல், இந்திய அணி துபை மைதானத்திற்குப் பழகிவிட்டது. பயணங்களில் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டது.
போட்டி எங்கு நடைபெற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்போது, அதற்கேற்ப 15 வீரர்களைக் கொண்ட ஓர் அணியை உருவாக்குவது உங்களுக்கு எளிதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், “ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் 11 இந்திய வீரர்களில், நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்பட மொத்தம் ஆறு பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை, 50 ஓவர்களில் 38 ஓவர்கள் அதன் சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டன. மறுபுறம், நியூசிலாந்து அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஒருவர் சாண்ட்னர், மற்றவர் மிட்செல் பார்ஸ்வெல்,” என்று நியூசிலாந்து ஹெரால்டு தனது செய்தியில் கூறியுள்ளது.
அதோடு, “க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர ஆகியோர் இருந்தாலும், அவர்கள் முழுநேர சுழற்பந்து வீச்சாளர்கள் அல்ல. உதாரணமாக, இந்தியாவின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மறுபுறம், நியூசிலாந்தின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் பிலிப்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை விக்கெட் கீப்பராக தொடங்கினார்,” என்று நியூசிலாந்து ஹெரால்டு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தியாவின் ஆதிக்கம் பற்றிய விவாதம்
போட்டியின் சூழல், இந்தியாவுக்கு சாதகமாகவும், நியூசிலாந்துக்கு எதிராகவும் இருந்தது என்றாலும், நியூசிலாந்து அணி எளிதில் தோல்வியடைந்தது என்று நியூசிலாந்து ஹெரால்டு நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறுகையில், “எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற போட்டிகளில் எப்போதும் சில சவால்கள் இருக்கும், அவற்றில் இருந்து நீங்கள் வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
நான் எதைப் பற்றியும் குறை சொல்ல முடியாது. போட்டி முழுவதும் நாங்கள் முழு பலத்துடன் எதிரணி அணிக்கு சவாலாக இருந்திருக்கிறோம்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
“நிலவியல் அரசியல் யதார்த்தங்கள், அக்கறையின்மை மற்றும் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் விறுவிறுப்பற்ற போட்டிச் சூழல் ஆகியவை சாம்பியன்ஸ் டிராபி போட்டி, ஐ.சி.சி திட்டமிட்டபடி நடக்காமல் போவதற்குக் காரணமாக அமைந்தன.
சாம்பியன் டிராபி ஐ.சி.சி.க்கு நிதி திரட்டும் ஒரு வழியாக மாறியது. ஆனால் டி20இன் மகத்தான வெற்றிக்கு மத்தியில், ஒருநாள் போட்டியின் தன்மை குறித்த கேள்வி இன்னும் அப்படியே உள்ளது” என்று ரேடியோ நியூசிலாந்து தனது வலைதளத்தில் எழுதியுள்ளது.
“எந்தவொரு போட்டியின் வெற்றிக்கும் இந்தியா ஒரு நிதி இயந்திரம் போன்றது. 1996க்கு பிறகு, எந்தவொரு ஐ.சி.சி போட்டியையும் நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டபோது, இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து சந்தேகத்துக்குரிய சூழல் நிலவியது” என்று ரேடியோ நியூசிலாந்து பதிவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, “இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் இன்னும் முடிவுக்கு வராததால், பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இரு நாடுகளும் ஐ.சி.சி போட்டிகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுகின்றன. அதுவும் இப்போது மூன்றாவது நாட்டில்” என்றும் ரேடியோ நியூசிலாந்து குறிப்பிட்டிருந்தது.
விருது பெற்ற கிரிக்கெட் எழுத்தாளர் நிக்கோலஸ் ப்ரூக்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர்களை நினைத்துத் தான் வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை, இந்திய அணி சிறப்பானது. எந்தச் சூழ்நிலையிலும் முன்னேறும் திறன் கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி அதன் திறமையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஒரே இடத்தில் விளையாடுவதன் மூலமாகப் பலன் பெற்றதாக மற்ற விஷயங்கள் பேசப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.
இந்தியா மீதான பாராட்டும் விமர்சனமும்
பட மூலாதாரம், Getty Images
ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறியதாலும், விராட் கோலி இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனதாலும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றி இன்னும் பெரிதாக்கப்படுகிறது என்று நியூசிலாந்து செய்தி வலைதளமான ஸ்டஃப் குறிப்பிட்டுள்ளது.
“கடந்த இரண்டு ஆண்டுகளில், மூன்று ஐ.சி.சி போட்டிகளில் இந்தியா 24 போட்டிகளில் 23 போட்டிகளில் வென்றுள்ளது. இதில் 2023 ஒருநாள் உலகக்கோப்பை, கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை அடங்கும். ஆனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி குறித்து, போட்டியை நடத்தும் நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய நன்மைகள் இந்தியாவுக்கு கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எந்தவொரு தொடரையும் நடத்தும் நாடு, அந்தத் தொடரில் பலனடைகிறது. கடந்த நான்கு ஒருநாள் உலகக் கோப்பைகளில், போட்டியை நடத்திய நாடு மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எந்தவொரு பெரிய விளையாட்டுப் போட்டியிலும், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு கிடைத்த பலன்களை, போட்டி நடத்தாத நாடு ஒருபோதும் பெறுவதில்லை,” என்று ஸ்டஃப் தெரிவித்துள்ளது.
மேலும் “2021ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி அனைத்து 15 போட்டிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. அந்த நேரத்தில், இந்தியா வேறு எந்த நாட்டிலும் போட்டிகளை விளையாடுவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை.
ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது அணியை பாகிஸ்தானில் விளையாட அனுமதிக்கவில்லை. இந்நிலையில், மீதமுள்ள ஏழு நாடுகள் பாகிஸ்தானில் இருந்தபோது, ஐ.சி.சி இந்தியாவுக்கான அனைத்துப் போட்டிகளையும் துபையில் ஏற்பாடு செய்தது” என்று ஸ்டஃப் இணையதளம் எழுதியுள்ளது.
அதோடு, “இறுதிப் போட்டிக்கு முன்பு, முகமது ஷமி, ஆடுகளத்தின் நிலை குறித்து எங்களுக்குத் தெரியும், எனவே எங்களுக்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கிறது என்று கூறியிருந்தார். நியூசிலாந்து தனது போட்டிகளை பாகிஸ்தானின் மூன்று நகரங்களில் விளையாடியது, அதே நேரத்தில் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடியது,” என்று ஸ்டஃப் குறிப்பிட்டது.
பட மூலாதாரம், ANI
கென்யாவின் நைரோபியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக நியூசிலாந்தின் செய்தி வலைதளமான தி போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அதன் பிறகு, நியூசிலாந்து அணி வெள்ளை பந்து இறுதிப் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தியா தனது குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்த நாளிலிருந்து, பல வகையான கேள்விகள் எழத் தொடங்கின. இந்திய அணி ஏற்கெனவே பலமாக உள்ளது. அதுபோக இந்திய அணிக்குப் பல விஷயங்கள் சாதகமாக இருந்தன.
“ஐ.சி.சி பிற அணிகளிடம், பாகிஸ்தானுக்கு வெளியே விளையாட ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், இந்திய அணி துபையில் முகாமிட்டுத் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதைப் போன்ற உதவியைப் பெற்றது. மறுபுறம், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்து துபைக்கு மாறி மாறிப் பயணித்தது” என்றும் ஸ்டஃப் இணையதளம் குறிப்பிட்டது.
நியூசிலாந்தின் செய்தி இணையதளமான தி போஸ்ட், “இந்தியா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா பெற்ற வசதிகள் எந்தவொரு உலகளாவிய விளையாட்டிலும் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காது,” என்று தெரிவித்தது.
இவைதவிர, நியூசிலாந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து ஒரு பெரிய போட்டியைத் தவறவிடுவது இது முதல் முறை அல்ல என்றும் அந்தச் செய்தி இணையதளம் எழுதியுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு கென்யாவில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோதும், இறுதிப் போட்டியின்போது, வெற்றி அவர்களின் கைகளைவிட்டு நழுவுவது போலத் தோன்றியதை தி போஸ்ட் நினைவுகூர்ந்தது.
ஆனால் அப்போது கிறிஸ் கெய்ன்ஸ் 102 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறையும் அதே போன்ற ஒரு இன்னிங்ஸ் தேவைப்பட்டது என்றும் தி போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.