பட மூலாதாரம், Getty Images
2025 ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் வலுவான டாப்ஆர்டர் பேட்டிங்தான்.
டாப் ஆர்டரில் சுப்மான் கில், ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன் ஆகியோர் எதிரணிகளுக்கு சிம்மசொப்னமாக திகழ்கிறார்கள். மூவரில் இருவர் சரியாக விளையாடாவிட்டாலும் யாரேனும் ஒருவர் நின்று ஆங்கர்ரோல் எடுத்து அணியை மீட்டுவிடுகிறார். அந்த வகையில் குஜராத் அணிக்கு பெரிய தூணாக மாறியுள்ளவர் தமிழக வீரர் சாய் சுதர்சன்.
குஜராத் அணிக்காக கடந்த சீசனிலும், இந்த சீசனிலும் தொடர்ச்சியாக சிறப்பான பங்களிப்பை சாய் சுதர்சன் வழங்கி வருகிறார்.
“மிஸ்டர் கன்சிஸ்டென்ட்”
பட மூலாதாரம், Getty Images
குஜராத் அணியி்ல் இந்த முறை தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் உள்ளனர். சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த முறை தனது நிலையான சிறந்த பேட்டிங்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் தமிழக வீரர் சாய் சுதர்சன்.
2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சாய் சுதர்சன் அந்த சீசனில் 5 போட்டிகளில்தான் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின் 2022 சீசனிலிருந்து சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தவிர்க்க முடியாத பேட்டராக மாறிவிட்டார்.
2023 ஐபிஎல் சீசனில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் 392 ரன்கள் சேர்த்து 51 சராசரியும், 2024 சீசனில் 12 போட்டிகளில் 527 ரன்கள் சேர்த்து 47 சராசரியும் வைத்திருந்தார்.
நடப்பு 2025 சீசனில் இதுவரை 5 போட்டிகளில் 273 ரன்கள் குவித்து, ஆரஞ்சு தொப்பி போட்டியில் 2வது இடத்தில் சுதர்சன் இருக்கிறார். ஆமதாபாத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் சேர்த்த சுதர்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ரூ.20 லட்சம் முதல் ரூ.8.50 கோடி வரை
பட மூலாதாரம், Getty Images
குஜராத் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்தாக தற்போது சுதர்சன் மாறிவிட்டார். கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய சுதர்சனை, அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்தபின்ரூ.8.50 கோடிக்கு கடந்த ஏலத்தில் குஜராத் அணி தக்கவைத்தது.
குஜராத் அணியின் இந்த முடிவே, சாய் சுதர்சனை அந்த அணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதுகிறது என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவின் “அரவிந்த் டி சில்வா”
விக்கெட்டுகள் சரிந்தாலும், எதிரணி அழுத்தம் கொடுத்தாலும் களத்தில் மிகவும் கூலாக, பதற்றமில்லாமல் ஆடக்கூடியவர் சுதர்சன். ஒவ்வொரு முறை களமிறங்கும் போது, சுதர்சன், தன்னை எந்தப் பந்துவீச்சாளரும் எளிதாக ஆட்டமிழக்கச் செய்துவிடக்கூடாது என்ற தீர்மானத்தோடுதான் களமிறங்குவார் போலத் தெரிகிறது. ஏனென்றால், மைதானத்துக்குள் வந்துவிட்டால், களத்தின் தன்மையுடன் சுதர்சன் பொருந்திப் போய் விடுகிறார். இவரை ஆட்டமிழக்கச் செய்வது எதிரணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது.
இலங்கை அணியில் ஒருகாலத்தில் அரவிந்த் டி சில்வா இதுபோன்ற ஆட்டத்தைதான் அந்த அணிக்கு வழங்கினார். டி சில்வாவின் ஆட்டம்தான் இலங்கை அணி 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ரணதுங்கா தலைமையில் வெல்லவும் காரணமாக அமைந்தது. அரவிந்த் டி சில்வா களமிறங்கிவிட்டால் அவரை ஆட்டமிழக்கச் செய்வது எதிரணிக்கு தலைவலியாக இருக்கும், அதேபோன்ற தலைவலியைத்தான் சுதர்சன் எதிரணிகளுக்கு கொடுத்து வருகிறார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்சன் 82 ரன்கள் சே்ரத்து 153 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். தொடக்க வீரராகக் களமிறங்கிய சுதர்சன் 19வது ஓவர் வரை களத்தில் இருந்து குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த சீசனில் 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் 40 ரன்களுக்கு அதிகமாகவும், 3 அரைசதங்களையும் சுதர்சன் விளாசி ” மிஸ்டர் கன்சிஸ்டென்ட்” என்ற டேக்லைனை ரசிகர்களிடமிருந்தும், வர்ணனையாளர்களிடமிருந்து பெற்றுள்ளார்.
சுதர்சனின் நிலையான சிறந்த ஆட்டம்
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சனின் கடந்த 10 இன்னிங்ஸ்களை எடுத்து ஆய்வு செய்தால், ஒரு சதம், 6 அரைசதங்கள் உள்பட 562 ரன்கள் சேர்த்து “மிஸ்டர் கன்சிஸ்டென்ட்” என்ற பெயருக்கு பொருத்தமாக இருக்கிறார்.
கடந்த 2024 சீசனில் குஜராத் அணியில் நிலையான ஆட்டத்தையும், ரன்களையும் வழங்கியவர் சாய் சுதர்சன்தான். 12 போட்டிகளில் சாய் சுதர்சன் 527 ரன்களைக் குவித்து 48 சராசரி வைத்திருந்தார்.
‘குஜராத்தின் சொத்து சுதர்சன்’
சாய் சுதர்சன் ஆட்டம் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் மேத்யூ வேட் அளித்த பேட்டியில் ” சுதர்சன் அழகாக பேட் செய்கிறார், எங்களை அவரின் பேட்டிங்கால் ஈர்த்துவிட்டார். குஜராத் அணிக்கு மிகப்பெரிய சொத்து சுதர்சன். எந்த சூழலிலும், எந்த பேட்டிங் வரிசையிலும் சுதர்சனால் ஆட முடியும். அழுத்தத்தை தாங்கி பேட் செய்ய முடியும். மிக விரைவில் இந்திய அணியில் சாய் சுதர்சனைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து தொடரில் சுதர்சன்
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கிரிக்பஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ” சாய் சுதர்சன், சாய் கிஷோர் இருவருமே இந்திய அணிக்காக உருவாக்கப்பட்டவர்கள். ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்றபின் அவரின் இடத்தில் சாய் சுதர்சன் அனைத்து ஃபார்மெட்டிலும் இருப்பார், இதில் சந்தேகமே இல்லை.” எனத் தெரிவித்தார்.
உள்நாட்டுப் போட்டிகளிலும் பிரமாதமாக ஆடியுள்ள சாய் சுதர்சன் இதுவரை 29 முதல்தரப் போட்டிகளில் 7 சதங்கள், 5 அரைசதங்கள் உள்பட 1957 ரன்கள் குவித்துள்ளார்.
லிஸ்ட் ஏ பிரிவில் 28 போட்டிகளில் 6 சதம், 6 அரைசதங்கள் உள்பட1396 ரன்கள் சேர்த்துள்ளார் சுதர்சன். 50 டி20 போட்டிகளில் விளையாடிய சுதர்சன் 1 சதம், 11 அரைசதங்கள் உள்பட 1,785 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்திய அணியில் வாய்ப்பு எப்போது?
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், சாய் சுதர்சன் குறித்து ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ” சாய் சுதர்சன் ஆட்டத்தில் நிலைத்தன்மை(கன்சிஸ்டென்சி) இருக்கும் போது ஏன் இந்திய அணிக்குள் தேர்வு செய்யப்படக் கூடாது. உள்நாட்டுப் போட்டிகளில் துலீப் டிராபியில் சதம், ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதம், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் என சாய் சுதர்சன் ஆட்டம் ஒளிர்கிறது. இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சன் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். பேட்டிங் நுட்பத்தில் சுதர்சன் வலுவாக இருப்பதால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிச்சயம் சாய் சுதர்சன் இந்திய அணியில் இருப்பார் என நம்புகிறேன்.
போட்டியை நன்கு உள்வாங்கி சுதர்சன் ஆடுகிறார்கள். விக்கெட்டின் இருபுறங்களிலும் ரன்களைச் சேர்க்கிறார். ராம்ப் ஷாட், அப்பர் கட்ஸ், ஸ்கூப் ஷாட்களை பிரமாதமாக விளையாடுகிறார் சுதர்சன். அவரின் ஸ்ட்ரைக் ரேட்டையும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார், சராசரியாக 155 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் ” எனத் தெரிவித்தார்.
பொறுமை, நிதானம், ஆங்கர் ரோல்
பட மூலாதாரம், Getty Images
குஜராத் அணியில் தன்னுடைய “ரோல்” என்ன என்பதை சுதர்சன் நன்கு புரிந்து கொண்டு ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்கிறார். எந்தப் பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி அடிக்கலாம், ஸ்ட்ரைக்கை எவ்வாறு ரொட்டேட் செய்வது என்பதை சுதர்சன் நன்கு அறிந்துள்ளார். சுதர்சன் ஆட்டத்தில் இருக்கும் பொறுமை, சரியான தருணத்துக்காக காத்திருப்பது, நிலையான சிறந்த பேட்டிங், குஜராத் அணிக்கு பெரிய பலம்.
2025 ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வைத்திருக்கும் லக்னெள அணி வீரர் நிகோலஸ் பூரனைவிட குறைந்த இடைவெளியில்தான் சாய் சுதர்சன் பின்தங்கி இருக்கிறார்.
சுதர்சன் கடைசி 9 இன்னிங்ஸ்களில் 65 (39), 84 (49), 6 (14), 103 (51), 74 (41), 63 (41), 49 (36), 5 (9), 82 ரன்களை சேர்த்துள்ளார்.
முதல் 30 ஐபிஎல் போட்டிகளில் 1,307 ரன்களை சுதர்சன் சேர்த்துள்ளார்.
“பயிற்சி போதும் என கூறி இழுத்து வருவோம்”
பட மூலாதாரம், Getty Images
குஜராத் அணியின் துணைப் பயிற்சியாளர் பார்தீவ் படேல் கூறுகையில் ” சுதர்சன் இவ்வளவு சிறப்பாக விளையாடுவது எனக்கு வியப்பாக இல்லை. சுதர்சன் கடினமாக உழைக்கிறார், பயிற்சி செய்கிறார். நாங்களே அவரை வலைப்பயிற்சியில் இருந்து போதும் நாளை பயிற்சிஎடுக்கலாம் எனக் கூறி இழுத்து வந்திருக்கிறோம் அந்த அளவு கடினாக பயிற்சி எடுத்தார். இந்தக் காலத்தில், இவ்வளவு சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று சொல்லிவிடலாம், செயலில் வருவது கடினம். ஆனால் சுதர்சன் தனது ஆட்டத்தைப் புரிந்துகொண்டு, விளையாடுகிறார். அதனால்தான் அவரிடமிருந்து நிலையான ஆட்டத்தைக் காண முடிகிறது” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல், உள்நாட்டுப் போட்டிகளில் சுதர்சன் இவ்வளவு சிறப்பாக ஆடியும் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இன்னும் கதவுகள் திறக்கப்படாதது வியப்பாக இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் “ஜியோ ஸ்டார்” நடத்திய ஊடக சந்திப்பில் பிபிசி தமிழின் கேள்விக்கு பதில் அளித்தார். ஐபிஎல், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியும் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது பற்றிய கேள்விக்கு சுதர்சன் பதில் அளி்க்கையில் ” நமக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கிறதோ அதற்கு முன்னதாகவே நாம் நம்மை சிறப்பானவராக தயார் செய்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்கான கதவு எப்போது தட்டப்பட்டாலும் நாம் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்பு வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும், அதுவரை நாம் செய்ய வேண்டிய பணிகளை சரியாகச் செய்தால், வாய்ப்பு வரும் போது அந்த இடத்துக்கு தகுதியானவராக செல்வோம்.
ஏன் எனக்கு இன்னும் இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை, சிறப்பாக ஆடியும் ஏன் வாய்ப்பில்லை என்று நான் சிந்திக்கவில்லை. நம்மால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம், திறமையை மெருகேற்றுவோம், எப்போது வாய்ப்பு வந்தாலும் அதற்கு தகுதியான நபராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
“வீட்டில் இருக்கும் உணர்வு”
பட மூலாதாரம், Getty Images
குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள் இருப்பது எதேச்சையாக நடந்த நிகழ்வா, அங்கு ஒருவருக்கொருவர் எவ்வாறு ஒத்துழைத்து செல்கிறார்கள் என்ற கேள்விக்கு, சாய்சுதர்சன் பதில் அளிக்கையில் ” 4 தமிழக வீரர்கள் இருப்பதால் எனக்கு அந்நியப்பட்டு இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் ” 4 தமிழக வீரர்கள் இருப்பது உண்மையில் பெரிய உற்சாகம், உத்வேகத்தை அளிக்கிறது, வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது, தனியாக ஒரு இடத்தில் இருக்கும் உணர்வு இருக்காது.
குஜராத் அணியின் பிற உதவிப் பணியாளர்களும், பயிற்சியாளர்களும் பாரபட்சம் பார்க்காமல் பழகுவதால், ஐபிஎல் ஆடுகிறோம் என்ற உணர்வே இருக்காது. நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு போட்டித்தொடருக்கு செல்கிறோம், அங்கு நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றுதான் தோன்றுகிறது” என்று அவர் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு