பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் உதா பகுதியில் உள்ள உதா வேலி பல்கலைகழகத்தில், அதிபர் டிரம்பின் கூட்டாளியான சார்லி கக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் பேசி வந்தார்.
பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளியை தேடும் பணி வீடு வீடாக நடைபெறுவதாக போலீஸார் கூறுகின்றனர்.
சார்லி கக் இறப்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப் பட்டது.
அவரது இறப்புக்கு ஜோ பைடன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் கூறியது என்ன?
சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார்.
உதா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான சார்லி கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர்.
2012 ஆம் ஆண்டில், 18 வயதில், அவர் தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாணவர் அமைப்பான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ (TPUSA) ஐ நிறுவினார்.
அவரது சமூக ஊடக பதிவுகள் மற்றும் தினசரி போட்காஸ்ட் பெரும்பாலும் திருநங்கை அடையாளம், காலநிலை மாற்றம், குடும்பம் போன்றவை குறித்ததாக இருந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வீடியோ பதிவில், “சார்லி கக்கின் கொடூரமான படுகொலை குறித்து வருத்தமும் கோபமும் கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்
சார்லி கக் – தனது 18 வயதில் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற பழமைவாத குழுவை நிறுவினார், அவர் ஒரு தேசபக்தர், அவரது மரணம் “அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட தருணம்” என்று டிரம்ப் கூறினார்.
உதா பல்கலைகழக காவல் தலைமை அதிகாரி ஜெஃப் லாங், இந்நிகழ்வு திறந்த வெளியில் நடைபெற்றதாகவும், 3 ஆயிரம் பேர் அந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் ஆறு அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் கட்டிடங்களால் சூழப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சார்லி கக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்ததாக ஒக்லஹாமா மாகாண பிரதிநி மார்க்வேனே முல்லின்ஸ் கூறினார்.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் பல்கலைகழக வளாகத்தில் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து ஒருவர் கிர்கை சுட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. அந்த காட்சிகளை பிபிசி ஆராய்ந்த போது, அந்த கட்டிடம் சார்லி கக் சுடப்பட்ட இடத்திலிருந்து 150 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பது தெரிய வந்தது. எனினும் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்ய முடியவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அவர் துப்பாக்கிச் சூடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, சுடப்பட்டதாக கூறுகின்றனர். சுடப்பட்டவுடன், மேடையில் அவர் கீழே விழுந்தார். கூடியிருந்த மாணவர்களும், இளைஞர்கள் அங்கிருந்து ஓட தொடங்கினர்.
சார்லி கக் சுடப்பட்ட பிறகு, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
சார்லி கக் சுடப்பட்ட உடனே ஒரு நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார்.
சிசிடிவி காட்சிகளில் சுட்டவர் பதிவாகியுள்ளார். அவர் முழுவதும் கருப்பு நிற உடை அணிந்திருப்பதும், பல்கலைகழக வளாகத்தில் ஒரு மேற்கூரையிலிருந்து சுட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
உதா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார், சார்லி கக்கின் மரணத்தை “அரசியல் கொலை” என்று அவர் குறிப்பிட்டார்.
தலைவர்கள், முன்னாள் அதிபர்கள் அஞ்சலி
சார்லி கக்கின் உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அமெரிக்க முன்னாள் அதிபர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர், “நாம் திறந்த மனதுடன் விவாதிக்கவும், பயம் இல்லாமல் பேசவும் முடிய வேண்டும். அரசியல் வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜிராஜியா மெலோனி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய் ஆகியோரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்துள்ளனர்.
சார்லி கக் யார்?
சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார்.
உதா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர்.
சிகாகோவின் புறநகர்ப் பகுதியான ப்ராஸ்பெக்ட் ஹைட்ஸில் வளர்ந்த ஒரு கட்டிடக் கலைஞரின் மகன் கக். அரசியல் செயல்பாட்டில் தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு சிகாகோவுக்கு அருகிலுள்ள ஒரு சமூகக் கல்லூரியில் பயின்று, பாதியில் நின்று விட்டார். உயர்மட்ட அமெரிக்க ராணுவ அகாடமியான வெஸ்ட் பாயிண்டிற்கு தேர்வாக முயன்று தோல்வியுற்றார்.
பின்நவீனத்துவம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் விவாதங்களில் ஈடுபடும்போது கக் கல்லூரி பட்டம் கூட பெறாதவர் என்று குறிப்பிடப்பட்டார்.
பட மூலாதாரம், Reuters
2012 -ல் அதிபர் பராக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் TPUSA -ல் அவரது பங்கு தொடங்கியது.
லாப நோக்கற்ற அந்த அமைப்பின் நோக்கம் “நிதிப் பொறுப்பு, சுதந்திர சந்தைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளை மேம்படுத்த” மாணவர்களை ஒழுங்கமைப்பதாகும். TPUSA இப்போது 850 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தனது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
கக் குடியரசுக் கட்சி நிகழ்வுகளில் பேசி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், அதிதீவிர பழமைவாதிகளிடையே பிரபலமாக இருந்தார். அவரது தினசரி பழமைவாத பேச்சு வானொலி நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது என்று சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஒரு ஆர்வமுள்ள மேடை பேச்சாளரான, சார்லி கக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றினார். ட்ரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் எனும் பிரச்சாரத்தைக் குறிக்கும் வகையில், அவர் எழுதிய தி மாகா கோட்பாடு 2020 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையான நூலாக இருந்தது.
கடந்த ஆண்டு தேர்தலில் டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் TPUSA முக்கிய பங்கு வகித்தது. பல்லாயிரக்கணக்கான புதிய வாக்காளர்களை பதிவு செய்ய உதவியதற்கும், ட்ரம்புக்கு ஆதரவாக அரிசோனா மாகாணத்தில் நிலைமைகளை மாற்றியதற்கும் அவர் வெகுவாக பாராட்டப்பட்டார்.
சார்லி கக் ஜனவரி மாதம் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். டிரம்ப் ஆட்சிக் காலங்களில் வெள்ளை மாளிகைக்கு அவர் அடிக்கடி வருவது வழக்கம்.
புதன்கிழமை, கிர்கின் மரணத்தை அறிவித்த டிரம்ப் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்: “தி கிரேட், மற்றும் லெஜண்டரி, சார்லி கக் இறந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட யாரும் புரிந்து கொள்ளவில்லை” என்றார்.
பட மூலாதாரம், Reuters
அதிபரும் அவரது உதவியாளர்களும் டிரம்பின் பிரச்சாரத்துக்கு சார்லி கக்க்கின் பங்கை அங்கீகரித்தனர். அவர் குடியரசுக் கட்சி மாநாடுகளில் பேசினார். கிர்க்கின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் அரிசோனாவில் கக் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருடன் கிரீன்லாந்திற்கு பயணம் செய்தார். டிரம்ப் அப்போது ஆர்க்டிக் பிராந்தியத்தை அமெரிக்கா சொந்தமாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.
சார்லி கக்கின் சுவிசேஷ கிறிஸ்தவ மதம் மற்றும் குடும்பம் அவரது அரசியலில் முக்கிய பங்காற்றியது என்று கூறலாம். அவர் ஒரு முன்னாள் மிஸ் அரிசோனாவை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழமைவாத செயல்பாடுகளின் எதிர்காலமாகவும், தீவிர பிரிவினைவாத நபராகவும் பார்க்கப்பட்டார்.
குடியரசுக் கட்சி அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்குக்கு மிகப்பெரிய பாராட்டு டிரம்பிடமே வந்தது என்று கூறலாம். டிரம்பின் இந்த வார்த்தைகள் சார்லி கக்கின் பாட்காஸ்டின் தொடக்கத்தில் ஒலிபரப்பட்டது. அதில் டிரம்ப், “நான் சார்லிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், அவர் ஒரு நம்பமுடியாத இளைஞர், அவரது உணர்வு, இந்த நாட்டின் மீதான அவரது அன்பு, இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த இளைஞர் அமைப்புகளில் ஒன்றை உருவாக்குவதில் அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.
சார்லி கக் தனது நிகழ்வுகள் மற்றும் அவரது பாட்காஸ்ட்களில் பல அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை விவாதித்துள்ளார் – துப்பாக்கி கட்டுப்பாடு அவற்றில் ஒன்றாகும்.
சில மாதங்களுக்கு முன்பு, “துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு ஆண்டும் சில துப்பாக்கி இறப்புகள் நிகழ்ந்தாலும், இரண்டாவது சட்டத் திருத்தத்தை (துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது) தக்க வைத்துக் கொள்ள அந்த விலையை கொடுக்க வேண்டியுள்ளது” என்று அவர் பேசியிருந்தார்.
அவரது சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன. அவர் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து சந்தேகத்தையும் பரப்பினார், திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பினார் என்று பிபிசியின் செய்தி கூட்டாளியான சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2020 தேர்தல் ட்ரம்பிடமிருந்து திருடப்பட்டது என்ற பொய்யான கூற்றையும் அவர் பகிரங்கமாக ஊக்குவித்தார்.
சிபிஎஸ் செய்தியின் படி, வெள்ளை மக்களின் இடத்தை சிறுபான்மையினர் பிடித்துக் கொள்வார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கிரேட் ரிப்ளேஸ்மென்ட் சதி கோட்பாட்டையும் அவர் முன்னிலைப்படுத்தினார்.
சார்லி கக் சுடப்பட்டது குறித்து பேசும் போது, அவர் வெவ்வேறு கருத்துகள் குறித்த விவாதங்களை ஊக்குவித்தார் என்று சிலர் வலியுறுத்தினர்.
“அவரது செயல்பாடுகள் பிளவைக் கடந்து மக்களை அணுகுவது, பிரச்னைகளை தீர்க்க வன்முறைக்கு பதில் பேச்சைப் பயன்படுத்து என்ற நோக்கில் இருந்தது. ” என பாப்டிஸ்ட் தலைமைத்துவ மையத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் வொல்ஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு