இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் வரிகளையும் தொடர்புபடுத்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பல கருத்துகளை முன்வைத்துள்ளார்.
ரஷ்யாவுடன் வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டால், இந்தியா மீது விதிக்கப்படும் வரிகளை மேலும் உயர்த்தலாம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, பிரதமர் மோதி தன்னைச் சந்திக்க விரும்பி, “சார், உங்களைச் சந்திக்கலாமா?” என்று கேட்டதாகவும், “அவருடன் எனக்கு மிக நல்ல உறவு இருப்பதால் நான் சம்மதித்தேன்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பிறகு, இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகளின் காரணமாக, தற்போது இந்தியா ரஷ்யாவிலிருந்து வாங்கும் எண்ணெய் அளவை குறைத்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இதற்கு முன், ஞாயிற்றுக்கிழமை ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்தபோது, அமெரிக்க வரிகள் மற்றும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறைவு குறித்து பேசிய டிரம்ப், “இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது. மோதி அடிப்படையில் ஒரு நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் அறிந்தார்; என்னை மகிழ்விப்பது முக்கியம்” என்றார்.
பட மூலாதாரம், Reuters
டிரம்ப் முன்வைத்த புதிய கூற்று என்ன?
கென்னடி சென்டரில் நடைபெற்ற ஹவுஸ் ரிபப்ளிகன்ஸ் நிகழ்ச்சியில், அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் வரிகள் குறித்து பேசும் போது, பிரதமர் மோதியையும் இந்தியாவையும் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்தார்.
“எஃப்-35 விமானத்தை பெற மிகவும் அதிக நேரம் பிடிக்கும். இந்தியா அபாச்சி (Apache) ஹெலிகாப்டரைப் பற்றி என்னிடம் வந்து, ‘சார், இதற்காக நாங்கள் ஐந்து ஆண்டுகளாக காத்திருக்கிறோம்’ என்று கூறியது” என டிரம்ப் கூறினார்.
“இந்தியா 68 அபாச்சி ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்திருந்தது. பிரதமர் மோதி என்னைச் சந்திக்க வந்தார். ‘சார், உங்களைச் சந்திக்கலாமா?’ என்று கேட்டார். அவருடன் எனக்கு மிக நல்ல உறவு இருப்பதால் நான் சம்மதித்தேன்” என்று கூறினார்.
மேலும், ” வரிகளை செலுத்த வேண்டியிருப்பதால், அவர் என் மீது மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் இப்போது ரஷ்யாவிலிருந்து (எண்ணெய் இறக்குமதியை) பெருமளவு குறைத்துள்ளனர். இந்த வரிகளால் நாம் மிகப் பெரிய வருவாயை ஈட்டுகிறோம்” என்றும் கூறினார்.
எதிர்க்கட்சி கூறியது என்ன?
பட மூலாதாரம், @INCIndia/X
டொனால்ட் டிரம்பின் இந்தக் கருத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி மீண்டும் பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்துள்ளது.
டிரம்பின் வீடியோவை தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்த காங்கிரஸ், “டிரம்ப் அதிபரான பிறகு, மோதி அழைப்பில்லாமலே அமெரிக்கா சென்றார். டிரம்ப் சொல்வது – ‘மோதி என்னிடம், சார், உங்களைச் சந்திக்க வரலாமா என்று கேட்டார். நான் ஆம் என்றேன்’. உலகத் தலைவர்களில், டிரம்ப் வாயிலில் வந்து வரவேற்காத ஒரே தலைவர் மோதியே என்பதைக் நினைவில் வைத்திருப்பீர்கள். ஏன் என்பது இப்போது புரிந்தது ” என்று பதிவிட்டது.
அதோடு, பிரதமர் மோதியை கார்ட்டூன் வடிவில் சித்தரித்து, “சார், உங்களைச் சந்திக்க வரலாமா?” என்று கேட்பதாக காட்டும் படங்களையும் காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில், டொனால்ட் டிரம்பின் இந்தக் கருத்துகள் குறித்து, அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “அமெரிக்காவுக்கு எது சிறந்தது என்பதில் டிரம்புக்கு எந்த உத்தி ரீதியிலான புரிதலும் இல்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. சீனா போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியா, ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்றவற்றுடன் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் டிரம்ப் முழுக்க முழுக்க வரிகள் மற்றும் எண்ணெய் விற்பனை பற்றிய ஆவேசத்திலேயே மூழ்கியிருக்கிறார்” என்று அவர் கூறினார்.
மேலும், “ரஷ்யாவிலிருந்து பெருமளவில் எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு, அல்லது துருக்கி போன்ற நாடுகளுக்கு வரிகள் விதிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவுக்கு மட்டும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா – இந்தியா உறவுகளில் உண்மையான பிரச்னைகள் உருவாகியுள்ளன. டிரம்பும் மோதியும் மீண்டும் நேரடியாக பேசிக் கொண்டு, ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் வழி ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என்றும் ஜான் போல்டன் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Reuters
டிரம்ப் வேறு என்ன கூறினார்?
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் பிரதமர் மோதி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இதேபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தார்.
அந்த நேரத்தில் விமானத்தில் அவருடன் இருந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ” ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் அவர் (டிரம்ப்) இந்தியாவிற்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். நான் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தியத் தூதரின் (வினய் குவாத்ரா) வீட்டிலிருந்தேன். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துவருவது பற்றி அவர் பேச விரும்பினார். மேலும் வரியைத் தளர்த்துமாறு அதிபரிடம் நான் சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்” என தெரிவித்தார்.
”அவர் (டிரம்ப்) இந்தியாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை காரணமாக, இந்தியா இப்போது ரஷ்யாவிலிருந்து கணிசமாகக் குறைந்த ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
லிண்ட்சே கிரஹாமின் கருத்துக்குப் பிறகு விமானத்தில் இருந்த டிரம்ப், அவரை குறுக்கிட்டு, “இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது. மோதி அடிப்படையில் மிகவும் நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும், என்னை மகிழ்விப்பது முக்கியம்” என்று கூறினார்.
”இந்தியா எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் நாங்கள் விரைவில் அவர்கள் மீதான வரிகளை அதிகரிக்கக்கூடும்” என டிரம்ப் கூறினார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா
டிசம்பர் மாதத்திற்கான எண்ணெய் விநியோகத் தரவைப் பார்த்தால், இந்திய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்திருப்பதைக் காணலாம்.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இந்தியாவின் ஐந்து பெரிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்கான எண்ணெய் வாங்குவதற்கு எந்த ஆர்டரையும் கொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு 50 சதவீத வரியை விதித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பிறகு உடனடியாக, ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் பெரிதாகக் குறையவில்லை.
ஆனால் நவம்பர் மாதம் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா தடைகளை விதித்த பிறகு, இந்தியாவின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைக் கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன.
எண்ணெய் கொள்முதல் குறித்த நிகழ்நேர தரவுகளை வழங்கும் நிறுவனமான Kpler இன் கூற்றுப்படி, நவம்பர் 1 முதல் 17 வரை இந்தியா ரஷ்யாவிலிருந்து ஒவ்வொரு நாளும் 6,72,000 பீப்பாய்கள் எண்ணெயை வாங்கியது.
இது அக்டோபர் மாதத்தில் ஒரு நாளைக்கு வாங்கப்பட்ட 18 லட்சம் பீப்பாய்களை விட மிகக் குறைவு