பட மூலாதாரம், savarkarsmarak.com
சாவர்க்கரால் ஈர்க்கப்பட்டவரும், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸுக்கு அடிக்கடி வருபவருமான மதன்லால் திங்ரா, 1909 ஜூலை 1ஆம் தேதி இந்திய விவகார அமைச்சரின் உதவியாளரான கர்சன் வில்லியை சுட்டுக் கொன்றார்.
வில்லியின் கொலையில் சாவர்க்கரின் பங்கை பிரிட்டிஷ் அரசால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் மதன்லாலுக்கும் சாவர்க்கருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்ததையும், திங்க்ரா குற்றமற்றவர் என்ற மனுவை தயாரித்தவர் சாவர்க்கரே என்பதையும் அது புரிந்துகொண்டது.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்ரா தனது அறிக்கையைப் படிக்க அனுமதிக்க்கப்படவில்லை. அந்த நேரத்தில் சாவர்க்கர் அதை ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளரின் உதவியுடன் லண்டன் நாளிதழில் வெளியிட்டார்.
மதன்லால் திங்ரா மீது விசாரணை நடந்தது. விசாரணை துவங்கிய ஒன்றரை மாதங்களுக்குள், அதாவது 1909 ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால் இதற்கிடையில் நாசிக்கில் பிரிட்டிஷ் கலெக்டர் ஆர்தர் ஜாக்சனின் கொலையில் சாவர்க்கரின் பெயர் அடிபட்டதால் லண்டனில் அவருக்குப் பிரச்னைகள் அதிகரித்தன.
தான் விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்று சாவர்க்கர் பயந்தார். எனவே அவர் லண்டனில் இருந்து பாரிஸ் சென்றார். 1910 மார்ச் மாதம் அவர் லண்டனுக்கு திரும்பியபோது விக்டோரியா ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போதே கைது செய்யப்பட்டார்.
நீலஞ்சன் முகோபாத்யாய் தனது ‘ ஆர்எஸ்எஸ், ஐகான்ஸ் ஆஃப் தி இண்டியன் ரைட்’ புத்தகத்தில் “ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் சாவர்க்கரை லண்டனில் விசாரிக்க வேண்டுமா அல்லது இந்தியாவில் விசாரிக்க வேண்டுமா என்று யோசித்தனர். பிரச்னை என்னவென்றால் குற்றம் நாசிக்கில் நடந்தது. ஆனால் சாவர்க்கர் இங்கிலாந்தில் வசித்தார்,” என்று எழுதுகிறார்.
அதிகபட்சமாக அவர்மீது கொலைக்கு உதவியதற்காக வழக்கு தொடரப்பட்டு இருக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.
பிறகு சாவர்க்கர் இந்தியாவில் பேசிய பேச்சுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியுமா என்று ஆராயப்பட்டது.
இறுதியில் இங்கிலாந்தில் விசாரிக்கப்படுவதற்குப் பதிலாக அவர் மீது இந்தியாவில் வழக்குத் தொடுக்க முடிவு செய்யப்பட்டது. தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் 1881இன் கீழ் அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
கப்பல் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்
பட மூலாதாரம், savarkarsmarak.com
கடந்த 1910ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டில்பரி துறைமுகத்தில் இருந்து ‘எஸ்.எஸ் மோரியா’ என்ற கப்பல் புறப்பட்டது. அதில் சாவர்க்கருடன் இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகள் சிஜே பவர் மற்றும் ஸ்காட்லாந்து யார்டின் எட்வர்ட் பார்க்கர், இரண்டு இந்திய தலைமைக் காவலர்களான முகமது சித்திக், அமர் சிங் ஆகியோர் இருந்தனர்.
“அவர்களில் ஒருவர் எப்போதும் சாவர்க்கரை கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு நான்கு பெர்த்கள் கொண்ட அறை வழங்கப்பட்டது. இரவில், அவர்கள் கேபினை உள்ளே இருந்து பூட்டி வைப்பார்கள்,” என்று ‘சாவர்க்கர், மறக்கப்பட்ட கடந்த காலத்தின் எதிரொலிகள் (Savarkar, Echoes from the Forgotten Past)’ என்ற சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று நூலில் விக்ரம் சம்பத் எழுதியுள்ளார்.
“பார்க்கரும் சாவர்க்கரும் கீழ் பெர்த்தில் படுத்துக்கொண்டனர். சாவர்க்கருக்கு மேலே இருந்த பெர்த் சிஜே பவருக்கு கொடுக்கப்பட்டது. சாவர்க்கரின் தலைக்கு மேல் உள்ள விளக்கு இரவு முழுவதும் எரியும். பிரான்ஸை அடையும் வரை சாவர்க்கருக்கு கைவிலங்கு போடப்படவில்லை. அவர் அணிந்துகொள்ள ஷார்ட்ஸும் ஸ்வெட்டரும் கொடுக்கப்பட்டது.”
கழிவறை கதவை மூட அனுமதி இல்லை
பட மூலாதாரம், savarkarsmarak.com
கேபின் உதவியாளர் இந்த அதிகாரிகளை காலை ஏழு மணிக்கு எழுப்புவது வழக்கம். இதற்குப் பிறகு பவர் மற்றும் பார்க்கர் தயாராகத் தொடங்குவார்கள். அவர்களில் ஒருவர் குளிக்கச் செல்லும்போது சாவர்க்கரை அடுத்தவரின் கண்காணிப்பில் விட்டுச் செல்வார்.
எட்டு மணியளவில் விநாயக் கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்போது அந்த இரண்டு அதிகாரிகளும் அவரை கேபினுக்கு வெளியே காத்திருக்கும் இந்திய காவல்துறையினரிடம் ஒப்படைப்பார்கள்.
அவர்கள் சாவர்க்கரை கழிவறைக்கு அழைத்துச் செல்வார்கள். சாவர்க்கரை உள்ளே இருந்து கழிப்பறைக் கதவை மூட அனுமதிக்கக் கூடாது என்றும், கழிப்பறைக் கதவை சற்றுத் திறந்து வைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது. சாவர்க்கர் கழிவறைக்குச் செல்லும்போது பெரும்பாலும் டிரஸ்ஸிங் கவுன் அணிந்து செல்வார்.
ஜிப்ரால்டரில் சிறிது நேரம் தங்கிய பிறகு கப்பல் ஜூலை 7ஆம் தேதி காலை பிரெஞ்சு துறைமுகமான மார்ஸேவை அடைந்தது.
பட மூலாதாரம், savarkarsmarak.com
பிரெஞ்சு போலீஸ் அதிகாரி பிரிட்டிஷ் அதிகாரிகளை சந்தித்தார்
“எஸ்.எஸ்.மோரியா கப்பல் மார்ஸே துறைமுகத்தில் நின்றவுடன், பிரெஞ்சு போலீஸ் அதிகாரி ஆண்ட்ரி லேபெல்லியா கப்பலில் ஏறி, லண்டன் போலீஸ் கமிஷனரிடம் இருந்து பாரிஸ் போலீஸ் கமிஷனருக்கு இது தொடர்பாக ஒரு செய்தி வந்திருப்பதாக பார்க்கரிடம் கூறினார்,” என்று வைபவ் புரந்தரே சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘சாவர்க்கர், தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் தி ஃபாதர் ஆஃப் ஹிந்துத்வா’வில் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து உதவிகளையும் அளிப்பதாக லேபெலியா, பார்க்கருக்கு உறுதியளித்தார். மேலும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகளிடமும் அவரை அறிமுகப்படுத்தினார்.”
சாவர்க்கர் கழிவறை கமோடின் ஓட்டையில் இருந்து தண்ணீரில் குதித்தார்
பட மூலாதாரம், savarkarsmarak.com
ஜூலை 8ஆம் தேதி காலை ஆறு மணிக்கு சாவர்க்கர் எழுந்தார். 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் இன்னும் தூக்கத்தில் இருந்த பார்க்கரிடம் தான் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதாக அதிகாரப்பூர்வ பிரிட்டிஷ் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
பார்க்கர் அவரை தனியாகச் செல்ல அனுமதிக்கவில்லை. அறையின் பூட்டைத் திறந்து சாவர்க்கரை கழிவறையின் திசையில் தானே அழைத்துச் சென்றார்.
தன்னைப் பின்தொடரும்படியும், சாவர்க்கரை கண்காணிக்கும்படியும் இரண்டு இந்திய கான்ஸ்டபிள்களான சித்திக் மற்றும் அமர் சிங்கை கேட்டுக்கொண்ட அவர், பின்னர் தன் அறைக்குத் திரும்பினார்.
“அமர் சிங் கழிவறைக்குள் எட்டிப் பார்த்தார். கதவின் அடிப்பகுதியில் ஒரு துளை இருந்தது. அங்கு செருப்புகள் தெரிந்தன. செருப்புகளை அணிந்தவர் கமோடில் அமர்ந்திருப்பது போல் இருந்தது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள அமர் சிங் கழிவறையின் உட்புறத்தைப் பார்க்க முயன்றார்,” என்று வைபவ் புரந்தரே எழுதுகிறார்.
அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சாவர்க்கர் ஒரு சிறிய ஓட்டையிலிருந்து வெளியேற முயற்சி செய்துகொண்டிருந்தார். அவரது உடலின் பாதி ஏற்கெனவே வெளியேறிவிட்டது. அமர் சிங் அலறியபடி கழிவறை கதவைத் திறக்க ஓடினார். அதற்குள் சாவர்க்கர் துளை வழியாக நழுவி தண்ணீரில் குதித்துவிட்டார்.” கான்ஸ்டபிள்கள் இருவரும் கத்தியபடி வெளியே ஓடினர்.
சாவர்க்கரின் கோரிக்கையை பிரெஞ்சு அதிகாரியால் புரிந்துகொள்ள முடியவில்லை
பட மூலாதாரம், savarkarsmarak.com
ஒரு நபர் தண்ணீரில் குதிப்பதை டெக்கில் இருந்த காவலர் கண்டார். அவர் அந்த நபர் மீது இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். ஆனால் சாவர்க்கர் அந்தத் தோட்டாக்களில் இருந்து தப்பித்துவிட்டார்.
துறைமுகத்தில் இருந்து கப்பல் எவ்வளவு தூரத்தில் நங்கூரமிட்டு இருந்தது என்பது பற்றிப் பல கதைகள் உள்ளன. ஒரு கிலோமீட்டர் என்று சில ஆதாரங்கள் கூறுகின்றன. அதேநேரம் அந்த தூரம் 30 மீட்டர் வரை இருக்கலாம் என்று வேறு சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
சிறிது தூரம் நீந்திய சாவர்க்கர் நிலத்தை அடைந்ததும் ஓடத் தொடங்கினார்.
“கான்ஸ்டபிள் ‘திருடன்! திருடன்! பிடி! பிடி என்று கத்தியவாறு சாவர்க்கரை துரத்தினார். அவருடன் கப்பல் பணியாளர்கள் சிலரும் ஓடினர். சாவர்க்கர் சுமார் 200 அடி ஓடினார். அதற்குள் அவருக்கு மூச்சு வாங்கியது. டாக்ஸியை நிறுத்தும்படி அவர் கத்தினார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார்,” என்று பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள ‘சாவர்க்கர் கேஸ்-கண்டக்ட் ஆஃப் தி போலீஸ் அஃபீஷியல்ஸ்’ ஆவணம் குறிப்பிடுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பகுதியில் இருந்த ஐயர், மேடம் காமா, வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா ஆகியோர் சாவர்க்கருக்கு உதவ சரியான நேரத்தில் செல்ல முடியாமல் போனது.
“இதற்கிடையில், சாவர்க்கரை துரத்துபவர்களுடன் பிரெஞ்சு ராணுவ அதிகாரி பிரிகேடியர் பெஸ்கியும் சேர்ந்தார். சிறிது நேரத்தில் அவர் சாவர்க்கரை பிடித்துவிட்டார். பிடிபட்ட பிறகு சாவர்க்கர் பிரெஞ்சு அதிகாரியை நோக்கி, ‘நீங்கள் என்னைக் கைது செய்யுங்கள். என்னை மாஜிஸ்திரேட் முன் அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார்,” என்று விக்ரம் சம்பத் எழுதுகிறார்.
இப்போது பிரெஞ்சு மண்ணில் இருப்பதால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அது பிரெஞ்சு சட்டங்களின்படி இருக்கும் என்று சாவர்க்கர் நம்பினார். ஏனெனில் பிரிட்டிஷ் சட்டங்கள் பிரெஞ்சு மண்ணில் பொருந்தாது.
அரசியல் கைதியாக பிரான்ஸில் அடைக்கலம் பெற அவருக்கு உரிமை இருந்தது. ஆனால் பிரிகேடியர் பெஸ்கிக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாது. சாவர்க்கர் சொல்வதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பட மூலாதாரம், savarkarsmarak.co
கைவிலங்கிடப்பட்ட சாவர்க்கர் பம்பாய்க்கு அழைத்து வரப்பட்டார்
பெஸ்கி சாவர்க்கரை இந்திய காவல்துறையிடம் ஒப்படைத்தார். அவர்கள் அவரை இழுத்தபடி கேபினுக்கு கொண்டு வந்தனர். அங்கு சாவர்க்கர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். அவருக்கு கைவிலங்கு பூட்டப்பட்டது.
அதன் பிறகு அவர் கேபினை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அவர் கழிவறைக்குச் செல்லும்போது ஒரு போலீஸ்காரர் அவருடன் உள்ளே செல்வார்.
சாவர்க்கரின் தப்பிக்கும் முயற்சி ஏற்கெனவே பவர் மற்றும் பார்க்கரின் பணி வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது. அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
மார்ஸேவில் இரண்டு நாட்கள் இருந்த பிறகு ‘எஸ் எஸ் மோரியா’ கப்பல் ஜூலை 9ஆம் தேதி மீண்டும் புறப்பட்டது. ஜூலை 17 அன்று கப்பல் ஏடனை அடைந்தது. அங்கு சாவர்க்கரும் அவரைக் கண்காணிப்பவர்களும் மற்றொரு கப்பலான ‘செல்செட்’இல் ஏறினர்.
ஜூலை 22ஆம் தேதி இந்தக் கப்பல் பம்பாய்க்கு வரும் வரை சாவர்க்கர் இரவும் பகலும் கைவிலங்குடன் வைக்கப்பட்டார். பின்னர் பம்பாய் போலீஸ் அதிகாரி கென்னடியிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
அன்று மதியமே டாக்ஸியில் விக்டோரியா டெர்மினஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நாசிக் செல்லும் ரயிலில் ஏற்றப்பட்டார். நாசிக்கை அடைந்ததும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சாவர்க்கரின் தப்பிக்கும் முயற்சிக்கு பவர் மீது பொறுப்பு சுமத்தப்பட்டது. பதவி இறக்கம் செய்யப்பட்ட பின்னர் அவருடைய சம்பளம் மாதம் 100 ரூபாய் குறைக்கப்பட்டது.
சாவர்க்கரின் கைது பற்றி நாலாபுறமும் விமர்சனம்
பட மூலாதாரம், NANA GODSE
இதற்கிடையில் பிரிகேடியர் பெஸ்கியின் செயலை ‘தேசிய ஊழல்’ என்று பிரெஞ்சு பத்திரிகைகள் விமர்சித்தன.
பிரெஞ்சு மண்ணில் ஓர் அரசியல் கைதியை மீண்டும் கைது செய்ய பிரிட்டிஷ் அதிகாரிகளை அனுமதித்த விதம் பிரான்ஸின் இறையாண்மையை மீறும் செயல் என்று அவை கூறின.
பிரான்ஸின் ‘Le Monde’, ‘Le Matin’,’Le Temps’ உள்பட அனைத்து நாளிதழ்களும் சாவர்க்கர் பிரான்ஸில் மீண்டும் கைது செய்யப்பட்டதை விமர்சித்தன.
சில நாட்களுக்குப் பிறகு பிரிட்டனுக்கான பிரெஞ்சு தூதர் பியர் கோம்பன், பிரெஞ்சு அரசின் அனுமதியின்றி ஆங்கிலேயர்கள் கைது செய்த சாவர்க்கரை பிரான்ஸிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.
இந்த விவகாரம் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டு செல்லப்பட்டது.
பட மூலாதாரம், savarkarsmarak.com
சாவர்க்கருக்கு விதிக்கப்பட்ட இரண்டு தண்டனைகள்
உணர்ச்சியைத் தூண்டும் விதமாக உரையாற்றியது தொடர்பான வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அந்தமானில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு மாதம் கழித்து 1911 ஜனவரி 30ஆம் தேதி ஜாக்சன் கொலை வழக்கின் தீர்ப்பும் அறிவிக்கப்பட்டது. இம்முறையும் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
“இரண்டு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவர் ஒரே நேரத்தில் அனுபவித்து முடிப்பாரா?
இல்லை. சாவர்க்கர் முதலில் 25 ஆண்டுகள் தண்டனையை அனுபவிப்பார். பின்னர் இரண்டாவது 25 ஆண்டுகளை அனுபவிப்பார். அதாவது மொத்தம் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிப்பார் என இதற்குப் பொருள்,” என்று வைபவ் புரந்தரே எழுதுகிறார்.
சிறையில் மனைவியுடன் உணர்வுபூர்வமான சந்திப்பு
இதற்கிடையில் சாவர்க்கரை பிரான்ஸுக்கு திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் பிரிட்டனுக்கு இல்லை என்று ஹேக் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இந்த முடிவு ஐரோப்பா முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. ஒரு காலத்தில் பாலகங்காதர திலகர் எந்த சிறை அறையில் அடைக்கப்பட்டாரோ அதே அறையில் சாவர்க்கரும் வைக்கப்பட்டார்.
பட மூலாதாரம், savarkarsmarak.com
ஒரு நாள் சாவர்க்கர் தனது அறையில் அமர்ந்திருந்தபோது சிறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு அவரிடம் கூறப்பட்டது. அவர் அங்கு சென்றபோது அங்கு தனது மனைவி யமுனா அமர்ந்திருப்பதை அவர் கண்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சட்டப்படிப்பு படிக்க அவர் இங்கிலாந்து செல்லும்போது தனது மனைவிடம் இருந்து அவர் விடைபெற்றிருந்தார்.
“தனது கணவர் இங்கிலாந்தில் இருந்து வக்கீல் கவுனில் திரும்பி வருவார் என்று யமுனா நினைத்தார். ஆனால் சிறை உடையில் அவரை ஒரு குற்றவாளியாகக் கண்டார். இந்தச் சந்திப்பே கடைசியானதாகவும் இருக்கக்கூடும்.
காலாபானி கைதிகள் தங்கள் குடும்பங்களை அந்தமானுக்கு அழைத்து வந்து குடியேற அனுமதி கிடைக்கும் என்று தான் கேள்விப்பட்டதாகவும், கடவுளின் விருப்பம் இருந்தால் மீண்டும் சந்திக்கலாம் என்றும் சாவர்க்கர் தனது மனைவிக்கு ஆறுதல் கூறினார்,” என்று வைபவ் புரந்தரே எழுதுகிறார்.
“நான் உங்களைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறேன். உங்களை நீங்கள் நல்லபடியாக கவனித்துக் கொண்டால் நான் நன்றாக இருப்பேன் என்று என் மனைவி பதில் சொன்னார். அப்போது ஜெயில் வார்டன் வந்து எங்கள் சந்திப்புக்கான நேரம் முடிந்துவிட்டது என்றார்.
மனைவியிடமிருந்து விடைபெற்ற பிறகு நான் கால் விலங்குகள் பூட்டப்பட்டிருந்த போதிலும் தன்னம்பிக்கையுடன் நடக்க முயன்றேன். என் மனைவி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். கால் விலங்கு இருப்பதால் நடப்பதற்குச் சிரப்படுகிறேன் என்ற எண்ணத்தை அவளுக்கு ஏற்படுத்த நான் விரும்பவில்லை,” என்று சாவர்க்கர் பின்னர் தனது சுயசரிதையில் எழுதினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு