ஐபிஎல் 2025 தொடரின், சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில், இரு அணிகளுமே வெற்றியுடன் தங்களது கணக்கைத் தொடங்கியுள்ளன. மார்ச் 23ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அதேபோல, ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
எனவே அந்த வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
இதுவரை மொத்தமாக 33 ஐபிஎல் போட்டிகளில், இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 21 போட்டிகளில் வென்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. ஆர்சிபி அணி, 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 2008, மே 20ஆம் தேதி கடைசியாகவும், முதல்முறையாகவும் சிஎஸ்கே அணியை 14 ரன்களில் ஆர்சிபி அணி வென்றது. அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக 8 முறையும் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபியால் வெல்ல முடியவில்லை.
களத்திலும் சரி, இணையத்திலும் சரி இரு அணிகளுக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தைப் பற்றி தனியாக விவரிக்கத் தேவையில்லை. எனவே இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், நூர், அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தான். குறிப்பாக சிஎஸ்கே அணியில் அஸ்வின் 12 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளது சுழற்பந்துவீச்சைப் பலப்படுத்தியுள்ளது.
டாஸ் வென்று ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு செய்தால், இவர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு, ரன்களைக் குவிப்பது எளிதாக இருக்காது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 11 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் ஆர்சிபி தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும் பிற்பகுதியில் அடுத்தடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்றது. எனவே இந்தப் போட்டியின் முடிவை வைத்து எதையும் கணிக்க முடியாது.
ஐபிஎல் 2024 சீசனில், ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகள், 8 தோல்விகளுடன் 46% வெற்றி சதவீதத்தைப் பெற்றது. அதேநேரத்தில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 50 சதவீத வெற்றிகளைப் பெற்றது. ஏறக்குறைய சிஎஸ்கேவுக்கு இணையாக எந்தவிதத்திலும் குறைவில்லாத ஃபார்மில்தான் ஆர்சிபி இருக்கிறது.