படக்குறிப்பு, இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வந்தாரா உயிரியல் பூங்காவைத் திறந்து வைத்தார்கட்டுரை தகவல்
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான மாபெரும் தனியார் விலங்கியல் பூங்கா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சட்டவிரோதமாக விலங்குகள் வாங்கப்பட்டு தவறாக நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை அடுத்து, கோடீஸ்வரர் அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான உலகிலேயே மிகப் பெரிய தனியார் விலங்கியல் பூங்காவான ‘வந்தாரா’ அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பார்வையிடுவார்கள்.
வந்தாரா விலங்கியல் பூங்கா குறித்து எழுந்துள்ள வனவிலங்கு சட்டங்களை மீறல், நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் ஆகியவற்றையும் விசாரணைக் குழு ஆராயும்.
விலங்கியல் பூங்கா மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமாக எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியபோதிலும், அதிகாரிகள் தங்கள் கடமைகளில் இருந்து தவறியதாக குற்றம் சாட்டப்பட்டதால் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி நடத்தும் வந்தாரா விலங்கியல் பூங்காவில், நூற்றுக்கணக்கான யானைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகள் உள்ளன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக பூங்கா நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் குறித்து விலங்கியல் பூங்கா நிர்வாகம் நேரடியாகக் கருத்து தெரிவிக்காவிட்டாலும், “வந்தாரா விலங்கியல் பூங்கா, வெளிப்படைத்தன்மை, கருணை மற்றும் சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் நோக்கமும் கவனமும் விலங்குகளை மீட்பது, அவற்றுக்கு மறுவாழ்வு அளிப்பது மற்றும் பராமரிப்பது என்பதாகும்,” என்று தெரிவித்துள்ளது.
3,500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் வந்தாரா, சுமார் 2,000 உயிரினங்களுக்கு தாயகமாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மறுவாழ்வு மையமாக கருதப்படும் வந்தாரா விலங்கியல் பூங்கா, கடந்த ஆண்டு தான் திறந்துவைக்கப்பட்டது.
உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த அனந்த் அம்பானியின் ஆடம்பரமான திருமண நிகழ்வுகளில் ஒன்றாக, அவர்களது திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளுக்கான இடங்களில் வந்தாரா பூங்காவும் ஒன்றாக இருந்தது.
இந்த விலங்கு பூங்காவானது, நாட்டின் மேற்கு மாநிலமான குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்திருக்கும் இது உலகின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகும்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளில் ஒன்றில் வந்தாரா மிருகக்காட்சி சாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோதியால் வந்தாரா மிருகக்காட்சி சாலை திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவின்போது, விலங்கியல் பூங்கா அமைக்கும் முயற்சி “உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என்று பாராட்டிய பிரதமர், தனது X பதிவில், வந்தாராவில் தான் இருந்தபோது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.
வந்தாரா விலங்கியல் பூங்கா, பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படவில்லை என்பதுடன், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து நீண்ட காலமாக கடும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.
வந்தாரா குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவை “ஆதாரமற்ற” குற்றச்சாட்டுகளைக் கொண்டதாகத் தெரிவித்தது.
இருப்பினும், “சட்டப்பூர்வ அதிகாரிகள் அல்லது நீதிமன்றங்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து, நீதியின் நோக்கங்களுக்காக சுயாதீனமான உண்மை மதிப்பீடு ஒன்றைக் கோருவது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். விதிமீறல் ஏதேனும் இருந்தால், இந்த விசாரணை அதை வெளிப்படுத்தக்கூடும்.” என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
பட மூலாதாரம், Vantara/Instagram
படக்குறிப்பு, வந்தாராவில் 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன
அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான நியூஸ்18 வலைத்தளத்தின்படி, வந்தாராவில் சுமார் 200 யானைகள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் சிங்கங்கள் போன்ற 300 பெரும் பூனைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட தாவரவகைகள் மற்றும் 1,200 ஊர்வன என பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய திரைப்பட பிரபலங்கள் வந்தாரா உயிரியல் பூங்காவை பார்வையிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. இந்த நிகழ்வில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச வணிகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கோலாப்பூர் நகரில் உள்ள ஒரு சமண கோவிலில் மூன்று தசாப்தங்களாக பராமரிக்கப்பட்டுவந்த மகாதேவி என்ற யானை நோய்வாய்ப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஜூலை மாதம் வந்தாராவிற்கு மகாதேவி மாற்றப்பட்டதால் மகாராஷ்டிரா மாநில ஜெயின் சமூகத்தினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த விலங்கியல் பூங்கா, போராட்டங்களின் மையமாக உருவெடுத்துள்ளது. கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, மகாதேவி யானையை மீண்டும் அழைத்து வர மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் வந்தாரா விலங்கியல் பூங்கா அமைந்திருக்கும் இடம், அதன் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை, அங்குள்ள சில விலங்கினங்களுக்குப் பொருந்தாது என்று ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும், பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்திருப்பது விலங்குகளுக்கு ஏற்றதல்ல என்றும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஓய்வுபெற்ற நான்கு நீதிபதிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அறிவித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் ‘வந்தாரா அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்’ குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இந்த விசாரணைக் குழு, யானைகள் உட்பட விலங்குகளை சட்டவிரோதமாக கையகப்படுத்துவது, வனவிலங்கு சட்டங்களை மீறுதல், நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
“காலநிலை நிலைமைகள் தொடர்பான” புகார்கள் மற்றும் தொழில்துறை மண்டலத்திற்கு அருகில் விலங்கியல் பூங்கா அமைந்திருப்பது குறித்த குற்றச்சாட்டுகளையும் சிறப்பு விசாரணைக் குழு ஆராயும்.
செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 26) சிறப்பு விசாரணைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களுக்கானப் பொறுப்புகள் மற்றும் பணிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை செப்டம்பர் 15-ஆம் தேதியன்று நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.