படக்குறிப்பு, உலகளவில் மிகக் கடுமையான போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் உள்ள நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கான அவசிய நடவடிக்கை இது என சிங்கப்பூர் கூறுகிறது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மூன்று பேர் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதன்மூலம், அந்நாட்டில் இந்தாண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2003ம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் மிக அதிகளவாகும்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணை நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இது நடந்துள்ளது.
உலகளவில் மிகக் கடுமையான போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் உள்ள நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று. தெற்கு ஆசியாவில் பெரும் பிரச்னையாக உள்ள போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கான அவசிய நடவடிக்கை இது என சிங்கப்பூர் அரசு கூறுகிறது.
சிங்கப்பூரில் 15 கிராமுக்கு அதிகமாக டயாமார்ஃபின், 30 கிராமுக்கு அதிகமாக கோகெய்ன், 250 கிராமுக்கு அதிகமாக மெத்தம்ஃபெட்டமைன் மற்றும் 500 கிராமுக்கு அதிகமாக கஞ்சாவை (cannabis) விற்பது, வழங்குவது, ஓரிடத்திற்கு கொண்டு செல்வது அல்லது அதை கையாள்வது உள்ளிட்ட கடத்தல் நடவடிக்கைகளில் ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
எதிர்ப்பு எழுவது ஏன்?
இதுதொடர்பாக வழக்கு தொடுத்துள்ள ஏழு ஆர்வலர்களும், சிங்கப்பூரின் கட்டாய மரண தண்டனை, அரசியலமைப்பு வழங்கியுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமைகளையும் சட்டத்தின் முன் சம பாதுகாப்பு ஆகியவற்றையும் மீறுவதாக வாதிடுகின்றனர்.
“சட்டப்படி தேவைப்பட்டால் அன்றி, யாருடைய உயிரையோ அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தையோ பறிக்க முடியாது.” என அரசியலமைப்பு கூறுகிறது.
“சிங்கப்பூரின் நாகரிகமற்ற போதைப்பொருள் தடுப்பு கொள்கைகள், சர்வதேச அளவில் அதிக விதிவிலக்கானதாக உள்ளது,” என, சிங்கப்பூரில் இயங்கும் ஃடிரான்ஸ்ஃபர்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் எனும் ஆர்வலர்கள் குழு கூறுகிறது.
மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை தொடரும் வெகுசில நாடுகளுள் சிங்கப்பூரும் ஒன்று என அக்குழு குறிப்பிடுகிறது.
ஆனால், மரண தண்டனையை நீக்குவது மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என, சிங்கப்பூர் அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
மோசமான குற்றங்கள், வன்முறை, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள், அப்பாவி இளம் சிறார்களின் உயிரிழப்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே சண்முகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறினார்.
“கொள்கை வகுப்பாளர்களாக, நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கிவிட்டு, பெரும்பான்மை மக்களின் பாதுகாப்புக்கு தேவையானதை செய்கிறோம். சிங்கப்பூரில் இன்னும் பல அப்பாவி மக்களின் இறப்புக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கையை எடுத்தால், எங்களால் அமைதியாக இருக்க முடியாது,” என அவர் ஜனவரி மாதம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மரண தண்டனைக்கு எதிராக சிங்கப்பூரில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப்படம்)
கடந்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களுள் ஓட்டுநர் சாமிநாதன் செல்வராஜுவும் ஒருவர்.
2013ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி இரவு, டயாமார்ஃபினை (ஹெராயின்) 301.6 கிராம் அளவுக்கு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கொண்டு சென்றதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.
தன் நிறுவனத்தின் டிரக்கை முன்பு தான் ஓட்டிச் சென்றதாகவும் ஆனால் போதைப்பொருள்கள் சிங்கப்பூருக்குள் கொண்டு வரப்பட்டபோது தான் ஓட்டவில்லை எனவும் அவர் வாதிட்டார். அதே வாகனத்தை இன்னும் சில ஓட்டுநர்களும் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார்.
அந்த வாகனத்தில் சாமிநாதனின் கையெழுத்துடன் கூடிய முன்பே எழுதப்பட்ட குடிவரவு அட்டைகள் இருந்ததையும், அதில் ஒன்றில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் சிங்கப்பூர் முகவரி குறிப்பிடப்பட்டிருந்ததயும் விசாரணை குழுவினர் கண்டுபிடித்தனர். ஆனால், மலேசியாவை சேர்ந்தவரான சாமிநாதன், அதனை தான் எழுதவில்லை என வாதிட்டிருந்தார்.
அவருடைய வாதத்தை நீதிபதி புறக்கணித்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவர் தூக்கிலிடப்பட்டார்.
போதைப்பொருள் தடுப்பு சட்டம் மீதான விமர்சனம்
கடந்த சில ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிரான சட்ட வழக்குகளில் சாமிநாதன் ஈடுபட்டிருந்தார். அவற்றுள், கடந்த 2022ம் ஆண்டில், சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களின் சில அனுமானங்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்ற மூன்று பேருடன் இணைந்து தாக்கல் செய்த வழக்கும் அடங்கும்
உதாரணமாக, சிங்கப்பூரின் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் போதைப்பொருட்களுடன் பிடிபடும் ஒருவர், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை போதைப்பொருள் கடத்தல்காரராகவே அனுமானிக்கப்படுகிறது.
மற்றொரு உதாரணமாக, சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் இடத்தின் சாவிகளை வைத்திருக்கும் ஒருவர், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவற்றை அவர் வைத்திருந்ததாகவே அனுமானிக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான வழக்கை சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. “சமூகத்திற்கு துன்புறுத்தல் என கருதப்படும் ஒரு பிரச்னையை தீர்க்கும் விதமாகவே” சட்டம் எழுதப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அப்போது தெரிவித்திருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம், சாமிநாதன் மற்றும் மற்ற மூன்று கைதிகளும் சிங்கப்பூர் குடியரசு தலைவரிடம் கருணை மனுவை சமர்ப்பித்தனர். சிங்கப்பூரில் இத்தகைய மற்ற மனுக்கள் நிராகரிக்கப்படுவது போலவே இந்த மனுக்களும் நிராகப்பட்டன.
சிங்கப்பூரில் கொலை மற்றும் ஆள்கடத்தல் போன்ற மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் மரண தண்டனை விதிக்கப்படுவது பெரும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்டவர்கள் உட்பட விளிம்புநிலை சமூகங்களிலிருந்து பணிக்கு அமர்த்தப்பட்ட கடத்தல்காரர்கள் மற்றும் போதைப் பொருட்களை கொண்டு செல்பவர்களை இந்த சட்டத்தின்படி முதன்மையாக தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் முக்கிய நபர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்றும் விமர்சகர்கள் முக்கிய வாதமாக முன்வைக்கின்றனர்.
சர்வதேச சட்டம் கூறுவது என்ன?
மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மெர்வின் சியோங் கூறுகையில், “இன்னும் அதிர்ச்சிகரமான சர்வதேச குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படாதபோது, கொலை அல்லது போதைப்பொருட்கள் தொடர்பான சில குற்றங்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வது சில சமயங்களில் சவாலாக உள்ளது.” என்றார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவி, 125 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ரோம் உடன்படிக்கையின்படி, இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் போன்ற மிக மோசமான குற்றங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என அவர் குறிப்பிடுகிறார்.
எனினும், மரண தண்டனை உலகளவில் பாதுகாப்பான இடங்களுள் ஒன்றாக சிங்கப்பூரை மாற்றுவதற்கு உதவியுள்ளதாக, சிங்கப்பூர் அரசு வாதிடுகிறது. “பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்திற்கு மிக மோசமான தீங்கு விளைவிக்கும்” குற்றங்களுக்கு மட்டுமே இத்தண்டனை விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தால் ஆணையிடப்பட்ட 2023ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2,000 குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களில் சுமார் 69% பேர், குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருட்களை கடத்தியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை என்பது தகுந்த தண்டனையே என தெரிவித்துள்ளனர்.