டேவிட் அட்டன்பரோவின் ஆவணப் படமாக இருந்தாலும், டிஸ்னி திரைப்படமாக இருந்தாலும், சிங்கத்தின் கம்பீரமான கர்ஜனை உங்களுக்குப் பழக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் உண்மையில் இரண்டு வெவ்வேறு வகையான சிங்கக் கர்ஜனைகள் இருப்பதாக இப்போது விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சிங்கங்கள் எழுப்பும் ஒலிகளின் வகைகளைப் பற்றிய புதிய ஆய்வில், பிரபலமான முழு குரலெடுத்து எழுப்பும் கர்ஜனையில் இருந்து வேறுபட்ட மற்றொரு கர்ஜனையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் அதை “இடைநிலை கர்ஜனை” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னால் உள்ள குழு, இது சிங்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும் என்று நம்புகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிங்கங்கள் தங்கள் கூட்டத்தின் பிற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள கர்ஜனைகளைப் பயன்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஆய்வாளர்கள் சிங்கத்தின் கர்ஜனையில் உள்ள குறிப்பிட்ட ஒலிகளைக் கண்டறிய வெவ்வேறு சிங்கங்களின் ஒலியைப் பகுப்பாய்வு செய்தனர்.
அவர்களால் ஒலிகளை நான்கு வெவ்வேறு சிங்க அழைப்பு வகைகளாகப் பிரிக்க முடிந்தது: முனகல், முழு குரல் கர்ஜனை, இடைநிலை கர்ஜனை (புதிய கண்டுபிடிப்பு), மற்றும் உறுமல்.
இடைநிலை கர்ஜனைகள் முழு குரல் கர்ஜனைகளைவிடக் குறுகலானவை. அதோடு, அவை வேறுபட்ட மிக உயர்ந்த அதிர்வெண்ணையும் கொண்டுள்ளன.
ஒரு ஒலியால் ஒவ்வொரு விநாடிக்கும் உருவாக்கப்படும் ஒலி அலைகளுடைய எண்ணிக்கையின் அளவீடே அதிர்வெண் என்றழைக்கப்படுகிறது.
அதிர்வெண் அதிகமாக இருந்தால், ஒலியின் சுருதி அதிகமாக இருக்கும். அவர்களால் வெவ்வேறு வகையான சிங்க கர்ஜனைகளை 80%க்கும் அதிகமான துல்லியத்துடன் பிரிக்க முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தனிப்பட்ட சிங்கங்களின் கர்ஜனைகளைப் பற்றி விஞ்ஞானிகளால் மேலும் புரிந்துகொள்ள முடிந்தால், அவர்கள் ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த விலங்குகளின் ஒலியைக் கேட்டு அவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ளவும் முடியும்.
சிங்கங்கள் ஏன் கர்ஜிக்கின்றன?
இந்த ஆராய்ச்சி எகாலஜி அண்ட் எவொல்யூஷன் இதழில் வெளியிடப்பட்டது. அதில் விஞ்ஞானிகள், கர்ஜனை என்பது சிங்கங்கள் எழுப்பும் பல ஒலிகளில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த கர்ஜனைகளில் “மியூஸ் (mews), உறுமல் (snarls), சஃப்கள் (chuffs), உறுமல்கள் (grunts) மற்றும் முனகல்கள் (moans)” ஆகியவை அடங்கும்.
சிங்கங்கள் தொலைவில் உள்ள தங்கள் கூட்டத்தின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்க கர்ஜனைகளைப் பயன்படுத்துகின்றன.
அதேபோல, சிங்கங்கள் ஒரு நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைக் காட்டுவதற்கும் கர்ஜிக்கின்றன.
ஒரு சிங்கத்தின் அழைப்பில் இருந்து அதன் வயது மற்றும் அது ஆணா அல்லது பெண்ணா என்பதையும் மற்ற சிங்கம் புரிந்துகொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.