பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக பல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தாக்குதல் நடந்த போது அங்கு ஒரு யூத நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் இருவரில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளன. அந்த இருவரும் சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில் பிலிப்பின்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர், மேலும் அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி தெரிவித்தார்.
தந்தை சஜித்தும், மகன் நவீத்தும் கடந்த மாதம் பிலிப்பின்ஸ் சென்றதை ஆஸ்திரேலிய போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சஜித் இந்திய பாஸ்போர்ட்டிலும், அவரது மகன் நவீத் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டிலும் பயணம் செய்ததை பிலிப்பின்ஸ் குடிவரவு பணியகம் உறுதி செய்துள்ளது.
தெலங்கானா போலீஸ் கூறுவது என்ன?
தெலங்கானா மாநில போலீசார், சஜித் அக்ரம் குடும்பம் ஹைதராபாத்தைச் சேர்ந்தது என்று தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் கூற்றுப்படி, பி.காம் பட்டதாரியான சஜித், 1998 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.
சஜித் ஐரோப்பாவில் பிறந்த ஒரு பெண்ணை ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நவீத் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 1998-ல் இருந்து சஜித் ஆறு முறை இந்தியாவுக்கு வந்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய ஊடகங்களிலும் சஜித் மற்றும் நவீத் குறித்துப் பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
‘காரில் ஐ.எஸ் கொடிகள்’
“அமெரிக்க சட்ட அமலாக்க முகமையால் வழங்கப்பட்ட குறிப்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அதன்படி, சஜித் அக்ரம் மற்றும் நவீத் அக்ரம் ஆகியோர் அந்த யூத நிகழ்வு நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு மேம்பாலத்தின் மீது நின்றுகொண்டு, “அல்லாஹு அக்பர்” என்று முழக்கமிட்டபடி இந்தப் படுகொலையை செய்துள்ளனர் “என ஏபிசி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
“தாக்குதலின் போது தந்தை சஜித் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்றும், மகன் நவீத் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.”
”நவீத் அக்ரம் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரில் இருந்து ஐஇடி (மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்) மற்றும் ஐஎஸ் கொடிகள் கண்டெடுக்கப்பட்டதாக நியூ சௌத் வேல்ஸ் காவல் ஆணையர் மெல் லான்யன் தெரிவித்தார். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்” என்று ஏபிசி நியூஸ், செய்தி வெளியிட்டுள்ளது.

“தாக்குதல் நடத்திய இருவரும், நவம்பர் மாதம் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு மேற்கொண்ட பயணம் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள், பயணத்தின் நோக்கம் என்ன, அங்கு அவர்கள் சென்ற இடங்கள் எவை என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக லான்யன் தெரிவித்தார்” என்றும் ஏபிசி நியூஸ் குறிப்பிட்டது.
மேலும், “இந்தியாவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சஜித் அக்ரம், 1998-ல் ஆஸ்திரேலியாவிற்குப் குடிபெயர்ந்தார். அங்கு திருமணம் செய்து கொண்ட அவருக்கு, ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர்” என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்ததாக ஏபிசி நியூஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
“ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற பிறகு, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் சஜித் அக்ரம் குறைந்த அளவிலேயே தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் குடும்ப காரணங்களுக்காக ஆறு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். சஜித் அக்ரம் இந்தியாவில் இருந்த காலத்தில் அவர் மீது ‘எந்தவிதமான குற்றப் பதிவுகள் இல்லை’ என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.” என்கிறது அச்செய்தி.
பட மூலாதாரம், Getty Images
‘உங்கள் வெறுப்பை இங்கே கொண்டு வர வேண்டாம்’
இந்தத் தாக்குதலில் இந்தியக் குடிமகன் மற்றும் அவரது மகனின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஆஸ்திரேலியாவின் குடிவரவு கொள்கை குறித்துக் கேள்விகள் எழுப்பப்படத் தொடங்கியுள்ளன.
“ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய குடிவரவு கொள்கையை வெளியிடுவதை ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சி ஒத்திவைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே, இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கூட்டணியின் புதிய குடிவரவு கொள்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது” என்று ஆஸ்திரேலியாவின் சிபிஎஸ் செய்திகள் குறிப்பிட்டது.
“குடிவரவு குறித்த விவாதத்தைத் தொடர உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அழுத்தம் இருந்தபோதிலும், சமூக ஒற்றுமை பாதிப்படையக்கூடும் மற்றும் இந்த உணர்ச்சிகரமான நேரத்தில் புதிய விவாதங்கள் கிளம்பக்கூடும் என்ற கவலையில் சூசன் லே அந்தக் கொள்கையை நிறுத்தி வைத்துள்ளார்.”
“ஆஸ்திரேலிய மதிப்பீடுகளை மையமாகக் கொண்டு குடியேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்த தாக்குதலைத் தொடர்ந்து லிபரல் கட்சி எம்.பி ஆண்ட்ரூ ஹஸ்டி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார். நம்மை நேசிப்பவர்கள் யார், நம்மை வெறுப்பவர்கள் யார் என்பதைக் குறித்து பேச வேண்டிய தெளிவான நேரம் இது என அந்த எம்.பி தெரிவித்தார்” என்கிறது அச்செய்தி.
”ஒன் நேஷன் கட்சித் தலைவர் பாலின் ஹான்சன் செவ்வாய்க்கிழமை அன்று துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு சென்றார். அப்போது ஹான்சன், ‘இங்கு வருபவர்கள், ஆஸ்திரேலியர்களாக எங்கள் சமூகத்தில் இணைய விரும்புகிறார்களா? உங்கள் வெறுப்பை இந்த நாட்டிற்கு கொண்டு வராதீர்கள். அதுதான் என் செய்தி’ என்று கூறினார்.” என்கிறது சிபிஎஸ் செய்தி.
பட மூலாதாரம், Getty Images
பிலிப்பின்ஸ் சென்றது ஏன்?
தி சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளிதழ், இந்தியாவின் ஆங்கில நாளிதழான தி இந்துவை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், “சஜித் அக்ரமின் குடும்பத்தினர் இன்னும் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர், அவரது மூத்த சகோதரர் ஒரு மருத்துவர். மறைந்த அவரது தந்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றியவர்” என்று தெரிவித்துள்ளது.
”தாக்குதல் நடத்தியவர்களின் காரிலிருந்து ஐஎஸ் கொடிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். தந்தையும் மகனும் ஏன் நவம்பர் மாதம் பிலிப்பின்ஸ் சென்றனர் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் இன்னும் செயல்பாட்டில் இருக்கும் சில நாடுகளில் பிலிப்பின்ஸும் ஒன்று” என்று சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

”ஆறு ஆயுதங்கள் சஜித் அக்ரம் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மகனுக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் நீண்டகாலத் தொடர்பு இருந்தபோதிலும், சஜித் எவ்வாறு சட்டப்பூர்வமாக அதிநவீன ஆயுதங்களை வாங்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நவீத் அக்ரம் சிட்னியின் மேற்குப் பகுதியில் தெருக்களில் பிரசாரம் செய்யும் குழு ஒன்றில் தன்னார்வலராக இருந்தார். இந்தக் குழுவிற்குப் பல ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பு இருந்தது.” என்றும் சிட்னி மார்னிங் ஹெரால்டு தெரிவித்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு