சென்னை: சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2 கோடி 92 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நவீன மீன் அங்காடியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் தேதி திறந்து வைத்தார். 102 கடைகள் அமைக்க உள்ள இந்த அங்காடியில் முறையாக திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்தாமல் துவங்கியுள்ளதாகக் கூறி, க்ரீன் கேர் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சையது கட்டுவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், “1022 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், முறையான திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.
மீன் அங்காடியில் முறையான திடக்கழிவு மேலாண்மையும், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதியும் ஏற்படுத்தாவிட்டால் அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மீன் கழிவுகள் கூவம் நதியில் கொட்டப்பட வாய்ப்புள்ளது. இதனால், கூவத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் வீணாகும். இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த வின்னப்பத்துக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
நவீன மீன் அங்காடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடக் கழிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். முறையான திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள், வாகனம் நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திய பிறகே நவீன மீன் அங்காடியை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.மாலா மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.