2
இடுப்பில் யாரோ தொட்டது போலிருக்க, திடுக்கிட்டு விழித்தாள் சிந்து. பக்கத்து இருக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வயதான பெண்மணி கூட இவளை ஒட்டி அமர்ந்திருக்கவில்லை. ஒருவேளை தவறுதலான உணர்வாக இருக்கலாமென்று எண்ணியவள் அடைத்திருந்த சன்னல் கண்ணாடியில் தலைசாய்த்து மீண்டும் தூங்கத் தொடங்கினாள் சிந்து.
கொஞ்சநேரத்திற்குள்ளாக மீண்டும் அதே போல் ஆனது. இம்முறை யாரோ கிள்ளியது போலிருக்க இருக்கையிலிருந்து எழுந்து நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். வெடிவெடித்தால்கூட விழிக்கமாட்டார்கள் போல, ஆழ்ந்து உறங்குவதுபோல் ஆளுக்கொரு திசையில் முகத்தைத் திருப்பிய நிலையில் இருவர். அப்பாவும் மகனுமாக இருக்கக்கூடும்.
அவர்களின் முக ஜாடை உணர்த்தியது. அந்தப் பெரியவர் மட்டும் சற்று அசைந்து கொடுத்துத் தன்னை நேராக்கிக் கொண்டார். ஒருவேளை இருக்கைக் கோளாறாக இருக்குமோ என்றெண்ணி, அமரந்திருந்த இடத்தைத் தடவிப் பார்த்தாள். எல்லாம் சரியாகவே இருந்தன. இதுதான் சமயமென மல்லுக்கட்டி அவள் இழுத்து வந்திருந்த தூக்கம் தப்பித்தோம் பிழைத்தோமென்று அவளிடமிருந்து பிரிந்து போனது. மணி இரண்டு பத்துயென கைபேசியை உயிர்ப்பித்து தெரிந்து கொண்டாள்.
பௌர்ணமி நிலவு உண்டாக்கிய ஒளி மற்றும் மின்விளக்குகளின் வெளிச்சமென பளிச்சென்றிருந்த சாலை வழியே, ஒரு நகரத்தின் ஊடாகக் கடந்து கொண்டிருந்தது அவள் பயணிக்கும் பேருந்து. பெயர்ப்பலகையில் எழுதியிருக்கும் ஊர்ப்பெயரை வாசித்துத் தெரிந்துகொள்ளக் கூடச் சிரமமாகும் அளவுக்கு பேருந்தின் ஓட்டம் அதிவேகமாக இருந்தது. ஒரு வேகத்தடையின் போதுதான் திருச்சியென அறிந்துகொண்டாள்.
அந்த நள்ளிரவில் உயரத்திலும் அகலத்திலும் மாறுபட்டு ஒட்டியொட்டி நின்று கொண்டிருக்கும் கட்டிடங்கள், பற்களைக் காட்டி அப்பெருநகரம் சிரிப்பது போலிருந்தது. பகலில் பரபரத்திருக்கும் கடை வீதிகளை, இரவில் அத்தனை அமைதியாக பார்ப்பதில் உடன்படாத அவளது இளகிய மனம், அடுத்த நொடியே “கடவுளே அம்மாவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது” என்று வாய்விட்டு வேண்டும்படியாக மருகியது.
அன்று மதியம் பத்தாம் வகுப்புக்கு மாணவர்களுக்கான கணக்கு பாடவேளையில் இருந்தாள் சிந்து. கூடையில் இருந்த மொத்தப் பழங்கள் இத்தனை, அதில் அழுகியது இத்தனை, நல்ல பழங்களாக இருப்பதற்கான நிகழ்தகவினை கணக்கிடும் முறை பற்றி விளக்கமாக பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.
புத்தகத்துக்கும் பலகைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஒரு குட்டி விலங்கு உறுமுவதைப்போல், அவளுக்கும் முன்னால் கிடந்த டேபிளில் சத்தமில்லாமல் தொடர்ந்து அதிர்ந்து கொண்டேயிருந்தது அவளது கைபேசி. முதல் மேசை மாணவன் ஒருவன் குறிப்பிட்டுச் சொன்னபிறகுதான் கவனித்தாள்.
அநாவசியமாக பள்ளியில் போன் பயன்படுத்தக்கூடாதுயென்பது ஆசிரியர்களுக்கான விதிமுறை. அதை எப்போதும் கடைப்பிடித்து வருபவள்தான் சிந்துவும். அதற்காகவே உறவுகளிடமிருந்தோ நட்புகளிடமிருந்தோ அந்த நேரத்தில் அவளுக்கு போன் வருவதில்லை.
ஆனால், அன்று காலையிலிருந்தே அவள் சரியில்லை. ஏகப்பட்ட மறதியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தாள். சூடான தேநீரை பிரிட்ஜில் வைத்தது, அப்போதுதான் கொடியில் விரித்துப் போட்டுவந்த துணிகளை உருவி நாற்காலியில் மடித்து வைத்தது, கம்மல் அணியாமல் வண்டியில் ஏறப்போனவளிடம் கணவன் ரவி சுட்டிக்காட்டியதுயென தொடர்ந்து தடுமாற்றம் இருந்துகொண்டேயிருந்தது.
ஏதேனும் முக்கியமான விசயமாக இருக்கக்கூடுமென என்ற எண்ணம், ஆனாலும், அந்தக் கணக்குக்கான முழுத்தீர்வையும் விளக்கிக் கூறியபடியே கரும்பலகையில் நிரப்பினாள், மாணவர்களிடம் அவர்களது நோட்டில் எழுதச் சொல்லிவிட்டு, போனைக் கையிலெடுத்தாள்.
வரிசையாக குறுஞ்செய்திகள் வந்து கொண்டேயிருந்தது.. “நீ போன் எடுக்கமாட்டேன்னு தெரியும்” “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை” “அம்மாவுக்கு திடீன்னு வாய் கோணவளிச்சுக்குது. குழறிக் குழறிப் பேசுறா” “நம்ம ஊரு டாக்டர் மதுரைக்கு கூட்டிட்டுப் போகச் சொல்றாரு, நீ உடனே புறப்பட்டு வா” அத்தனையையும் அவளது அண்ணன் ராகவ்தான் அனுப்பியிருந்தான்.
அம்மாவுக்குச் சர்க்கரைச் சத்து உண்டு, அதனால்தான் இப்படியோ, இன்னும் என்னென்னவெல்லாம் ஆகுமோயென்று பயந்தாள். இரண்டு மாதங்களுக்கு மேலாக அம்மாவைத் தன்னோடுத் தங்க வைத்திருந்தவள் சென்ற வாரம் சனிக்கிழமைதான் ஊரில் விட்டு வந்தாள்.
அதில் சிந்துவுக்குத் துளியளவும் விருப்பம் இல்லை. சின்னக்குழந்தையைப் போல் அம்மாதான் பிடிவாதம் பிடித்துச் சென்றாள். விடுமுறை கேட்டு தலைமையாசிரியர் முன் நின்ற போது, அவர், “கொஞ்சங்கூட பொறுப்பே இல்லாம நடந்துக்கிறீங்க, இன்னும் ரெண்டு நாள்ல அரைப்பரிட்சை, பசங்களைப் பத்தியும் யோசிங்க டீச்சர்” என்று வெடுக்கென்று சொன்னவர் வருவதுவும் செல்வதுமாக இருந்த மற்ற ஆசிரியர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இவளைக் கண்டுகொள்ளவேயில்லை. எதுவும் பேசாமல் நிறைய நேரம் நிற்க வைத்தார்.
அவமானமாக இருந்தது சிந்துவுக்கு. இறுதியில், “முடிஞ்சா நாளைக்கே கிளம்பிடுங்க, ஒருநாள்தான் விடுமுறை உங்களுக்கு” – யாசிப்பவன் தட்டில் வீசியெறிந்த செல்லாக்காசுபோல இருந்தன அந்தச் சொற்கள். “அறுநூற்றம்பது கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள ஊருக்கு வந்து செல்ல இரண்டு இரவுகள் கழிந்துவிடும்.
அம்மாவை கவனித்துக் கொள்ள அது எப்படிப் போதுமானதாகும்” என்றெல்லாம் எதிர்த்துக் கேட்க வேண்டும் போலிருந்த வார்த்தைகளை மௌனத்துக்குள் புதைத்துக் கொண்டவள், “நன்றி சார்” என்ற வார்த்தையோடு அவரிடமிருந்து விடைபெற்றாள். சற்றும் தாமதியாமல் பள்ளியிலிருந்து வீட்டுக்குக் கிளம்பிப் போனாள்.
“அதெப்படி, யாரோ ஒருவர்போல் அம்மாவைப் பார்த்ததும் சென்னைக்குத் திரும்ப முடியும்? அம்மா எப்படி இருக்கிறாளோ? அக்காவோ, தங்கையோ இருந்தாலாவது அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அண்ணி குணத்திற்கு அண்ணன் இந்த ஒருநாள் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதே பெரிய விசயம்” என்றெல்லாம் நினைக்கையில் அழுகையாக வந்தது சிந்துவுக்கு.
வீட்டில் கணவனுக்கும் மகனுக்குமான சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு மதுரை பேருந்தில் ஏறி அமர்ந்த போது மணி ஏழாகி விட்டிருந்தது. கண்களை மூடியிருந்தாளே தவிர, சிந்தனைகள் சிக்கல் சிக்கலாகி உருண்டு கொண்டிருந்தன. வெளிக்காற்று உள்ளே வராதவாறு முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்த அந்தப் பேருந்துக்கு வெளியே பார்த்தபோது வெற்று நிலமாகப் பரந்து விரிந்திருந்தன. இன்ன வகை, இன்ன பெயரெனச் சொல்ல முடியாதபடி, சாலை மரங்களெல்லாம் இருளின் குவியலாகத் தெரிந்தன. தொடர்ந்து இருண்மை காட்சிகளால் இன்னும் கொஞ்சம் பாரமானது சிந்துவின் மனது. இருக்கையில் சாய்ந்து வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இடுப்பில் மீண்டும் யாரோ வரி வரியாகக் கோடு இழுப்பது போலிருக்க, முகம் இறுக்கி வந்த கோபத்தையும், அதிர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அப்படியே இருந்தாள். அந்த விரல்கள் இன்னும் மேலேற முயன்றபோது இடுக்கின் வழி இன்னும் ஆழமாக நுழைந்த விரல்களைத் தன் பலங்கொண்ட மட்டும் பிடித்து ஆவேசமாக முறுக்கினாள். பின்னிருக்கையில் அப்பா போல் இருந்தவர்தான் இந்தச் சேட்டைகளெல்லாம் செய்திருக்கிறார் என்று தெரிந்ததும், பலத்தக் கூச்சலிட்டு, பேருந்திலிருந்த மொத்தப் பேரையும் எழுப்பிவிட்டாள் சிந்து.. ஆளாளுக்கு அந்தப் பெரியவரை வசவு உரித்தெடுத்து விட்டார்கள். சிலர் அடிக்கவும் செய்தனர்.
அந்த இளைஞன் அவமானத்தில் தலை கவிழ்ந்து கொண்டான். பேருந்து நிறுத்தப்பட்டுவிட வயதானவரை இறக்கிவிடச் சொல்லி சத்தம் போட்டனர். விட்டால் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறை.. இளைஞன்தான் முதலில் இறங்கிப் போனான். தொடர்ந்து வரும் அப்பாவைத் திரும்பிப் பார்க்கவில்லை. அவர்களது இருக்கைக் கால்மாட்டிலிருந்த பைகள் வீசியெறியப்பட்டன “ச்சே, என்ன மனுசங்கடா, மொதமொதல்ல சித்தப்பன் ஆரம்பிச்சி வச்சது.
நமக்கு நாற்பது வயசு ஆகியும், இன்னுமா இந்தத் தொல்லை? என்ன கருமம் பிடிச்ச பெண்பிறவி இது?” என்று நொந்துகொண்டு முணங்கினாள் சிந்து. **** சிந்து நல்ல உயரம். அவளைப் பார்த்தால் யாரும் நான்காவதுதான் படிக்கிறாள் என்று சொல்ல மாட்டார்கள். பதிமூன்று வயது பெண்போல வாட்டசாட்டமாக இருப்பாள். அண்ணனின் சட்டைகள் அவளுக்கும் பொருத்தமானதாக இருக்கும். பெரும்பாலும் அதைத்தான் அணிந்திருப்பாள்.
அன்று அம்மா தாயில்பட்டியில் திருமணத்திற்குச் சென்றுவிட, அந்த மதிய வேளையில் அவள் மட்டும்தான் வீட்டிலிருந்தாள். அண்ணன் அப்பாவோடு கடைக்குச் சென்றிருந்தான். ஒருக்களித்துத் திறந்திருந்த கதவைச் சத்தமில்லாமல் தள்ளியொதுக்கி எப்படி வந்தாரென்றுத் தெரியவில்லை. இரும்புக் கட்டிலில் அமர்ந்திருந்த சிந்துவைப் பின்புறமாகத் தூக்கினார் அவளது சித்தப்பா. அவரது கைகள் இரண்டும் இன்னமும் மொட்டுவிடாத அவளது மார்பகங்களை அழுத்திக் கசக்கிக் கொண்டிருந்தன. அவளை அப்படியே வாரியெடுத்து மடியில் வைத்துக் கொண்டார்.
கன்னத்தோடு கன்னம் ஒட்டிக் கொஞ்சியபடி, “சிந்து பாப்பாவுக்கு என்ன வேணும்? சித்தப்பா கூட சைக்கிள்ல வர்றியா?” என்று கேட்க, அவளோ எருமை மாடு கலக்கிவிட்ட குட்டைக்குள் நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் அல்லியைப் போல ஒன்றும் புரியாமல் முழித்தாள். பலங்கொண்ட மட்டும் அவரோடுப் போராடினாள். இது அன்பா இல்லைன்னா தப்பா? எதிர்க்கனுமா இல்லைன்னா இயல்பா? என்றெல்லாம் அடிதடியாக குழப்பங்கள் எழுந்து வந்தன. ஆனாலும் அவளுக்கு அது பிடிக்கவில்லை என்ற தெளிவு மட்டும் அவளோடு இருந்தது. முடிவில் யோசிக்காமல் அவரது புறங்கையில் பல் பதியக் கடித்தவள், வீட்டிற்கு வெளியே ஓடிவந்துவிட்டாள்.
அவ்வப்போது இப்படித்தான் சித்தப்பா, பின்னால் திரும்பச் சொல்லி தலைக்கு மேலே தூக்குவார். அந்த உயரம் வரை சென்று வந்த மகிழ்ச்சியில் அவர் அத்துமீறியதை அவள் உணர்ந்ததில்லை. ஆனால், இன்றைக்குத்தான் அவளுக்கு இது சரியில்லையே என்பது போல் தெரிந்துவிட, மதியத்திற்கு மேல் அம்மா வீட்டுக்கு வந்ததும் சித்தப்பாவைப் பற்றிச் சொன்னாள்.
ஆனால், அவளது அம்மா, “பொம்பளைப் பிள்ளைக இல்லைல்ல அவருக்கு, அதான் உம்மேலப் பிரியமாயிருக்காரு, இதுல என்னடி இருக்கு?” என்று சாதாரணமாகப் பதிலளித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாதபடி, அவள் வேலையை அவள் பார்க்கத் தொடங்கி விட்டாள். இன்னொரு முறையும் இதே புகாரோடு சென்று அவள் முன் நின்ற போது, “ஆமா, இவ பெரிய குமரி, அங்க தொட்டாக, இங்க தொட்டாகன்னுட்டு கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நிப்பா, இந்த டிவி வயரைப் பிடுங்கிப் போட்டாதான் உருப்படுவா, அதான் எல்லாத்துக்கும் காரணம், கண்டது கழியதுயெல்லாம் பாத்துத் தொலையிறதுதான் வினையே” என்று இவளைத்தான் திட்டி அனுப்பி விட்டிருக்கிறாள்.
நிச்சயம் அப்பாவிடம் இதுபற்றிப் பேசமுடியாது. தம்பியை தன் மூத்த மகனாக நினைத்துக் கொண்டிருப்பவர். அம்மாவும் அப்படித்தான். இப்படி யாரிடமும் சொல்லித் தீர்வு தேடிக்கொள்ள முடியாமல் சித்தப்பாவைப் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொண்ட நாட்கள் மிக அதிகம் சிந்துவுக்கு. கழிவறை வசதி அறிமுகமற்றிருந்த அந்த கிராமத்தில் வாழைத் தோட்டம், குளக்கரை, வேலிக் கருவேலமரங்களின் மறைவுயென எங்கு ஒதுங்கச் சென்றாலும் ஏதேனும் இரண்டு கண்கள் மறைந்திருந்து பார்த்து, மனம் வதைபடச் செய்ததுண்டு. அதில் பல நேரம் அவளது சித்தப்பாவின் கண்கள்தான் இருக்கும்.
ஒரேயொரு ஆறடிச்சுவர்தான் சித்தப்பா வீட்டிற்கும் சிந்துவின் வீட்டிற்கும் இடையில். பேருக்குத்தான் தனித்தனியே தவிர தினமும் குழம்பு முதல் தேங்காய் எண்ணெய் வரை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும்படியான நெருக்கம் இரு குடும்பத்திற்கும். ஒரு வீட்டின் நிலைக்கதவின் மீதேறி நின்று பார்த்தால் மறுவீடு பாதிவரை நீள்வாக்கில் தெளிவாகத் தெரியும்.
உயரக் கதவுதானேயென்று சாய்வுக் கண்ணாடி செருகிவைக்காமல் விட்டுப்போன சன்னலோடான குளியலறை உண்டு சிந்துவின் வீட்டில். சாத்தூர் கே.எஸ்.என் கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்த அன்று காலையில் அவசர அவசரமாகக் குளித்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் எதேச்சையாகப் சன்னலைப் பார்க்க, பொதுச்சுவருக்கும், ஓட்டுவேய்ப்புக்கும் இடைப்பட்ட வெளியிலிருந்து கண்களும் நெற்றியும் மட்டும் தெரிந்த நிலையில் ஒரு உருவம் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. வெலவெலத்துப் போனாள். உள்ளிருந்தவாறு, “அம்மா… அம்மா… ” என்று கூப்பாடு போட்ட மாத்திரமே, அந்த உருவம் அங்கிருந்து இல்லாமல் போயிருந்தது. ஏதோவொரு துணியைச் சுற்றிக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்துவிட்டாள்.
யாருடனோ பேசிக் கொண்டிருந்துவிட்டு சாவகாசமாக உள்ளே வந்த அம்மா, கையிலிருந்த டப்பாவை நீட்டி, “பழநிக்குப் போன உங்க சித்தப்பா பஞ்சாமிர்தம் வாங்கிட்டு வந்திருக்காரு, காலேஜுக்கு போற முதல்நாள் முருகன் ஆசிர்வாதம் யாருக்கு கிடைக்கும்? இந்தா எடுத்துக்கோ…” என்றபோது அதை அப்படியே வாசலை நோக்கித் தள்ளி எறிந்தாள் சிந்து. அவளின் தலைமயிரைப் பிடித்து இழுத்து, முதுகில் நான்கு அடி கொடுத்து பத்ரகாளியாகக் கொந்தளித்துப் போனாள் சிந்துவின் அம்மா.
இதற்குமேல் “நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டாள் அம்மா, மீறிப் பேசினால் கல்லூரிக்கே போகவேண்டாமென்று சொன்னாலும் சொல்லி விடுவாளென” வலியைத் தாங்கிக்கொண்டு அமைதியாகக் கிளம்பத் தொடங்கினாள் சிந்து. ஆனால், உள்ளுக்குள் வெறுப்புத் தீ பற்றியெரிந்து கொண்டிருந்தது. “இதுநாள்வரை சின்னப்பிள்ளை சரி, தானே எதிர்க்கமுடியாமல், அம்மாவைத் துணைக்குத் தேடினோம்.
ஆனா, இப்போ அப்படியில்லையே, நான் பெரியவள், எனக்கொரு கஷ்டம்னா நானேதான் அதைச் சரிபண்ணிக்கனும், இன்னைக்கி சாயந்திரம் வந்து பார்த்துக்கிறேன்” என்ற தீர்மானம் பண்ணிக்கொண்டு கல்லூரிக்குப் போனாள். கல்லூரி வாழ்க்கையின் தொடக்கம், முதல் நாள், நிறையப் புதுத் தோழமைகள் என்றெல்லாம் கற்பனை சிறகு விரிப்பதற்குப் பதிலாக, ஒருவிதமான நெருக்கடியில் மனம் மண்டிக் கொண்டிருந்தது சிந்துவுக்கு. எப்படியாவது இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்குப் போய் இதுக்கு ஒரு முடிவு கட்டி விடவேண்டுமெனத் உள்ளுக்குள் சபதம் செய்து கொண்டாள்.
ஆனால், அதற்கு அவசியமேயில்லாமல் “எதிரில்வந்த கார் மோதி, சித்தப்பா தன் டி.வி.எஸ் பிப்டியோடு கீழே விழுந்துவிட புடலைங்காயைப் போல வலது முட்டிங்கால் உடைந்து தொங்கிப் போனதுயென்றும், இன்னும் ஆறேழு மாதத்திற்கு மேல் ஆகும் அவர் சரியாவதுக்கு” என்று வருத்தமான முகத்தோடு அம்மா இவளிடம் சொன்னபோது, “ஷ்ஷப்பாடா” என்றிருந்தது சிந்துவுக்கு. அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் அவரிடம் நலம் விசரிக்கச் சென்ற சிந்துவிடம் “இந்த வாழ்வு, நாம் நன்கு திடகாத்திரமாக ஓடித்திரியும் நாட்களிலும் ஏதாவது கற்றுக்கொடுத்துகொண்டேதான் இருக்கிறது.
ஆனால், நாம்தான் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அதுவே நோயுண்டாயிருக்கும் காலம் என்றால் அவ்வளவு நேர்த்தியாகப் புரிந்து கொள்கிறோம்?” என்றெல்லாம் அழுத்தம் திருத்தமான சொற்களைக் கொண்டு தத்துவவாதியைபோல் சித்தப்பா பேசிய போது உண்மையில் அவளுக்குக் கடுப்பேறியது.
“இப்படி நல்லவன் மாதிரி பேசுனா. முன்ன செஞ்சதெல்லாம் சரின்னு ஆகிடுமா?” என்று கேட்க வேண்டும் போலிருந்தாலும், அம்மா பக்கத்தில் இருந்ததால் தன்னைக் கட்டுப்படுத்திகொண்டாள் வருடம் சில கடந்து கலங்கிப் பெருகிய கண்ணீரோடு சிந்துவின் திருமணத்தின் போது அவர் ஆசிர்வதித்த அன்றுங்கூட, “அட போய்யா” என்றுதானிருந்தது சிந்துவுக்கு.
**** காலை ஐந்து மணிக்கெல்லாம் மதுரை மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிட்டாள். ஆவலோடு அம்மாவைக் கட்டிப் பிடித்துகொண்டாள். உடல் நலம் பற்றி விளக்கமாகக் கேட்டால் அம்மா பயந்துவிடுவாளெனத் தெரியும். தவிர ஆரம்பத்திலேயே சிகிச்சை தொடங்கிவிட்டதால் பெரிய அளவுக்குப் பிரச்சினை இல்லையென்று மருத்துவர்கள் குறிப்பிட்டு சொன்னதாக விடிகாலையில் போனிலே சொல்லி இருந்தான் அண்ணன். நிம்மதியாக இருந்தது சிந்துவுக்கு.
தங்கை வந்ததும் ராகவ், “எப்படியும் நாளைக்கு மூணாம் நாள் டிஸ்சார்ஜ் பண்னிருவாங்க, நீ ஈவினிங் சென்னைக்குக் கிளம்பிடு, இப்போ நான் ஊருக்குக் போய்ட்டு பணம் எடுத்துட்டு வந்துர்ரேன்“ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனான். “அட, நம்ம அண்ணானா இப்படிப் பேசுவது“ சிந்துவால் நம்பவே முடியவில்லை. ஆனால், ஆறுதலாகயிருந்தது. அவளும் அம்மாவும் மட்டும்தான் அந்த அறையில்.
கிட்டத்தட்டப் பயிற்சி மாதிரி, அம்மாவிடம் ஏதாவதுப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள் சிந்து. கொஞ்சம் சிரமப்பட்டாலும் பேசுவற்கு முயற்சி செய்தாள் அம்மாவும். பேச்சுவாக்கில், “அம்மா, இன்னைக்கி பஸ்ல என்ன நடந்தது தெரியுமா?“ என்ற போது ஆவலாகக் கேட்கத் தொடங்கினாள் அம்மா.
“நம்ம சித்தப்பா வயசு இருக்கும்மா ஒருத்தருக்கு. அவரு என்ன செஞ்சாரு தெரியுமா…” மேற்கொண்டு தொடர விரும்பாமல் அத்தோடு நிறுத்திக்கொண்டாள் சிந்து. அம்மா “என்ன…?” என்பதுபோல் அவளைப் பார்க்க… “உனக்கு காப்பி வாங்கிட்டு வரட்டுமா மா” என்று பேச்சை மாற்றினாள்.
“என்னவோ சொல்ல வந்தியே அதைச் சொல்லு” என்று பிச்சுப் பிடுங்கலாக ஒன்றும் பாதியுமான சொற்களை வைத்து அம்மா கேட்ட போது…
“ம்க்கும், இன்னைக்கு இவ்வளவு உன்னிப்பா என்ன ஏதுன்னு கேட்குற நீ, அன்னைக்கு ஏன்மா நான் என்ன சொல்ல வந்தேன்னுகூட புரிஞ்சிக்காமப் போன? போம்மா.. நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் தெரியுமா?“ என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது சிந்துவுக்கு.
ஆனால், மௌனமாக அம்மாவைப் பார்த்தபடி நின்றிருந்திருந்தாள். அதைக் கலைக்கும் விதமாக அம்மா சிறுகுழந்தையைப்போல் ஆட்காட்டி விரலை முகத்திற்கு நேராகக் காட்டி, “ஒன்னுக்குப் போகனும், கூட்டிட்டுப் போ“ என்றபடி படுக்கையிலிருந்து எழ முயற்சிக்க, அம்மாவைக் கைத்தாங்கலாகத் தொட்டுத் தூக்கத் தொடங்கினாள் சிந்து.
– கனகா பாலன்
நன்றி : வாசகசாலை.காம்