படக்குறிப்பு, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்கட்டுரை தகவல்
இந்தியாவின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற மறுநாளே பாகிஸ்தானுடனான 1960ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் உடன்படிக்கையை இடைநிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் முடிவுக்கு எதிராக உலக வங்கியை அணுகப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இப்போது இந்தியா ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது போருக்கான முன்னறிவிப்பாகக் கருதப்படும்” என்று தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு பாத்தியப்பட்ட சிந்து நதிநீரை வழங்குவதை இந்தியாவால் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் ஹபீஸ் சயீத் பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அத்தகையவர்கள் இப்போது செயலற்றவர்களாகிவிட்டதாகக் கூறினார். பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிந்து நதிநீர் உடன்படிக்கையை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு குறித்து பிபிசி நிருபர் ஆசாதேஹ் மோஷீரி, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்டதற்கு, இந்தியா இந்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலக முடியாது என்று அவர் பதிலளித்தார்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக உலக வங்கியையோ அல்லது வேறு மூன்றாம் தரப்பினரையோ மத்தியஸ்திற்கு பாகிஸ்தான் அணுகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், “இந்த ஒப்பந்தம் உலக வங்கியின் மத்தியஸ்தத்தின் கீழ் கையெழுத்தானதால், இது தொடர்பான எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அவர்களிடம் செல்வோம். 1960இல் கையெழுத்தான சிந்து நதிநீர் உடன்பாடு, நீண்ட காலமாக வெற்றிகரமாக அமலில் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா ஒருதலைப்பட்சமாக விலக முடியாது” என்று தெரிவித்தார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அளித்த ‘எச்சரிக்கை’ குறித்த கேள்விக்கு, இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டால், அது போருக்கு அழைப்பு விடுவதாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார். ஏனென்றால், நதிநீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகினால், பாகிஸ்தானுக்கு உரிமையான நீரைப் பெறும் உரிமையை இந்தியா பறிப்பதாகவே கருதப்படும். எங்களுக்கு சிந்து நதியின் நீரில் உள்ள உரிமையை இந்தியா அங்கீகரித்துள்ளது. இது 1960 நீர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த வியாழனன்று, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை பாகிஸ்தான் அரசு கூட்டியது.
அந்தக் கூட்டத்தில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு நிராகரிக்கப்பட்டது, மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் பிராந்தியங்களில் நீர் ஓட்டத்தைத் தடுக்க அல்லது திசைதிருப்ப மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்றும், அதற்கு முழு வீச்சில்பதிலடி கொடுக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
படக்குறிப்பு, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்
ஹபீஸ் சயீத் பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்து
பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் தீவிரவாத குழுக்களைக் கண்காணித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தனக்கு இருப்பதை அந்நாடு உணர்ந்திருக்கிறதா என்று கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், “அவை பயனற்றதாகிவிட்டன” என்றார். பயனற்றவை என்றால் செயலற்றவை ஆகிவிட்டன, அவை அழிந்துவிட்டன” என்று கூறினார்.
ஹபீஸ் சயீத் போன்றவர்களைப் பற்றிய துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அவர்களைப் பற்றியும் நீங்கள் இப்படித்தான் நினைக்கிறீர்களா? என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரிடன் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அத்தகையவர்கள் இப்போது இல்லை, அவர்களின் பெயர் மட்டுமே ஆவணங்களில் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் வசிக்கும் ஹபீஸ் சயீத், 2008 மும்பை தாக்குதல்களிலும், இந்தியாவில் நடைபெற்ற பல தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பதாக இந்தியா நம்புகிறது. எனவே,அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் ஹபீஸ் சயீத்தை ‘சர்வதேச பயங்கரவாதி’ பட்டியலில் சேர்த்துள்ளன. அவரின் தலைக்கு, அமெரிக்கா பத்து மில்லியன் டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளது. ஹபீஸ் சயீத், பாகிஸ்தானின் மிகப்பெரிய தீவிரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனராக கருதப்படுகிறார்.
ஹபீஸ் சயீத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவே அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோருகிறது. பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த வரலாறு உள்ளதா என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவது சாத்தியமற்றது என நினைக்கிறேன். ஏனென்றால் இரு நாட்டின் எல்லைக் கட்டுப்பாட்டுகோட்டிலும் லட்சக்கணக்கான வீரர்கள் பாதுகாவலில் ஈடுபட்டுள்ளர்” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹபீஸ் சயீத் (கோப்புப் படம்)
பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னேற்பாடுகள்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு என்ன பதில் என்று கவாஜா ஆசிஃப்பிடம் கேட்டதற்கு, “கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா செய்ததற்கு மட்டுமே நாங்கள் பதிலடி கொடுக்கிறோம். இதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அவர்களுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலளிக்க வேண்டியிருந்தது” என்று பதிலளித்தார்.
இதுவொரு ராஜதந்திர நடவடிக்கையா என்றும், இது மோதல் சூழ்நிலையை உருவாக்காதா என்றும் கேட்டதற்கு பதிலளித்த அவர், “மோதலை உருவாக்கக்கூடாது என்று விரும்புகிறேன்… ஆனால் சூழ்நிலைகளைப் பார்த்தால் மோதல் ஏற்படக்கூடும் என்று தோன்றுகிறது…. இருப்பினும் அது நடக்காது என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னேற்பாடுகள் என்ன என்று பிபிசி பத்திரிகையாளர் கேட்டார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், “நாங்கள் இனிமேல் தான் தயாராக இருக்க வேண்டும் என்பதில்லை, ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்… எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆயுதங்களையும் பணத்தையும் வழங்குவதாக இந்தியா குற்றம் சாட்டி வருவது தொடர்பாகவும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ஜம்மு காஷ்மீரில் நடப்பதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் இருவருக்கு தொடர்பிருப்பதாக இந்திய காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தொடர்பாக பாகிஸ்தானுக்குத் தெரியுமா என்ற கேள்வியும் கவாஜா ஆசிப்பிடம் முன்வைக்கப்பட்டது.
“இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை,” என்று கூறிய அவர், கடந்த 48 மணி நேரத்தில் இந்திய ஊடகங்களில் இது குறித்து எதுவும் வெளிவந்ததாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஏதேனும் கதை புனைந்திருந்தால், அதைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானும் பல நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தது. இந்தியாவுடனான இருதரப்பு ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பது, இந்தியாவிற்கு பாகிஸ்தானின் வான்வெளி மற்றும் எல்லைகளை மூடுவது மற்றும் வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாக வியாழக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளது.
கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை நிராகரித்த பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானின் பகுதிக்கான தண்ணீர் ஓட்டத்தைத் தடுக்கவோ அல்லது திசை திருப்பவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி
இந்தியாவின் கடும் நடவடிக்கைகள்
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டத்தை இந்தியா நடத்தியது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது, அட்டாரி-வாகா எல்லையை மூடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் வழங்கப்பட்ட விசாக்களில் பாகிஸ்தான் குடிமக்கள் இனி இந்தியாவிற்கு பயணிக்க முடியாது என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு/இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்களை திரும்பப் பெறவும் இந்தியா முடிவு செய்தது. இரு நாட்டு தூதரங்களிலும் இந்தப் பதவிகள் ரத்து செய்யப்பட்டதுடன், இந்த இராணுவ ஆலோசகர்களின் ஐந்து துணை ஊழியர்களையும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.