பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22 அன்று நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ள நரேந்திர மோதி அரசு, அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என்றும், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்தது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணை பிரதமருமான இஷாக் தார் பாகிஸ்தான் ஊடகத்திடம் கூறுகையில், இந்திய அரசு இப்படியான முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது என்றார்.
“இந்தியா ஏற்கெனவே சிந்து நதி ஒப்பந்தத்துக்கு உறுதி எடுத்துள்ளது. நீரை தேக்கி வைப்பதற்காக சில நீர்த்தேக்கங்களையும் கட்டியுள்ளது. உலக வங்கியும் இதில் தொடர்புடையதாக உள்ளது, இந்த ஒப்பந்தம் கட்டாயமான ஒன்று.”
“நீங்கள் இப்படியான தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது. இந்தியாவிடம் எந்தவிதமான சட்டபூர்வ பதிலும் இல்லை. இதற்கான பதில் பாகிஸ்தான் சட்ட அமைச்சகத்தால் வழங்கப்படும்.” எனவும் பாகிஸ்தான் அமைச்சர் கூறுகிறார்.
இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் செப்டம்பர் 19, 1960ல் உருவானது. சிந்து நதி நீரை பகிர்ந்துகொள்வதற்கான இந்த ஒப்பந்தம் சிந்து நதி ஒப்பந்தம் எனப்படுகிறது.
சிந்து நதிப்படுகை சுமார் 1.12 மில்லியன் சதுர கி.மீ அளவுக்கு விரிந்துள்ளது. பாகிஸ்தான் (47%), இந்தியா (39%), சீனா (8%) மற்றும் ஆப்கானிஸ்தான் (6%) என நான்கு நாடுகளிடையே இந்த நதி பிரிந்து பாய்கிறது.
புள்ளிவிவரங்களின் படி, சிந்து நதி பகுதிகளில் சுமார் 30 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
பட மூலாதாரம், Reuters
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏன் தேவை?
சட்லெஜ், பியாஸ், ராவி ஆகிய பகுதிகளிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்திய அரசு 1948-ல் தடுத்ததிலிருந்து சிந்து நதி ஒப்பந்த வரலாறு தொடங்குகிறது.
இந்த பிரச்னை 1947ல் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களுக்கிடையே இந்த பிரச்னை தொடங்கியது.
1947ம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர்கள் சந்தித்து, பாகிஸ்தான் தரப்பு பகுதியிலிருந்து ஓடும் இரண்டு பிரதான கால்வாய்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளுக்கும் எடுக்கக்கூடாது என்ற அடிப்படையில் ‘ஒப்பந்த நிறுத்தத்தை’ (standstill agreement) ஏற்படுத்தினர்.
இந்த ஒப்பந்தம் மார்ச் 31, 1948 வரை அமலில் இருந்தது. ஆனால், ஏப். 1, 1948ல் ஒப்பந்தம் அமலில் இல்லாதபோது, இரண்டு முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறப்பதை இந்தியா நிறுத்தியது.
இதனால் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள 1.7 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்தியா தொடர்ந்து தண்ணீர் வழங்க ஒப்புக்கொண்டது.
தண்ணீர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சச்சரவை தீர்க்க உலக வங்கி தலையிட்டது, இருதரப்பு சந்திப்புகளுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?
- சிந்து நதியின் துணை நதிகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி நதிகள் கிழக்கு ஆறுகள் என்றும், ஜீலம், செனாப் மற்றும் சிந்து ஆகியவை மேற்கு ஆறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு சிலவற்றைத் தவிர கிழக்கு நதிகளின் தண்ணீரை இந்தியா எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தலாம். மேற்கு நதிகளின் தண்ணீரை பெரும்பாலும் பயன்படுத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு (80 சதவிகிதம்) இருக்கும், ஆனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சில நதிகளின் தண்ணீரை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் (20 சதவிகிதம்) பயன்படுத்த உரிமை அளிக்கிறது. அதாவது, மின் உற்பத்தி, விவசாயத்துக்காக வரையறுக்கப்பட்ட தண்ணீரை இந்தியா பயன்படுத்த முடியும்.
- இந்த ஒப்பந்தத்தின் கீழ், நிரந்தர சிந்து ஆணையம் நிறுவப்பட்டது. இதன்படி, இரு நாடுகளிலிருந்தும் ஆணையர்களின் கூட்டம் நடத்தப்படும். இந்த ஆணையர்கள் அவ்வப்போது சந்தித்து ஏதேனும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பார்கள்.
- ஒரு நாடு ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தும்போது அந்த திட்டத்தின் வடிவமைப்பில் மற்றொரு நாட்டுக்கு ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில், அதற்கு திட்டத்தை மேற்கொள்ளும் நாடு பதிலளிக்கும். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் இரு தரப்பினருக்கும் இடையே சந்திப்புகள் நடைபெறும். சிந்து ஆணையத்தால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாவிட்டால், இரு நாட்டு அரசாங்கங்கள் அதைத் தீர்க்க முயற்சிக்கும்.
- இது தவிர, இந்த ஒப்பந்தம் நிபுணர்களிடமிருந்து உதவி பெறுவது அல்லது சர்ச்சைக்கு தீர்வு காண நடுவர் நீதிமன்றத்துக்குச் செல்வதற்கான விருப்பத்தையும் பரிந்துரைக்கிறது.
பட மூலாதாரம், AFP
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது எதை உணர்த்துகிறது?
“சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் நேரடி தாக்கம் என்னவென்றால், இந்தியா இனி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாது என்பதுதான்” என்று பிரதீப் சக்சேனா கூறுகிறார்.
இந்தியாவிலிருந்து சிந்து நதி நீர் ஆணையத்தின் ஆணையராக 6 ஆண்டுகளாக பிரதீப் சக்சேனா பணியாற்றி வருகிறார்.
“ஒப்பந்தத்தின்படி இந்தியா மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இனி இந்தியாவுக்குப் பொருந்தாது, இந்தியா தனது தேவைக்கேற்ப எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியும்” என்று அவர் கூறுகிறார்.
“இந்தியா தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஒரு நீர்மின் திட்டத்தைத் தொடங்க விரும்பியதாக வைத்துக்கொள்வோம், அதன் கட்டுமானத்தின் போது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், இனி அப்படி இருக்காது. இந்தியா தனது சொந்த விருப்பப்படி எந்தத் திட்டத்தையும் தொடங்கலாம், மேலும் அதை தனது சொந்த விருப்பப்படி முடிக்கவும் முடியும்” என்று அவர் உதாரணத்துடன் விளக்கினார்.
ஒப்பந்தத்தை இந்தியா தன்னிச்சையாக நிறுத்திவைக்க முடியுமா?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பிரிவு 12 இன் படி, இந்த ஒப்பந்தம் நிரந்தரமானது என்றும், இதை எந்த தரப்பினரும் ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைக்க முடியாது என்றும் பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் சுல்ஃபிகர் அலி மஹ்தோ நம்புகிறார்.
சுல்ஃபிகர் அலி மஹ்தோ சுமார் 20 ஆண்டுகளாக சிந்து நதி ஆணையத்தின் கூட்டங்கள் குறித்து செய்தி சேகரித்து வருகிறார், மேலும் நதி நீர் பிரச்னைகள் குறித்து நன்கு அறியப்பெற்றவராக அவர் உள்ளார்.
சுல்ஃபிகர் கூறுகையில், “நரேந்திர மோதி அரசாங்கத்தின் இந்த முடிவு ஒரு ‘வழக்கமான நிர்வாக ரீதியிலான நடவடிக்கை’ என்பதைத் தவிர வேறில்லை.” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பிரிவு 12, பத்திகள் 3-4 இன் படி, இது ஒரு நிரந்தர ஒப்பந்தம். இதன் கீழ், ஒரு நிரந்தர ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரு நாடுகள் சார்பாக ஆணையர்கள் செயல்படுகிறார்கள். ஏதேனும் பிரச்னை எழுந்தால், இந்த ஆணையம் ஒரு தீர்வைக் காண்கிறது.” என்கிறார்.
“சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பிரிவு 12, பத்தி 4 இன் படி, அதில் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால், அது ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது. அதற்கும், இரு நாடுகளின் ஒப்பந்தம் அவசியம்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
“பிரிவு 11 இன் படி, ஏதேனும் பிரச்னை எழுந்தால், அது ஆறுகளில் பாயும் தண்ணீர் குறித்ததாக இருக்கும். அதாவது, எவ்வளவு தண்ணீரை நிறுத்த முடியும், ஒரு மின் உற்பத்தி நிலையத்தைக் கட்ட முடியுமா, இல்லையா, அதன் வடிவமைப்பு என்னவாக இருக்க முடியும் என்பது தொடர்பாகத்தான் பிரச்னைகள் எழும்” என சுல்ஃபிகர் கூறுகிறார்.
“சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியா ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியாது” என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் நியூஸிடம் தெரிவித்தார்.
ஆனால் இந்திய நிபுணர் பி.கே. சக்சேனா பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் நிபுணர்களின் வாதங்களுடன் உடன்படவில்லை.
பி.கே. சக்சேனா கூறுகையில், “இந்தியா தனியாக ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் இப்போது எங்கு வேண்டுமானாலும் தனது புகாரைப் பதிவு செய்யலாம். உலக வங்கி ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இப்போது இந்த விவகாரத்தில் இரண்டு தரப்புகள் மட்டுமே உள்ளன. அதனால்தான் ஒரு தரப்பு (இந்தியா) ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.” என்றார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் உலக வங்கியின் பங்கு என்ன?
“உலக வங்கியின் எந்தவொரு சட்டத்தையும் இந்தியா மீறியுள்ளது என்று பலர் இப்போது கூறுவது முற்றிலும் தவறு. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் உலக வங்கிக்கு இப்போது எந்தப் பங்கும் இல்லை” என்று பி.கே. சக்சேனா கூறுகிறார்.
“ஒப்பந்தம் செய்யப்பட்ட நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் உலக வங்கி முக்கிய பங்கு வகித்தது. அதன் பிறகு, 10 ஆண்டுகள் இந்த ஒப்பந்தத்தில் உலக வங்கி தனது பங்கை வகித்தது, எனவே 1970 இல், உலக வங்கியின் பங்கு முடிவுக்கு வந்தது.”
இப்போது அதன் பங்கு என்னவென்றால், இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு அல்லது தகராறு ஏற்படும் போதெல்லாம், உலக வங்கி நடுநிலை நிபுணர்களை அழைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சையைத் தீர்க்க முயற்சிக்கும்.
மறுபுறம், அப்துல் பாசித் கூறுகையில், “மோதி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச முடிவுக்கு சவால் விடுப்பதற்கு பாகிஸ்தான் உலக வங்கிக்கு அதுகுறித்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகள் குறித்த முடிவுக்குக் கூர்மையான முறையில் பதிலளிக்க முடியும்.” என கூறினார்.
சர்வதேச சட்டத்தின் கீழ் மோதி அரசாங்கத்தின் முடிவுக்கு சவால் விடுக்க பாகிஸ்தானில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக சுல்ஃபிகர் கூறுகிறார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் இந்தியா அடையும் பலன் என்ன?
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதன் தாக்கம் இந்தியாவுக்கு சாதகமாக மட்டுமே இருக்கும், ஏனெனில் இந்தியா ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என்று பி.கே. சக்சேனா கூறுகிறார்.
“இந்தியா இப்போது அதன் சொந்த வழியில் செல்வதற்கான சுதந்திரமாக உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியா தனது சொந்த விருப்பப்படி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பதால், பாகிஸ்தான் இதை ஒரு உளவியல் இழப்பாகக் கருதும்.”
இந்தியா மீது விதிக்கப்பட்ட தடைகளால் பாகிஸ்தான் மட்டுமே பயனடைந்தது.
பி.கே. சக்சேனாவின் கூற்றுப்படி, “பாகிஸ்தான் நிச்சயமாக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும். ஆனால் அது இயற்கையானது, ஏனென்றால் நீங்கள் இந்தியாவுக்குள் இந்திய மக்களைக் கொன்றால், இந்தியா நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.” என்கிறார்.
இந்தியா தனது அனைத்து நீர்மின் திட்டங்களையும் முடிக்கும்போது, பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைப்பதில் நிச்சயமாக சிரமம் ஏற்படும்.
பட மூலாதாரம், ANI
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான நதிநீர் பகிர்விலும் பாதிப்பை ஏற்படுத்துமா?
“இந்த ஒப்பந்தம் நதிநீர் பகிர்வு பற்றியது அல்ல, மாறாக நதிகளைப் பகிர்ந்து கொள்வது பற்றியது” என்று பி.கே. சக்சேனா கூறுகிறார்.
“செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதிகளின் நீர் பாகிஸ்தானுக்குச் செல்கிறது, சட்லெஜ், ராவி மற்றும் பியாஸ் நதிகளின் நீர் இந்தியாவுக்குச் செல்கிறது.”
“இந்த மூன்று நதிகளின் நீரை இந்தியா எந்த நிபந்தனையும் இல்லாமல் பெறும் என்பதுதான் இந்த ஒப்பந்தம், ஆனால் ஜீலம் மற்றும் செனாப் நதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரை நீர் மின்சக்தி மற்றும் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்த இந்தியாவுக்கு சில உரிமைகள் இருக்கும்.”
பட மூலாதாரம், Getty Images
ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு பாகிஸ்தான் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக, நரேந்திர மோதி சமீபத்தில் அறிவித்தார். அது பாகிஸ்தானுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சுல்ஃபிகர் கூறுகையில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பகிரப்படும் தகவல்கள் இதனால் பாதிக்கப்படக்கூடும். வெள்ளம் குறித்து முன்னெச்சரிக்கையாக கூறப்படும் தகவல்கள் இனி பாகிஸ்தானால் பெறப்படாது” என்றார்.
1989 ஆம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும் பெனாசிர் பூட்டோவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெள்ளம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஒரு காலத்தில், இந்தத் தகவல் ஒவ்வொரு மணி நேரமும் பகிரப்பட்டது.
சட்லெஜ், ராவி, செனாப் மற்றும் ஜிமால் ஆகிய நீர்நிலைகளில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மனித உயிர்களைக் காப்பாற்ற இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இப்போது இந்தியா இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீர் பாகிஸ்தானுக்குள் பாய்வதைத் தடுக்க இந்தியாவுக்கு அத்தகைய ஏற்பாடுகள் உள்ளதா?
இந்தியாவில் செனாப் மற்றும் ஜீலம் நதிகளில் இயங்கும் 6 நீர்மின் திட்டங்கள் உள்ளன, அங்கு அணைகளில் தண்ணீரைத் தடுத்து நிறுத்தும் திறன் உள்ளது.
“தற்போது, செனாப் நதியில் ஆண்டுதோறும் 16 மில்லியன் ஏக்கர் அடி நீர் பாய்கிறது. ஜீலம் நதியில் ஆண்டுதோறும் சுமார் 14 மில்லியன் ஏக்கர் அடி நீர் பாய்கிறது” என்று சுல்ஃபிகர் கூறுகிறார்.
இந்தியாவின் நீர்மின் திட்டங்களின் மொத்த கொள்ளளவு, இந்தியா தற்போது தேக்கி வைத்திருக்கும் 70-75 ஆயிரம் ஏக்கர் அடி நீரை விட அதிகமாக இல்லை என்று சுல்ஃபிகர் கூறுகிறார். “இந்தியா இவ்வளவு நீரை தடுத்து வைத்தாலும், பாகிஸ்தானுக்கு அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.” என்கிறார் அவர்.
சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த இந்தியாவிடம் உள்கட்டமைப்பு இல்லை என்றும் அப்துல் பாசித் நம்புகிறார்.
“இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. மேற்கு ஆறுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 133 மில்லியன் ஏக்கர் அடி தண்ணீரைப் பெறுகிறோம். இந்த நேரத்தில் இந்தியா இந்த தண்ணீரை நிறுத்தும் நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று அப்துல் பாசித் கூறினார்.
இந்தியாவின் பஞ்சாபில் வெள்ள அபாயம் அதிகரிக்குமா?
சிந்து நதி நீர் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் பி.கே. சக்சேனா இதற்கான சாத்தியத்தை நிராகரிக்கிறார்.
“ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பிறகு தான் வெள்ளப் பிரச்னை அதிகரிக்கும். அப்படி எதுவும் நடக்காது. இந்தியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணம் சட்லெஜ், ராவி மற்றும் பியாஸ் நதிகளில் நீர் அதிகரிப்பதே. எனவே, பஞ்சாபில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என்று சொல்வது சரியாக இருக்காது” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், AFP
பாகிஸ்தானுக்கு உள்ள மாற்று வழிகள் என்ன?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்த பிறகு, சர்வதேச சட்டத்தின்படி பாகிஸ்தான் அதை எதிர்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளது.
“கீழ் நதிக்கரை பகுதியாக இருக்கும் பாகிஸ்தான், சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி நதிகளின் மீதான உரிமையை திரும்பக் கோரும் (தற்போது இந்தியா இந்த நதிநீரை ஏகபோகமாக பயன்படுத்தி வருகிறது) . 1960 ஆம் ஆண்டில் 26 மில்லியன் ஏக்கர் அடி தண்ணீரைப் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் கூறும். அதே அளவு தண்ணீரை திருப்பித் தர வேண்டும், இல்லையெனில் அதில் ஒரு பகுதி தண்ணீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என பாகிஸ்தான் கேட்கலாம்” என்று சுல்ஃபிகர் கூறுகிறார்.
“பாகிஸ்தானின் விவசாய உற்பத்தியில் 90 சதவிகிதம் சிந்து நதி ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் சார்ந்திருப்பதால், இந்தியாவின் முடிவு எவ்வாறு கையாளப்படும்?” என்று பாகிஸ்தானின் புகழ்பெற்ற ஆய்வாளர் ஷாஜாத் சௌத்ரியிடம் துன்யா சேனல் கேட்டது.
“பாகிஸ்தான் ஜீலம் மற்றும் செனாப் நதிகள் மீது அணைகள் கட்டுவதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தலாம், அவர்கள் ஏற்கெனவே அவ்வாறு செய்து வருகின்றனர். இது பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை” என்று அவர் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு