கோவை: “திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது” என்று பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநில விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அறிமுகக் கூட்டம், கோவை சின்னியம் பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவ.13) நடந்தது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: “தமிழகத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை, விவசாய பணிகளை தவிர அனைத்து வேலைகளையும் பார்க்க வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயத்தை முன்னுரிமை படுத்துவதில்லை.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் வரும் நவ.19-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பிரதமர் மோடி வரும் அன்றைய தினம் கோவை வருகிறார். இம்மாநாட்டில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட இயற்கை விவசாயிகளையும், 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளையும் பிரதமர் சந்திகின்றார்.
இந்தியாவில் முதல் முறையாக டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை படித்தவர்கள் செய்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த மருத்துவக் குழு ஹைதாராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்கள் தொடர்புடைய ஒரு மருத்துவ குழுவும். பயங்கரவாத செயலில் ஈடுபட்டு டாக்டர் குழுவினர் கைது செய்யபட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டாக்டர்கள் என்பதால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என அவர்கள் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். நவ.26-ல் மும்பையில் நடந்ததைப் போல செய்ய வேண்டும் என்பது தான் இலக்கு என சொல்லியிருக்கின்றனர். இது அபாயகரமானது.
நாட்டுக்குள் உற்பத்தியாகும் தீவிரவாதம் நமக்கு தேவை இல்லை. மதத்தை தவறாக பயன்படுத்தி இதை செய்கின்றனர். 13 பேர் உயிரிழந்து இருப்பது மோசமான தாக்குதல். ஐந்து மாநிலங்களில் இந்த குழுவினருக்கு தொடர்பு இருக்கும் நிலையில் அரசியல் கடந்து இந்த தீவிரவாத குழுவை வேருடன் அழிக்க அனைத்து அரசியல் கட்சியினரும் முன்வர வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சிறப்பாக இருக்கின்றனர். ஆனாலும் கோவை, சேலம் பகுதிகளில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தனி கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் ஆபத்து அதிகம்.
தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னணியில் இருக்கும் மாநிலமாகும். நமக்கு சர்வதேச எல்லைகள் இலங்கையைத் தவிர எதுவும் இல்லை என்றாலும், நாம் கவனத்தில் இருக்க வேண்டியது அவசியம். டெல்லியை பொறுத்த வரை குண்டு வெடிப்பு நடந்த 3 நாட்களுக்கு முன்பே, அவர்களை பிடிக்க தேடுதல் பணி ஆரமிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் குறித்த நாளை விட முன்பே தாக்குதல் நடத்தி இருக்கின்றார். அவர்கள் திட்டம் டெல்லியை பொறுத்தவரை மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த வேண்டும். நான்கு நபர்கள் ஏகே 47 துப்பாக்கியை வைத்து பல பேரை சுட வேண்டும் என்பதுதாகும்.
முதல் காரில் குண்டு வெடிக்க வைத்து விட்டனர். இரண்டாவது காரை போலீஸார் பிடித்து விட்டனர், மூன்றாவது காரை தேடி வருவதாக சொல்லி இருக்கின்றனர். ஏகே 47, துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. நூறு முறை திட்டமிட்டால் தீவிரவாதி ஒரு முறை ஜெயித்தால் போதும். ஆனால், 100 முறையும் போலீஸார் ஜெயிக்க வேண்டும். டெல்லி குண்டு வெடிப்பை எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் ஆக்கவில்லை. காங்கிரஸ் உட்பட யாரும் அரசியல் செய்யவில்லை. பாதுகாப்புப் படைக்கு இன்னும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய பெண் மருத்துவர் நன்றாகதான் இருந்தார்கள் என சொல்கின்றனர். அதன் பின்பு அவரை மூளைச் சலவை செய்து அவரை ஆயுதத்தை கையில் எடுக்க வைத்து இருக்கின்றனர்.
திரைப்படங்களில் வன்முறை, சாதி போன்றவற்றை முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது. திமுக அரசை பொறுத்தவரை அவர்கள் வேலையை சரியாக செய்திருக்க வேண்டும். காவல்துறை பொறுத்தவரை அவர்கள் வேலையில் கோட்டை விட்டிருக்கிறார்கள். அரிவாள் எடுத்து கோயிலுக்கு போவதற்கும், ஆட்சியாளர்களுக்கும் என்ன சம்பந்தம். இதில் காவல் துறை தோல்வி அடைந்திருக்கிறது. கோவை சம்பவத்திலும் போலீஸார் தோல்வி அடைந்து இருக்கின்றனர். காவல் துறையும் தனது தவறுகளை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். காவல் துறையை இன்னும் சிறப்பாக முதல்வர் கையாள வேண்டும்.
கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் செய்கின்றீர்களா என கேட்கின்றீர்கள். நான் ரியல் எஸ்டேட் செய்வதில் என்ன தவறு. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன், நான் தொழில் செய்கிறேன் யாரையும் அடித்து பிடுங்கவில்லை. நான் எந்த தொழிலும் செய்யக் கூடாது என கையை கட்டி போட்டு வைத்தால் நான் எங்கிருந்து சாப்பிடுவேன். செய்யும் வேலைகளில் தவறு இருந்தால் சொல்லலாம். ஆனால், எந்த தொழிலும் செய்ய கூடாது என சொல்ல யாருக்கு உரிமை இல்லை.
கட்சியில் மாநில தலைவராக நான் இல்லை. எனக்கு நேரம் இருக்கிறது. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நியாயமான முறையில் தொழில் செய்து அரசியல் செய்கிறேன், குடும்பத்தையும் நடத்து கின்றேன். பங்குச்சந்தையில் பணம் போடுகின்றேன். தொழிலே செய்யக்கூடாது என்பது என்ன நியாயம், நான் என்ன சாராய கம்பெனியா நடத்துகின்றேன்?
நான் தொழில் செய்தால் தான் சாப்பிட முடியும் எனவும், கட்சிப் பணிகளுக்கு சொந்த காசில் தான் செலவு செய்கின்றேன். ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக் கின்றார்கள். நான் அப்படி எதுவும் சேர்க்கவில்லை என தெரிவித்தார். முதல்வர் என்ன தொழில் செய்கின்றார் அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது. ரூ.5 லட்ச ரூபாய் பங்கு தொகையாக தொழிலில் போட கூட முடியாத அளவிற்கா நான் இருக்கின்றேன். நிறுவனங்களில் பங்கு தொகை இரண்டு லட்சம் வரை முதலீடு செய்து இருக்கின்றேன். ஆன்லைனில் கம்பெனிகளில் எவ்வளவு பங்கு முதலீடு என்பதை பாருங்கள். அந்த அளவிற்கு கூட தகுதி இல்லாமலா இருக்கிறேன்.
பிஹாரில் என்டஏ கூட்டணி வெற்றி பெற்று விடும். பிஹாரை போல தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பிஹாரில் அதிகப்படியான எம்எல்ஏ-க்களை பாஜக கட்சி வெல்லும். எஸ்ஐஆர் படிவத்தில் நிறைய சந்தேகம் இருப்பதை தேர்தல் அதிகாரிகள் தான் சரி செய்ய வேண்டும். நிதிஷ் குமார் ஆட்சியில் பிஹாரில் வளர்ச்சி பணிகள் நடந்து இருக்கின்றது.
தமிழகத்தில் படித்தவர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வது போல, மக்கள் நல்ல வாய்ப்பை தேடி செல்வது வழக்கமானது. பிஹார் வளர்ந்திருக்கின்றதா என்றால், வளர்ந்திருக்கிறது. தமிழக அளவிற்கு வளர்ந்து இருக்கின்றதா என்றால் இல்லை. தமிழகம் விளையாட்டை பொறுத்தவரை எப்பொழுதும் சிறந்த மாநிலம். தமிழகத்திலும் அயர்ன் மேன் போன்ற நிகழ்வுகளை நடத்திட வேண்டும். அரசியலுக்கு வந்த பின்பு என்னுடைய பிட்னஸ் போயிவிட்டது. அதை சரி செய்து கொண்டு இருக்கிறேன்.
தேர்தல் இன்னும் சூடு பிடிக்கவில்லை. மக்கள் இன்னும் தேர்தலுக்கு தயாராகவில்லை. நவம்பர், டிசம்பர் நேரத்தில் அனைத்தும் சரியான கோணத்தில் விழும். கூட்டணி இறுதியாகும். அரசியல் ஆட்டத்தை பொறுத்த வரை இறுதியில் யார் ஜெயிக்கின்றார்கள் என்பது தான் முக்கியம். இறுதிப் போட்டிக்கு என்டிஏ கூட்டணி தயாராகிக் கொண்டு இருப்பதாக பார்க்கின்றேன். நவம்பர், டிசம்பர் வரை காத்திருப்போம். கூட்டணியை பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. நீதிமன்றத்திற்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை என்றார்கள்.
எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான போராட்டத்தில் அவர் இருந்ததாக பேப்பரில் செய்தி வந்தது. நீதிமன்றம் செல்லும் போது நீதிபதியை ஏமாற்றிவிட்டார்கள் என சொல்ல இருக்கிறேன். விவசாயத்துக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். லாட்டரி மார்டின் குடும்ப விவகாரத்திற்குள் செல்ல விரும்பவில்லை” என்று அண்ணாமலை கூறினார்.