வங்கதேசத்தில் இந்து துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அந்நாட்டில் சிறுபான்மையினரின் நிலை குறித்து இந்தியாவும் வங்கதேசமும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளது.
வங்கதேசத்தைத் தளமாகக் கொண்ட இந்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சின்மோய் கிருஷ்ண தாஸ், தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ், இந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள இஸ்கான் கோவிலுடன் தொடர்புடைய சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சூழல் பதற்றமாக உள்ளது.
கிருஷ்ண தாஸ் சிறைக்கு அனுப்பப்பட்டதைத் தவிர, 32 வயதான வழக்கறிஞர் ‘சைஃபுல் இஸ்லாம்’ சிட்டகாங் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் சிறையில் அடைக்கப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுடன் இந்தச் சம்பவத்தைத் தொடர்புபடுத்தியது.
இதற்கு, “இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக” வங்கதேசம் விமர்சித்துள்ளது.
சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டது குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்திய இந்தியா ஓர் அறிக்கையை வெளியிட்டது.
மேலும் “இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின்” பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா வங்கதேசத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள வங்கதேசம் கைது சம்பவத்தைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டது, திகைப்பளிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவும் வங்கதேசமும், பாரம்பரிய நட்புறவோடு இருக்கும் இரு அண்டை நாடுகள்.
நீண்ட நாட்களாக வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அது நாட்டில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் கடினமாக்கியது.
ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சியில், குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், ஒரு ராஜ்ஜீய பங்காளியாகவும், நட்பு நாடாகவும், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்கு வங்கதேசம் ஆதரவளித்தது. மேலும் இந்தியாவுடனான நெருக்கத்தால் அந்நாடு பொருளாதார ரீதியாகவும் ஆதாயமடைந்துள்ளது.
ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்டது முதல், வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது. ஆனால் வங்கதேசம் இந்தக் கூற்றை மறுக்கிறது.
வங்கதேசத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் சுமார் 8% உள்ளனர், மீதமுள்ள மக்கள் தொகையில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதால் அதிகரித்த பதற்றம்
இந்நிலையில், திங்களன்று டாக்கா விமான நிலையத்தில் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அக்டோபர் மாதம், தெற்கு நகரமான சிட்டகாங்கில் நடந்த பேரணியின்போது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சின்மோய் கிருஷ்ண தாஸின் அமைப்பான இஸ்கான், “அவர் சிறுபான்மையினர் பாதுகாப்பிற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்” என்று கூறி, அவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று, சிட்டகாங்கில் உள்ள நீதிமன்றம் தாஸுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் வாகனத்தை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியில் வன்முறை வெடித்தது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதலில் ‘சைபுல் இஸ்லாம் அலிஃப்’ என்ற முஸ்லிம் வழக்கறிஞர் கொல்லப்பட்டதாக வங்கதேச அதிகாரிகள் கூறுகின்றனர். அவரது மரணம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பல்வேறு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் ‘முஹம்மது யூனுஸ்’, மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், அதை நிலை நிறுத்துவதற்கும் தனது அரசு உறுதியெடுத்துள்ளதாகக் கூறி, மக்கள் அமைதி காக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பை (International society of krishna consciousness) தடை செய்ய வேண்டும் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த ‘தீண்டாமை எதிர்ப்பு மாணவர் இயக்கம்’ கூறியுள்ளது.
வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?
‘டாக்கா ட்ரிப்யூன்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, இஸ்கான் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் மற்றும் வழக்கறிஞரின் கொலைக்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டுமென்று புதன்கிழமை சட்டரீதியாக ஒரு நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 10 வழக்கறிஞர்களால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில், “இஸ்கான் ஒரு பயங்கரவாதக் குழு” என்றும், “இஸ்கான் வகுப்புவாத கலவரத்தைப் பரப்புவதாகவும்” குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிபிசி பங்களாவின் செய்திப்படி, மாணவர் இயக்கத்தின் தலைவர் ‘ஹஸ்னத் அப்துல்லா’, இஸ்கானை ‘பயங்கரவாதக் குழு’ என்று குறிப்பிட்டு அதைத் தடை செய்யக் கோரினார்.
மேலும், “எங்கள் நாட்டில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கப் பாடுபடுவோம். ஆனால் மதத்தின் பெயரால் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு வங்கதேசத்தில் சிறிதளவுகூட இடம் கிடைக்காது. சைஃபுல்லா கொடூரமாகக் கொல்லப்பட்டார். பயங்கரவாதக் குழுவான இஸ்கான், தடை செய்யப்பட வேண்டும்” என்றும் அப்துல்லா கூறியுள்ளார்.