” எனக்கு இதற்கு முன்பும் இரண்டு முறை சிரியாவுக்கு விசா கிடைத்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் என்னால் செல்ல முடியவில்லை. இந்த முறை விசா கிடைத்ததும், கண்டிப்பாக செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அங்கு பார்த்த விஷயங்களும், நான் நாடு திரும்பிய நிலையையும் உணர்ந்த பிறகு, நான் மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை”.
44 வயதான தொழிலதிபர் ரவி பூஷனின் வார்த்தைகள் இவை. இவரது நிறுவனம் மின் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளது.
தன் நிறுவனம் சார்ந்த பணிக்காக, டிசம்பர் 3ஆம் தேதி சிரியா சென்றடைந்தார் ரவி பூஷன். சிரியாவில் சமீபத்தில் நடந்த குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய அரசின் உதவியுடன், அவர் டிசம்பர் 12 அன்று நாடு திரும்ப முடிந்தது.
சிரியாவில் நடக்கும் 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் குறைந்தது ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை, சிரியாவின் நிலைமையை உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வு நெருக்கடி என்று வர்ணித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அங்கு நிலைமை மிக வேகமாக மாறியது.
தலைநகர் டமாஸ்கஸ் உட்பட பல பெரிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். முன்னாள் அதிபர் பஷர்-அல்-அசத், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது, ஒருபுறம் கிளர்ச்சிக் குழுக்கள் அரசாங்கத்தை நடத்த முயற்சித்து வரும் நிலையில், அண்டை நாடான இஸ்ரேலும், சிரியாவில் உள்ள பல்வேறு பகுதிகளை தாக்கி வருகிறது. இவை அனைத்திற்கும் மத்தியில், கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகின்றன.
அங்கு நிலவும் மோசமான நிலையைக் கருத்தில்கொண்டு, சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்தியா தனது குடிமக்களுக்கு டிசம்பர் 6ஆம் தேதி அறிவுறுத்தியது. அதற்குள் இந்தியாவை சேர்ந்த 90 பேர் சிரியா சென்றுள்ளதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
டமாஸ்கஸில் சூழ்நிலை எப்படி இருந்தது?
டிசம்பர் 11 அன்று, பல நாள் முயற்சிகளுக்குப் பிறகு, இந்தியாவை சேர்ந்த 75 பேரை சிரியாவிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றி பெற்றதாக, வெளியுறவு அமைச்சகம் கூறியது.
அவர்களில் ரவியும் ஒருவர். ரவியின் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். தலைநகர் டெல்லிக்கு அருகில் உள்ள உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் அவரது அலுவலகம் உள்ளது.
“திடீரென்று ஒருநாள் காலையில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் சுவர்கள் நடுங்கத் தொடங்கின. அன்று டிசம்பர் 8 ஆம் தேதி. அதிகாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கார்கள் உடைக்கப்பட்டன. பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கடைகள் மற்றும் வங்கிகளும் சூறையாடப்பட்டன” என்று ரவி குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்த அவர், “நாங்கள் இதையெல்லாம் எங்கள் அறைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் மிகவும் பயந்திருந்தோம். அறை சேவை ஊழியர்களுக்காகக் கூட நாங்கள் கதவைத் திறக்கவில்லை. அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தோம்” என்றார்.
49 வயதான சுனில் தத், தொழில் ரீதியாக ஒரு இயந்திர பொறியாளர். இவர் கடந்த ஏழு மாதங்களாக டமாஸ்கஸ் அருகே உள்ள ஒரு பகுதியில் 13 பணியாளர்கள் கொண்ட குழுவை வழிநடத்தி வந்தார்.
டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பிபிசி இந்தியிடம் பேசிய அவர், “அந்த ஏழு மாதங்களில் நாங்கள் எந்த விதமான பிரச்னையையும் சந்திக்கவில்லை. இரவு நேரங்களில் கூட டமாஸ்கஸுக்கு வந்து செல்வோம். அங்கு என்ன நடந்தது, அது எவ்வளவு விரைவாக நடந்தது என்பது யாரும் எதிர்பார்க்காதது”என்று கூறினார்.
“கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸை கைப்பற்றியவுடன், கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஆனால், ராணுவ வீரர்கள் எங்கள் ஹோட்டலுக்கு வெளியே வந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த சிறு குழந்தைகள் கூட துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தனர்” என தனது அனுபவத்தை விவரித்தார்.
டிசம்பர் 8 அன்று, கிளர்ச்சியாளர்கள் சிரிய தலைநகரை அடைந்தனர். இதையடுத்து, அதிபர் அசத் நாட்டை விட்டு வெளியேறினார்.
“அதற்கு முந்தைய இரவு வரை, டமாஸ்கஸில் எல்லாம் சாதாரணமாக இருந்தது” என்கிறார் ரவி பூஷன்.
கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸை அடைய குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் என அனைவரும் நம்பியதாக அவர் குறிப்பிட்டார். “இந்தச் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, நாங்கள் வெளியே இரவு உணவு உண்டோம், சந்தைகளும் திறந்திருந்தன. எல்லாம் நன்றாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய தூதரகத்துடன் இருந்த நிலையான தொடர்பு
நிலைமை மோசமாகத் தொடங்கியவுடன், சிரியாவில் சிக்கியுள்ளவர்கள், இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டனர். சிலருக்கு தூதரகத்திலிருந்து அழைப்பு வந்தது, சிலர் தாங்களாகவே தூதரகத்தைத் தொடர்புகொண்டனர்.
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும், தங்கள் உடைமைகளை தங்களுடனேயே வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக திரும்பி வந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் விரைவாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிறகு டிசம்பர் 10-ம் தேதி அவர்கள் வெளியேறுவதற்கான செய்தி வந்தது.
“காலை 11 மணிக்கு தூதரகத்திடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, எப்போது வேண்டுமானாலும் எங்களை இங்கிருந்து அழைத்துச் செல்வோம் என்று அவர்கள் கூறினர். கடைசியில் அங்கிருந்து எங்களால் இரண்டு மணிக்குக் கிளம்ப முடிந்தது. முதலில் இந்திய தூதரகத்திற்கு சென்றோம். மீதியிருந்த மக்களின் வருகைக்காகக் காத்திருந்தோம்” என்று அச்சம்பவத்தை ரவி பூஷன் நினைவுகூர்ந்தார்.
“அங்கிருந்து எங்களை லெபனான் எல்லைக்கு அழைத்துச் சென்றார்கள். சிரிய தூதரகம் எங்களை லெபனானில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. அங்கே உணவும் உண்டோம். இது இந்திய அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.” என்கிறார் பூஷன்.
“அங்கு வெப்பநிலை நான்கு அல்லது ஐந்து டிகிரி இருந்தது. மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த வேலையை தாங்களே செய்தார்கள், ஆனால் எங்களுடன் இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்களே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார்கள். நாங்கள் விசாக்களைப் பெற்றோம்” எனவும் அவர் கூறினார்.
“இதன் பிறகு நாங்கள் பேருந்துகளை மாற்றிக்கொண்டு பெய்ரூட்டுக்குப் புறப்பட்டோம். அங்கு அவர்கள் எங்களை ஒரு ஹோட்டலில் தங்க வைத்தனர். இந்த அதிகாரிகள் எங்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தினர். மேலும், 2-3 நாட்களில் எங்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதாகவும் சொன்னார்கள்.” என்றார்.
எல்லா இந்தியர்களும் நாடு திரும்பி விட்டார்களா?
நொய்டாவில் வசிக்கும் 42 வயதான ரசித் கபூர், சிரியாவில் வேலை செய்து வந்தார். அவரும் டிசம்பர் 14 அன்று டெல்லி வந்தடைந்தார்.
“அங்கு பல எல்லைகள் மூடப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், சிரியாவில் இருந்து எங்களை வெளியேற்ற ஒரே ஒரு வழி இருந்தது. தூதரக அதிகாரிகள் சரியான நேரத்தில் எங்களை வெளியே அழைத்துச் சென்றனர். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்று ரசித் தெரிவித்தார்.
நீங்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்று அவரிடம் கேட்டோம்.
“நீங்கள் எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும், அங்கு அமைதி நிலவினாலும், உங்கள் நாட்டுத் தூதரகத்துடன் நீங்கள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். நிலைமை எப்போது மோசமடையக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியாது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து இந்தியர்களும் சிரியாவில் இருந்து திரும்பிவிட்டார்களா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என பதில் கிடைத்தது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “சிரியாவில் ஏராளமான இந்தியர்கள் குடியேறியுள்ளனர். சிலர் அங்கு திருமணம் செய்து கொண்டார்கள், வேறு சிலர் அங்கு ஏதாவது வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் இன்னும் அங்கு உள்ளனர். அவர்கள் திரும்பி வர விரும்பினால், அவர்களுக்கும் உதவுவோம்” என்று தெரிவித்தார்.
சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 40 பேர் ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்கள். ஜெய்ஸ்வால் கூறுகையில், “அவர்களில் பலர் புனித யாத்திரை சென்றிருந்தனர். தற்போது அவர்கள் மற்ற இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்” என்றும் கூறினார்.
சிரியாவை எப்படி நினைவில் கொள்கிறீர்கள்?
சிரியாவில் இருந்து திரும்பிய இந்திய குடிமக்களிடமிருந்து சிரிய மக்கள் குறித்தும் அங்குள்ள நிலைமை குறித்தும் அவர்களின் கருத்து என்ன என்று கேட்டோம்.
“அங்குள்ள மக்கள் நாங்கள் திரும்பி வருவதை விரும்பவில்லை” என்று சுனில் தத் கூறினார். “விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.”
கடந்த 50 ஆண்டுகளாக அசத்தின் குடும்பம் ஆட்சி செய்து வந்தது, ஆனால் நிலைமை அங்கு மோசமாக உள்ளது. மக்கள் பட்டினியால் மடிந்தனர். அரசு அவர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. அதனால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நடந்துள்ள சம்பவம், என்றோ ஒரு நாள் நடக்க வேண்டியது தான் என்றும் சுனில் தத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு