சென்னை: இந்த 2024-25-ம் ஆண்டுக்கான பட்டுவளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தென்காசியைச் சேர்ந்த சு.ஜேக்கப்புக்கும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை தென்காசியைச் சேர்ந்த வை.அருள்குமரனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதேபோல், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளருக்கான முதல் பரிசு ரூ.1 லட்சத்தை, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நா.மஞ்சுநாதாவுக்கும், 2-ம் பரிசு ரூ.75 ஆயிரத்தை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ச.நாகராஜுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரத்தை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சே.சாந்த மூர்த்திக்கும் வழங்கினார்.
மாநில அளவில் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசு ரூ.1 லட்சத்தை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மு.முகமது மதீனுல்லாவும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரத்தை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ச.சேகருக்கும், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.சுபத்ராவுக்கும் வழங்கினார்.
மேலும், மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசு ரூ.1 லட்சத்தை தருமபுரியைச் சேர்ந்த க.பிரகாசுக்கும், 2-ம் பரிசு ரூ.75 ஆயிரத்தை தருமபுரியைச் சேர்ந்த ஜெ.வேதவள்ளிக்கும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரத்தை கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.ரொசாரியோ லாசருக்கும் என மொத்தம் ரூ.8.25 லட்சத்துக்கான காசோலைகளை 11 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறையின் செயலர் வே.அமுதவல்லி, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் கி.சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.