சென்னை: சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை அறிவிக்கப்பட்டு மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று நடைபெற்ற அர்பன் மொபிலிட்டி இந்தியா மாநாட்டில் நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் விருதை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வழங்கினார்.
சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் செயல்திறன், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
அவற்றில் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை இணைக்கும் 660-க்கும் மேற்பட்ட மார்க்கங்களில் பரந்த பேருந்து வலையமைப்பு, விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து சேவை, அனைத்து பேருந்துகளிலும் எலெக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரம் அறிமுகம் செய்து, தேசிய பொது போக்குவரத்து அட்டை, யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு மூலம் டிஜிட்டல் கட்டண வசதி, `சென்னை ஒன்’ செயலி பன்முக போக்குவரத்து பயணத் திட்டமிடல் மற்றும் மாநகர் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட் பயண வசதி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.