• Tue. May 20th, 2025

24×7 Live News

Apdin News

சிறீதரனின் கூற்று தவறு என்கிறார் சி.வி.கே.

Byadmin

May 19, 2025


“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், பதில் பொதுச்செயலாளர் நியமனங்கள் அங்கீகாரம் இல்லாதவை எனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறுவது தவறு. கட்சியின் மத்திய செயற்குழுவின் நியமனங்கள் சட்டபூர்வமானவை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்குத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் நியமனங்களுக்கு உரியவர்களைக் கட்சி நியமித்து வருகின்றது.

இதில் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் கட்சிக்குள் சர்ச்சையொன்று உருவாகியிருந்த போதும் இது சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

குறிப்பாக பூநகரி மற்றும் கரைச்சி சபைகளுக்கும் தவிசாளர், உப தவிசாளர் பெயர்கள் கட்சியின் மாவட்டக் கிளையால் என்னிடம் வழங்கப்பட்டது.

அதனைக் கட்சியின் பொதுச்செயலாளர் கையொப்பம் வைத்தே தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டி இருந்தது. அதற்கமைய கட்சியின் தற்போதையாய் பதில் பொதுச்செயலாளருக்கு நான் தெரியப்படுத்தி இருந்த நிலையில் அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்து தனது கையொப்பத்தை வைத்து தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்புவதாக இருந்தார்.

இவ்வாறான நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சிக் கிளையின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது கட்சியின் தற்போதைய பதில் பொதுச்செயலாளராக இருக்கின்ற எம்.ஏ.சுமந்திரனைத் தான் பதில் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவரது நியமனத்தைப் பொதுச்சபை அங்கீகரிக்கவில்லை என்றும் சுமந்திரன் தொடர்பில் சில விமர்சனங்களை சிறீதரன் எம்.பி. முன்வைத்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுமந்திரன் என்னையே பதில் பொதுச்செயலாளராக ஏற்கவில்லை என்று கூறுபவர்களுக்கு நான் ஏன் கையொப்ப வைக்க வேண்டும் என மேற்கூறிய அந்த இரண்டு சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுப் படிவத்தில் கையொப்பம் வைக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஓர் இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு தேர்தல் ஆரம்ப காலம் முதல் இப்போது வரை கட்சிக்குள் இணக்கப்பாட்டையே ஏற்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறான நிலைமையில் நீங்கள்தான் இப்போது கட்சியின் பதில் பொதுச்செயலாளர் என்றும், அந்த அடிப்படையில் கையொப்பம் வைக்குமாறு சுமந்திரனிடம் கூறியிருந்தேன்.

அதன் பின்னர் அவரும் பெயர் குறிப்பிடப்பட்ட அந்தப் பிரதேச தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களுடன் பேசியிருந்தார். இவ்வாறாக ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் கலந்து பேசித்தான் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு வந்திருக்கின்றோம்.

மேலும் கட்சியின் பதில் தலைவரான என்னையோ, பதில் பொதுச்செயலாளரையோ அங்கீகரிக்கப்படவில்லை எனச் சொல்வதில் நியாயம் இல்லை. ஆனால், ஏதோவொரு சில காரணங்களால் சிறீதரனைப் பொறுத்தவரையில் நியாயம் இருக்கலாம். ஆனால், கட்சிக்குள் வெற்றிடமாகும் பதவிகள் மத்திய செயற்குழுவால் நிரப்பப்படலாம்.

இவ்வாறிருக்கையில் கட்சியின் பதவிகளில் இருப்பவர்கள் பொதுச்சபையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இல்லை. கட்சியின் யாப்பிலும் அவ்வாறு இல்லை.

ஆக தமிழரசுக் கட்சியின் யாப்பிலோ, சட்டத்திலோ இல்லாத ஒரு விடயத்தைப் பேசுகின்றார்கள். பதில் தலைவர், பதில் பொதுச்செயலாளர் பதவி குறித்து கட்சியின் மத்திய செற்குழு தீர்மானிக்க முடியும்.

எனவே, மத்திய செயற்குழுவால் நியமிக்கப்பட்ட இந்தப் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் நியமனங்கள் சட்டபூர்வமானவை. கேள்விக்கு உட்படுத்த முடியாது. கட்சி யாப்பின் பிரகாரம்தான் எல்லாம் நடக்கின்றது. அதிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம், அனுமதியுடனே எல்லாம் நடக்கின்றது.

மத்திய செயற்குழுவின் நியமனங்களைப் பொதுச்சபை அங்கீகரிக்க வேண்டும் என்பதும், மத்திய செயற்குழுவின் நியமனங்கள் அங்கீகாரம் இல்லாதவை என்று சிறீதரன் கூறுவதும் தவறு. இந்த நியமனங்கள் சட்டபூர்வமானவை.” – என்றார்.

By admin