• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

சிறீதரன் தடுக்கப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு அரசு உத்தரவு!

Byadmin

Jan 22, 2025


“நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தமடைகின்றோம். இந்தச் சம்பவத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும், தலையீடும் கிடையாது. விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.”

– இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார். இதற்குப் பதிலளிக்கையில் சபை முதல்வர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விமான நிலையத்  தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அத்துடன்  பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்வைத்த விடயங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புடையது. ஆகவே, இந்த விடயம் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவில் விசாரணைக்குட்படுத்தப்படுமாயின் திணைக்களத்தை அழைக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தடைகின்றோம்.

இந்தச் சம்பவத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகக்  குறிப்பிடுவது அடிப்படையற்றது. இவர் நாட்டுக்கு திரும்பி வருகையில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. ஆகவே, இந்த விடயத்தில் அரசின் தலையீடு ஏதும் கிடையாது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அபிலாஷையும், கொள்கையும் அரசுக்குக் கிடையாது. இருப்பினும் மாற்றீடாக புதிய சட்டம் இயற்றப்படும் வரை இந்தச் சட்டத்தைக் கவனமான முறையில் பொதுப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அமுல்படுத்த நேரிடும்.” – என்றார்.

By admin