பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாஷ் சிம்ஸ்
- பதவி,
-
ஒரு சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணி சிக்கலில் உள்ள நிலையில், ஜாஷ் சிம்ஸ் நமக்கு மேலே உள்ள பல விண்வெளி பொருட்களின் அரிய தாதுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் நாம் உண்மையில் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை விவரிக்கிறார்.
2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் எப்படி இருக்கும் என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான டுமாரோஸ் வேர்ல்ட் சில கணிப்புகளை வெளியிட்டது. தொழில்நுட்ப உலகின் எதிர்காலத்தை கணிப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். நமது வீடுகளில் ஹாலோகிராஃபிக் உதவியாளர்களுடன் பேசுவோம், இணைய வசதி அணுகல் தொடர்பாக பிரச்னைகள் ஏற்படும் என்று அந்த நிகழ்ச்சி கணித்திருந்தது.
அந்த நிகழ்ச்சியில் இந்த 2025 ஆம் ஆண்டு நாம் விண்கற்களிலிருந்து தாதுக்களை எடுத்துக் கொண்டிருப்போம் என்றும் கூறியிருந்தது. நாம் இன்னும் அதை செய்யவில்லை என்றாலும், சில சிறிய நிறுவனங்கள் பலர் கற்பனை செய்ததை விட விரைவில் நடக்கும் என்று கூறுகின்றன.
அமெரிக்க நிறுவனம் தீவிர முயற்சி
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட நிறுவனமான ஆஸ்ட்ரோஃபோர்ஜின் நிறுவனர், தங்கள் நிறுவனம்தான் அதை முதலில் செய்யும் என்று நம்புகிறார்.
இதற்கான முதல் படிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் $6.5 மில்லியன் (£5.1 மில்லியன்) மதிப்பிலான ஒடின் என்ற அதன் முதல் ஆளில்லா விண்கலத்தை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் ஏவியது.
சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஒடின் விண்கலம் திட்டமிட்டபடி சந்திரனைத் தாண்டி விண்வெளியில் பயணம் செய்வதாக ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நம்புகிறது.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, ஓடினுடன் பெரிய தகவல் தொடர்பு சிக்கல்களை ஆஸ்ட்ரோஃபோர்ஜ் எதிர்கொண்டுள்ளது. இந்த கட்டுரை எழுதப்படும் நேரம் வரை அந்த தகவல் தொடர்பு சிக்கல் சரி செய்யப்படவில்லை. ஓடின் இப்போது அதன் 9 மாத கால பயணத்தின் இலக்கை அடைந்திருக்கலாம் என்று அந்நிறுவனம் நம்புகிறது.
பூமியிலிருந்து சுமார் 8 மில்லியன் கி.மீ. (ஐந்து மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ள, முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட 2022 OB5 என்ற சிறுகோளை ஓடின் சுற்றி வந்து, தனது சென்சார்கள் மூலம் அந்த சிறுகோளில் என்னென்ன தாதுக்கள் இருக்கும் என மதிப்பிடும்.
“வேகமாக நகர்ந்து பாறைகளை உடைக்க வேண்டும்” என்பது ஆஸ்ட்ரோஃபோர்ஜ் நிறுவனர் மாட் கியாலிச்சின் தாரக மந்திரமாக இருக்கலாம். அவர் தீர்க்க முடியாத தொழில்நுட்ப சிக்கல்களால் அசர போவதில்லை.
ஆஸ்ட்ரோஃபோர்ஜ் இந்த தடைகளை எதிர்பார்த்தே இருந்தது. விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு கொள்ளாவிட்டாலும் நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். “ஆம், இன்னும் நிறைய சிறிய படிகளை எடுத்து வைக்க வேண்டும்,” என்று அவர் ஒப்புக்கொள்கிறார். “ஆனால் நாங்கள் உண்மையில் அதை செய்ய ஆரம்பிக்க போகிறோம்”.
அடுத்த ஆண்டு, சில மதிப்புமிக்க, செறிவூட்டப்பட்ட உலோகங்களை பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களில் வெட்டியெடுக்கும் வழிகளை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக நமது எரிபொருள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு அவசியமான பிளாட்டினம் வகை சார்ந்த உலோகங்களை எடுக்க திட்டமுள்ளது. இவற்றை பூமிக்கு அடியில் தோண்டி எடுப்பதற்கு, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல், சமூக ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் அதிக செலவாகும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், விண்வெளியில் இருந்து இந்த உலோகங்களை பூமிக்குக் கொண்டு வருவது, குறிப்பாக குறுகிய காலத்தில், உண்மையில் சாத்தியமானதா என்றும், இது சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பட மூலாதாரம், SpaceX
சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது சாத்தியமே
அடுத்த பத்து ஆண்டுகளில் அடுத்தடுத்த சோதனை ஏவுதல்களில், ஆஸ்ட்ரோஃபோர்ஜ் சிறிய அளவிலான உலோகத்தை மட்டும் வெட்டி எடுக்கும் என்று கியாலிச் நம்புகிறார், ஆரம்பத்தில் சில கிராம்கள், அடுத்தடுத்து திட்டம் முன்னேறும் போது சில கிலோகிராம்களை கூட எடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை.
இவை சில மீட்டர் முதல் அரை கிலோமீட்டர் வரை விட்டம் கொண்ட சிறுகோள்களை இலக்காக கொண்டு செய்ய முடியும். ஆரம்பகால பயணங்கள் வணிகரீதியாக இருக்காது, ஆனால் வெட்டி எடுக்கப்படும் உலோகங்களைப் பொறுத்து, அவற்றை வணிகமயமாக்கலுக்கு உட்படுத்த முடியும் என்று கியாலிச் கூறுகிறார். உதாரணமாக, ஒரு கிலோ ரேடியத்தின் விலை தற்போது $183,000ஆகும்.
ஆனால் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒருவரும், 2019 ஆம் ஆண்டில் ஐந்து பெருங்கடல்களின் அடிப்பகுதியைப் பார்வையிட்ட முதல் நபராக நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கிய ஆய்வாளருமான விக்டர் வெஸ்கோவோ, தொழில்நுட்ப சவால்கள் “கருவிகளை உருவாக்கும் வரைதான்” என்று கூறுகிறார்.
“அதைச் செய்ய முடியும் என்பதைக் காட்ட சில மைக்ரோகிராம்களை சிறுகோள்களிலிருந்து கொண்டு வர வேண்டும், பின்னர் அதையே பெரிய அளவில் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
“சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுப்பதை முழுமையாக செயல்படுத்துவது பல தசாப்த கால திட்டமாக இருக்கலாம். ஆனால் இது அளவு ரீதியான சிக்கல் மட்டுமே. இது ஒரு பெரிய பொறியியல் சாதனை என்பதில் சந்தேகமில்லை என்றாலும், சிறுகோள்களில் இருந்து நேரடியாக பொருட்களின் மாதிரிகளை எடுப்பது ஏற்கனவே அரசு விண்வெளி மையங்களால் செய்யப்பட்டுள்ளன” என்கிறார்.
2005 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஹயபுசா 1 மற்றும் 2 திட்டத்தின் போது ஜப்பானும் 2020 ஆம் ஆண்டில் ஒசைரிஸ்-ரெக்ஸ் திட்டத்தின் போது நாஸாவும் இதை செய்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பட மூலாதாரம், AstroForge
சவால்கள் என்ன?
சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் யோசனை விசித்திரமாகத் தோன்றினால், ரைட் சகோதரர்களின் மனிதர்களை ஏந்தி சென்ற முதல் விமானம் போன்ற பல தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அதே சுமையைக் கொண்டிருந்தன என வெஸ்கோவோ வாதிடுகிறார். அதாவது, அவை உண்மையில் நடக்கும் வரை அப்படிதான் தோன்றும் என்கிறார் அவர்.
விண்வெளி வளத் திட்டத்தைக் கொண்ட பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான கொலராடோ ஸ்கூல் ஆஃப் மைன்ஸின் இணை பேராசிரியர் இயன் லாங்கே, தற்போது சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப தடைகளை மட்டுமே நம்மால் மதிப்பிட முடியும் என்று வலியுறுத்துகிறார்.
ஒரு விண்கலம் ஒரு சிறுகோளை சந்திப்பது மற்றொரு விண்கலத்துடன் அவ்வாறு செய்வதை விட சற்றே சிக்கலானதாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், உதாரணமாக, ஈர்ப்பு விசையின் நிலைப்படுத்தும் சக்தி இல்லாமல் வளங்களை எவ்வாறு பிரித்தெடுக்க முடியும்?
“சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி ஒப்பீட்டளவில் நேரடியானது, ஆனால் நாம் விரும்புவதிலிருந்து நாம் விரும்பாததை பிரிக்க ஒருவித வேதியியல் அல்லது வெப்ப செயல்முறை மற்றும் ஈர்ப்பு விசை தேவைப்படுகிறது” என்று லாங்கே கூறுகிறார்.
“விண்வெளியில் அதை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கட்டத்தில், ஏற்கெனவே நிறுவப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமா அல்லது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில் முற்றிலும் புதியவற்றை உருவாக்க வேண்டுமா என்று சொல்வது கடினம்.” என்கிறார்.
பட மூலாதாரம், AstroForge
தனியார் விண்வெளி வணிகத்தின் விளைவுகள் என்ன?
விண்வெளி வளங்களை எவ்வாறு சேகரிக்கலாம் என்பது குறித்த யோசனைகளை நாசா உருவாக்கத் தொடங்கிய 1980கள் வரை சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது பற்றிய யோசனை பெரும்பாலும் அறிவுசார் ஆர்வத்தின் விஷயமாக இருந்தது என்று லாங்கே கூறுகிறார். இந்த யோசனைகள் 1990களில் அதிகரித்த சுற்றுச்சூழல் பிரச்னைகளுடன் வேகமெடுத்தன என்று அவர் மேலும் கூறுகிறார்.
சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மூன் எக்ஸ்பிரஸ், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பல தனியார் நிறுவனங்கள் இதற்காக அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2010களின் இறுதியில், பிளானட்டரி ரிசோர்சஸ், டீப் ஸ்பேஸ் மற்றொரு நிறுவனத்தால் வாங்கப்பட்டு, பிற திட்டங்களை நோக்கி இயக்கப்பட்டது. வணிக மற்றும் தொழில்நுட்ப சவால்களின் காரணமாக சிறுகோள்களில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் இன்னும் 30 ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று லாங்கே நம்புகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம்தான் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியதாக வெஸ்கோவோ வாதிடுகிறார். சிலியில் கிட்டத்தட்ட நிறைவுபெற்றுள்ள வேரா சி ரூபின் ஆய்வகம் போன்ற புதிய ஆய்வகங்கள், விரைவில் சிறுகோள்களின் சிறந்த கண்காணிப்பை வழங்கும். ஒளியியல் மற்றும் ஸ்பெக்ட்ரோகிராஃபிக் பகுப்பாய்வு உலோகங்களை எடுப்பதற்கு தகுதியான சிறுகோள்களை அடையாளம் காண உதவுகின்றன, இவற்றில் எத்தனை சிறுகோள்களில் அது சாத்தியம் என்பது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் கூட. சக்தி வாய்ந்த கணினி தொழில்நுட்பம் மிகவும் பரவலாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. விண்கலத்தை குறைந்த செலவில் உருவாக்க மிகவும் மலிவான பொருட்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
“அரசாங்கங்கள் மட்டுமே இந்த வகையான காரியத்தைச் செய்ய முடியும் அல்லது தொழில்நுட்பத்தை அணுக முடியும் என்பதுதான் சற்று காலம் முன்பு வரை இருந்த நிலை. அவர்கள் அதை ஒருபோதும் திறம்பட செய்யவில்லை” என்று லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட டிரான்ஸ் ஆஸ்ட்ராவின் நிறுவனர் ஜோயல் செர்செல் கூறுகிறார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் உள்ள கழிவுகளை சேகரிப்பதற்காக டிரான்ஸ்ஆஸ்ட்ரா நிறுவனம் ஊதி பெரிதாக்கக்கூடிய வகையிலான பை ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்பது செய்து காட்டும்.
“இப்போது நம்மிடம் ஒரு துடிப்பான தனியார் விண்வெளி வணிகம் உள்ளது, இது சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது மக்கள் கணிப்பதை விட மிக விரைவாக சாத்தியமாக்கப் போகிறது” என்கிறார்.
குறைந்துவரும் விண்வெளித் திட்டங்களின் செலவுகள்
விண்வெளித் துறையின் தனியார்மயமாக்கல் மற்றும் மறு பயன்பாட்டு ராக்கெட்டுகளின் வளர்ச்சி காரணமாக, , சுற்றுவட்டப்பாதையில் ஒரு விண்கலத்தை நிறுவுவது முன்பை போல் அல்லாமல் மிகவும் எளிதானது மற்றும் மலிவானது.
“15 ஆண்டுகளுக்கு முன்பு 1 பவுண்டு (450 கிராம்) எடை கொண்டவற்றை விண்வெளியில் செலுத்த 10,000 டாலர்கள் செலவாகும் நிலையில், இப்போது சில ஆயிரங்களாக அது குறைந்துள்ளது” என்று வெஸ்கோவோ கூறுகிறார். “ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற திட்டங்களுடன் , எதிர்காலத்தில் சில நூறு டாலர்கள் மட்டுமே செலவாகும் என்ற எதிர்பார்க்கலாம்” என்கிறார்.
வானியற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டிகிராஸ் டைசன், உலகின் முதல் டிரில்லியனர் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் வருவார் என்று கூறினார், “நீல் டிகிராஸ் டைசனின் கருத்து தவறல்ல என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவிக்கிறார் வெஸ்கோவோ. எப்படியிருந்தாலும், உலோக எடுப்பின் மூலம் பூமி எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அழிவைத் தடுக்க சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது அவசியம் என்று அவர் நம்புகிறார்.
ஆஸ்ட்ரோஃபோர்ஜின் திட்டங்களைப் பற்றி லாங்கேவுக்கு சந்தேகங்கள் உள்ளன. சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாகலாம் என்று கூறும் அவர் ஆஸ்ட்ரோஃபோர்ஜின் பிளாட்டினம் குழு-மையப்படுத்தப்பட்ட வணிக மாதிரியைப் பற்றி அவர் மிகுந்த நம்பிக்கை கொள்ளவில்லை. “கடலின் அடிப்பகுதி உட்பட பூமியில் இந்த வளங்கள் அதிகமாக இருக்கும் போது, விண்வெளியில் இருந்து அவற்றை சேகரிப்பதை விட பூமியிலிருந்து எடுப்பதே எளிதானதாக இருக்கும். நாம் அந்த வளங்களை எடுக்க நம்மை நாமே அனுமதித்தால், இதற்கான பல சாத்தியக்கூறுகள் உள்ளன” என்றார்.
ஆழ்கடலில் உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
ஆனால் லான்காஸ்டர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி கேத்ரின் மில்லர், விரைவில் ஒழுங்குப்படுத்தப்படவுள்ள ஆழ்கடலில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகளை விட சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணிகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும் என்று வாதிடுகிறார் . நிலத்தடி சுரங்கமும் “சரியானது இல்லை தான்… வாழ்விட அழிப்பு, சமூக நீதி பிரச்னைகள் என பல சிக்கல்கள் உள்ளன. கடற்பரப்பில் இருந்து கோபால்ட் மற்றும் தாமிரம் சேகரிப்பது வளங்களை எடுப்பது மட்டுமில்லை, கடற்பரப்பை அழிப்பதாகும், “என்று மில்லர் கூறுகிறார்.
நிச்சயமாக, ராக்கெட்டுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது மிகவும் மாசு ஏற்படுத்தும், அதிக ஆற்றல் தேவைப்படும் செயலாகும். ஆனால் சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணியும் அவ்வாறானதே. பாரிஸ்-சாக்லே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 2018 ஆம் ஆண்டு ஆய்வில், பூமியில் பிளாட்டினத்தை எடுக்க தோண்டுவதை சிறுகோள்களிலிருந்து உலோகங்களை எடுக்கும் பணி திட்டத்துடன் ஒப்பிட்டது. ஒரு சிறுகோளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் ஒவ்வொரு கிலோ பிளாட்டினத்திற்கும் 150 கிலோ கார்பன் டை ஆக்சைடு பூமியின் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தற்போதைய நடைமுறைகளைப் பயன்படுத்தி பூமியில் 1 கிலோ பிளாட்டினத்தை எடுக்கையில் 40,000 கிலோ கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு காரணம் பூமியில் பிளாட்டினம் மிக அரிதாக கிடைப்பதாகும். பூமியின் மேலோட்டில் ஒரு மில்லியனில் 0.0005 பகுதிகள் மட்டுமே பிளாட்டினம் உள்ளது. அதிக உற்பத்தி செய்யும் சுரங்கங்கள் கூட தற்போது மில்லியனுக்கு ஐந்து முதல் 15 பகுதிகள் என்ற அளவிலேயே செயல்படுகின்றன.
சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான கர்மன்+ என்ற நிறுவனத்தின் நிறுவனர் டேனன் க்ரூல், சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பதானது எதிர்காலத்தில் விண்வெளியில் ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வளங்களைத் தேடுவதில் உள்ளது என்று நினைக்கிறார். 2035 ஆம் ஆண்டில் விண்வெளி பொருளாதாரம் 1.8 டிரில்லியன் டாலர் (£ 1.4 டிரில்லியன்) மதிப்புள்ளதாக இருக்கும் என்று உலக பொருளாதார மன்றம் கணித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான சமநிலை குலையலாம்
விண்வெளியில் உலோகங்களை எடுக்க தோண்டுவது இயற்கையாகவே கனிமங்கள் நிறைந்த வளரும் நாடுகளுக்கும், விண்வெளியில் அவற்றை அறுவடை செய்யத் தேவையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழக விண்வெளி கொள்கை நிறுவனத்தின் அறிஞர் டெகனிட் பைகோவ்ஸ்கி வாதிடுகிறார்.
“விண்வெளியில் பயன்படுத்த விண்வெளியில் வளங்களை சுரங்கப்படுத்துவது ஒரு விஷயம் – இப்போது முன்னணி விண்வெளி பயண நாடுகளைப் பாருங்கள், அவை விண்வெளியில் ஒரு நீடித்த மனித இருப்பை உருவாக்க முயன்று வருகின்றன, அதற்காக பொருட்களை சுரண்டுவது தர்க்க ரீதியானது,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் [நிறுவப்பட்ட] பூமியின் பொருளாதாரத்தில் பயன்படுத்த அந்த வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது மற்றொரு விஷயம். இது பல்வேறு பங்குதாரர்களை பல வழிகளில் பாதிக்கும்” என்கிறார்.
சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுக்கும் பணி என்று வரும்போது, பிளாட்டினம் சுரங்கப் பணிகள்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. அதனுடன் சேர்த்து அரிய வகை உலோகங்கள், அணுக்கரு இணைவுக்குத் தேவையான ஹீலியம் -3 போன்ற பிற வளங்களுடன் வெட்டி எடுக்கப்படலாம். ஆனால், உயிர் காக்கும் ஆக்சிஜன் மற்றும் ராக்கெட் உந்துசக்தியான ஹைட்ரஜனுக்காக தண்ணீரை எடுப்பது, விண்வெளி வாழ்விடங்கள் அல்லது சூரிய ஆற்றல் சேகரிப்பான்களை உருவாக்க பயன்படும் மட்பாண்டங்களின் 3டி அச்சிடலுக்கான களிமண் ஆகியவற்றை சுரங்கத்தின் மூலம் எடுப்பதை யோசித்துப் பாருங்கள் என அவர் கூறுகிறார். சுரங்கத் தொழில் இவற்றை பூமியிலிருந்து முழுவதுமாக விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கான செலவுகளில் பெரும்பகுதியை குறைத்துவிடும்.
“சிறுகோள் வளங்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்தோம், ஆனால் அது தெளிவற்றதாகத் தெரிகிறது” என்று க்ரல் கூறுகிறார். அதற்கு பதிலாக, கர்மன்+ நிறுவனம் விண்வெளியில் உள்ள வளங்களை எடுத்து, விண்வெளியிலேயே பயன்படுத்த திட்டமிடுகிறது. விண்வெளி வாழ்விடங்களை உருவாக்க அல்லது செயற்கைக்கோள்களை பராமரிப்பதற்கு அவை பயன்படலாம். கர்மன்+ நிறுவனம் சமீபத்தில் $20மில்லியன் முதலீட்டை திரட்டியுள்ளது. அதன் முதல் விண்கலத்திற்கான ஏவுதல், மாதிரிகள் சேகரிக்கும் அதன் திறன்களை சோதிக்க பிப்ரவரி 2027 க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி வளங்கள் யாருக்கு சொந்தம்?
இது இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே உள்ளன. இது ஒரு வகையான சுற்றுச்சூழல் சேதத்தை குறைத்து மற்றொன்றை உருவாக்குகிறதா? தோண்டப்பட்டவுடன் அவற்றிலிருந்து எஞ்சியிருக்கும் கழிவுகள் குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என்ற சிக்கலைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள், மற்ற விண்வெளி கழிவுகளைப் போலவே, இதுவும் இறுதியில் பூமியில் விழக்கூடும். இங்கிலாந்தில் உள்ள தி ஓபன் பல்கலைக் கழகத்தின் கிரக மற்றும் விண்வெளி அறிவியல் பேராசிரியர் மோனிகா கிரேடி போன்ற விஞ்ஞானிகள், விண்வெளியின் பரிசுத்தமான சூழலை களங்கப்படுத்தக் கூடாது என்று வாதிட்டனர், அதற்கு பதிலாக மனிதர்கள் ” அவ்வப்போது சுத்தம் செய்ய” கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.
ஆனால் இதற்கு மாறான கருத்துகளும் நிலவுகின்றன. விண்வெளியில் உள்ள வளங்கள் பூமியில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக பார்க்கப்பட வேண்டும் என்று கியாலிச் வாதிடுகிறார். “அங்கு எல்லையற்ற விண்வெளி, எண்ணற்ற விண்கற்கள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு பூமி மட்டுமே உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், இந்த நிறுவனங்களால் தோண்டப்பட்ட சிறுகோள் வளங்களை வாங்கத் தொடங்குவதற்கு முன்பு பதிலளிக்க வேண்டிய இன்னும் ஒரு கேள்வி உள்ளது. உண்மையில் அவற்றை விற்க அந்த வளங்கள் அவர்களுடையதா? இது முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்று இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விண்வெளி சட்ட பேராசிரியரும், லண்டனை தளமாகக் கொண்ட விண்வெளியில் இருந்து உலோகங்களை எடுக்கும் நிறுவனமான ஆஸ்டிராய்ட் மைனிங் கார்பரேஷனின் ஆலோசகருமான ரோசன்னா டெப்லானோ கூறுகிறார்.
115 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச விண்வெளி சட்டம் குறித்த மிகப் பழமையான ஆனால் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தமான 1967 வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம், நாம் விண்வெளியை பொதுவானதாக கருத வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அதன் வளங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. “எனவே [சிறுகோளில் இருந்து உலோகங்களை எடுப்பது] தடை செய்யப்படவில்லை” என்று டெப்லானோ கூறுகிறார்.
இதற்கிடையில், 1979 மூன் (சந்திரன்) ஒப்பந்தம், சந்திரனின் இயற்கை வளங்கள் யாருடைய சொத்தாகவும் மாறக்கூடாது என்று கூறுகிறது – ஆனால் இது சிலி, நெதர்லாந்து, மொராக்கோ உள்ளிட்ட 7 நாடுகளால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவற்றில் எந்த நாடும் இன்றுவரை தங்கள் சொந்த மனிதர்களைக் கொண்ட விண்வெளிப் பயணத் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. விண்வெளி வளங்களைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழு 2027-ல் கூடவுள்ளது, ஆனால் எந்தவொரு அறிவிப்பும் சட்டப்பூர்வமாக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காது.
உண்மையில், யுக்ரேனின் கனிம வளங்கள் மீதான சாத்தியமான உடன்பாடு குறித்து அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான விவாதங்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, தேசிய நலன்கள் முன்னுரிமை பெறக்கூடும்.
“சிறுகோள்களிலிருந்து பிரித்தெடுப்பது அறிவியல் ஆராய்ச்சிக்காக இருந்தால், அது மிகவும் சிக்கலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று டெப்லானோ கூறுகிறார். ஆனால், வணிகமயமாகும்போது அரசியல் மட்டத்தில் பிரச்னை எழுகிறது.
நாடுகள் ஏற்கனவே தங்கள் சொந்த தேசிய கண்ணோட்டத்தில் இருந்து இந்த விவகாரம் குறித்த விளக்கங்களை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறுகிறார். “இது வணிகமயமாக்கலை ஊக்குவிப்பதாகும். அது நடக்கப் போகிறது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.