0
சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவது தொடர்பில் (19ஆவது அத்தியாயமான ) தண்டனைச் சட்டக்கோவையை திருத்துவதற்கான சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதும் அது பாராளுமன்றத்தினால் சட்டமாக அனுமதிக்கப்படவில்லை. அதனால் இதுதொடர்பில் திருத்தங்களை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் பாராளுமன்ற குழுநிலையின்போது சமர்ப்பிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தண்டனைச்சட்ட கோவை திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
என்றாலும் குறித்த சட்டமூலம் தொடர்பில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றதே தவிர, அது சட்டமாக அனுமதித்துக்கொள்ளாமல் ஒத்துவைக்கப்பட்டது.
குறித்த சட்டமூலத்தின் திருத்தங்கள் செயல்வலு பெறுவதாக இருந்தால், இதற்கு சமமாக குற்றவியல் வழக்கு ஏற்பாடுகள் சட்டக் கோவையிலும் திருத்தம் மேற்கொள்னப்பட வேண்டும் என்பதால் குறித்த சட்டமூலம் அனுமதிக்கப்படவில்லை.
இந்த சட்டமூலம் இதுவரை சட்டமாக அனுமதிக்கப்படவில்லை என்பதால், இதில் திருத்தங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றால், குறித்த திருத்தங்களை பாராளுமன்ற குழுநிலையின்போது சமர்ப்பிக்க சந்தர்ப்பம் இருக்கிறது.
சிறுவர்களை உடல்ரீதியாக தண்டிப்பது தொடர்பில் தண்டனைச்சட்ட கோவையில் திருத்தம் மேற்கொள்வதான சட்டமூலம் இதுவரை சட்டமாக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றார்.