பட மூலாதாரம், Getty Images
திரைகளை (screens) பார்க்கும் நேரத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது இளைஞர்கள் செல்போன், தொலைக்காட்சி மற்றும் கேமிங் சாதனங்கள் போன்ற கருவிகளில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக அமையும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (Journal of the American Heart Association) இந்த ஆய்வை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக நேரம் திரைகளைப் பார்ப்பதால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு சமநிலையின்மை, இன்சுலின் எதிர்ப்பு போன்ற இதய வளர்சிதை மாற்ற ஆபத்துக்களை (Cardiometabolic risks – சிஎம்ஆர்) அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆபத்துக்களால் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டென்மார்கைச் சேர்ந்த குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளது. திரைகளைப் பார்க்கும் நேரம் என்பது தூக்கத்தின் நேரம் மற்றும் தரத்தை பாதிக்கிறது.
ஆனால் இது அச்சுறுத்தல் அல்ல, எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்
ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?
இந்த ஆய்வு 10 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 18 வயது வரை உள்ளவர்கள் என இரண்டு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொருவரும் தினசரி எவ்வளவு நேரம் திரைகளைப் (அனைத்து வகையான திரைகள்) பார்க்கிறார்கள் என்கிற கணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் ஒவ்வொருவருக்கும் இடுப்பு அளவு, ரத்த அழுத்தம், ஹச்டிஎல் கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், குளுக்கோஸ் போன்ற அளவீடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவை போக தூக்கம், உடல் செயல்பாடுகள், உணவுப் பழக்கம் போன்றவையும் தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த குறியீடுகளை அடிப்படையாக வைத்து சிஎம்ஆர் மதிப்பெண் (Cardiometabolic risk score) அளவிடப்பட்டது.
ஆய்வு முடிவுகள் என்ன? தூக்கத்திற்கு என்ன தொடர்பு?
பட மூலாதாரம், Getty Images
இதில் திரைகளை அதிக நேரம் பார்ப்பவர்களிடம் இதய வளர்சிதை மாற்ற ஆபத்துக்கள் அதிகமாக இருப்பது தெரியவந்தது. 6-10 வயது உள்ள குழந்தைகளிடம் திரையை பார்க்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க ஆபத்தான குறியீடுகளும் அதிகரிக்கின்றன. 18 வயது உடையவர்களுக்கு இந்த ஆபத்து மேலும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- அதிக நேரம் திரையைப் பார்த்து குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- அதே போல் ஒருவர் தூங்கும் நேரம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அவர் மிகவும் தாமதமாக தூங்கச் செல்கிறார் என்றாலும் அவருக்கு இதய நோய் ஆபத்துக்கள் அதிகரிக்கிறது.
- தூங்குவதற்கு முன்பாக நீண்ட நேரம் திரையைப் பார்ப்பது உடலை பாதித்து, மெலடோனின் (தூக்கத்திற்கு உதவும் ஹார்மோன்) உற்பத்தியை பாதித்து தூங்கும் நேரத்தை வெகுவாக குறைக்கிறது.
- தூங்குகின்ற நேரம் மட்டுமல்ல தூக்கத்தின் தரமும் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு செய்வதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை ஒவ்வொரு தலைமுறைக்கும் வேறுபடுகிறது என்கிறார் மருத்துவ மனநல ஆலோசகரான எஸ்.வந்தனா.
“தொலைக்காட்சியை பார்க்கிறபோது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அமர்ந்து நிலையாக பார்ப்போம். அதனால் பெரிய பாதிப்புகள் வரவில்லை. ஆனால் சிறிய திரை வந்தபிறகுதான் பாதிப்புகள் அதிகமாகின. சிறிய திரையை தொடர்ந்து உற்றுநோக்கும்போது மெலடோனின் சுரப்பது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.”
‘அச்சுறுத்தல் அல்ல, எச்சரிக்கையாக பார்க்க வேண்டும்’
பட மூலாதாரம், Getty Images
இதய நோய் என்பதை பதின்ம வயதினரைவிட 18 வயதைக் கடந்தவர்களுக்குதான் வருவதற்கான வாய்ப்புள்ளதாக கூறுகிறார் இதயவியல் மருத்துவரான மதன் மோகன்.
“இதை ஒரு எச்சரிக்கையாக நாம் பார்க்க வேண்டும். குழந்தைகளை இதய நோய் வந்துவிடும் என நாம் புரிந்து கொள்ளக்கூடாது. ஆனால் நாளடைவில் அதற்கான ஆபத்து இந்த வயதில் அதிகரிக்கக்கூடும்.” என்றார்.
இதய நோய் ஆபத்துக்களை கணக்கிட பல குறியீடுகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட மதன், “6 – 8 மணி நேரம் உறக்கம் என்பது மிகவும் அவசியமானது. இளம் வயதில் உள்ளவர்களுக்கு ரத்த நாளங்கள் அப்போதுதான் வளர்ந்து வரும். அவை தான் முதலில் பாதிக்கப்படும். உடல்சார்ந்த செயல்பாடுகள் இல்லையென்றால் ரத்தவோட்டம் குறைவாக இருக்கும். இதுவும் இதயத்தைத்தான் பாதிக்கின்றது.” எனத் தெரிவித்தார்.
‘அனைத்து இணைய நுகர்வும் ஒன்றல்ல’
பட மூலாதாரம், Getty Images
மாணவர்கள் மத்தியில் சமூக தனிப்படுத்தலால்தான் சாதனங்களில் பயன்பாடு அதிகமாகிறது என்கிறார் மனநல ஆலோசகரான சரண்யா ஜெயக்குமார். “இணையத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. கவர்ச்சிகரமான திரை நேரம் (attractive screen time) என ஒன்று உண்டு. கல்வி சார்ந்த வீடியோக்களைவிட கேம்கள், ஷாட் வீடியோக்கள் போன்றவை எளிதில் கவர்ந்துவிடும். ஆனால் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்றார்.
வயது வந்தவர்களிடம் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்துவிட முடியும் என்று கூறும் குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்புகளை அவ்வாறு செய்ய முடிவதில்லை என்கிறார் அவர்.
“பொழுதுபோக்கு விஷயங்களால் டோபமைன், செரோடோனின் மற்றும் எண்டோர்பின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இவை விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற உடல்சார்ந்த செயல்பாடுகளால் வர வேண்டியவை. ஆனால் உடல் அசைவே இல்லாமல் இவை சுரக்கின்றன. இவை உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்தார்.
பாதிப்புகளைத் தவிர்க்க எனன் செய்ய வேண்டும்?
“உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, நாம் பின்பற்றும் உணவு பழக்கம் என பல காரணிகள் இருந்தாலும் தூக்கம்தான் முதன்மையானது. தூக்கம் பாதிக்கப்படுகிறபோதுதான் மற்ற பிரச்னைகளும் சேர்ந்து வருகிறது. தூக்கம் பாதித்தாலும் மூளை செயல்பாடு பாதிக்கும், அதனைத் தொடர்ந்து உணவுப் பழக்கம் பாதிக்கும். இது ஒரு சுழற்சி போல உள்ளது. எனவே தூக்கத்தை முதலில் சரி செய்வதன் மூலம் மற்ற அனைத்தையும் சரி செய்ய முடியும்” எனத் தெரிவித்தார் வந்தனா.
திரைகளைப் பார்க்கின்ற நேரம், பார்க்கின்ற விஷயங்கள் உட்பட அனைத்துமே ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்கிறார் சரண்யா.
“அமெரிக்க உளவியல் அமைப்பு, இரண்டு வயது வரை திரைகளை காட்டவே கூடாது என்று பரிந்துரைக்கிறது. அதே நேரத்தில் குழந்தைகள் வளர வளர அவர்களை படிப்படியாக திரைக்குப் பழக்க வேண்டும். இதற்கு ‘guided watching’ என்று பெயர். இணையத்தில் என்ன பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்பதை ஒழுங்குபடுத்த வேண்டும். திரைக்கு அடிமையாவதால் (Screen addiction) பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அதனை படிப்படியாகதான் நிறுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக அதிக ஆற்றல் சார்ந்த செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு