• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு

Byadmin

Nov 2, 2025


சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சனிக்கிழமை (01)  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் அமைந்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கமைய இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் குறித்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல்கைதிகளின் உறவினர்கள் ஆகியோரால் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும், அவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

அத்தோடு தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தம்மால் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுமெனவும், உரிய இடங்களுக்கு கொண்டுசென்று அவர்களின் விடுவிப்புத் தொடர்பில் தம்மால் வலியுறுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

மேலும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களால் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு appeared first on Vanakkam London.

By admin