பட மூலாதாரம், X/Vikram Prabhu
விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் ‘சிறை’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. போலீஸ் டிராமா படங்களின் வரிசையில் அடுத்த படமாக சிறை வெளிவந்துள்ளது.
திரைப்படம் வெளியான சில நாட்களிலே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. படத்தின் சில காட்சிகளைப் பற்றி சமூக ஊடகங்களில் விமர்சனப்பூர்வமாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
வேலூர் சிறையிலிருந்து ஒரு இஸ்லாமியக் கைதியை காவலர்கள் சிவகங்கை நீதிமன்றதுக்கு பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர். வழியில் கைதி காவலரின் துப்பாக்கியுடன் தப்பித்துவிடுகிறார்.
தப்பித்த கைதி பிடிபட்டரா, அவரின் பின்னணி என்ன, காவலர்களுக்கு என்ன நடந்தது ஆகியவை சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லராக கூறப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபு, கதிரவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஆனந்த தம்பிராஜா ‘மரியம்’ என்கிற சக காவலர் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
எல்.கே அக்ஷய் குமார், அப்துல் ரௌஃப் என்கிற கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கைதியின் காதலியான கலையரசி வேடத்தில் அனிஷ்மா நடித்திருக்கிறார். காதர் பாஷா என்கிற ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மூணார் ரமேஷ் நடித்துள்ளார்.
டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரும் இயக்குநரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
இந்தப் படம் தொடர்பான விமர்சனங்கள் ஊடகங்களில் வந்திருக்கின்றன. முதன்மை கதாபாத்திரங்களைத் தாண்டி துணை கதாபாத்திரங்களும் படத்தின் தொழில்நுட்ப பங்களிப்பும் விமர்சனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான கதையுடனே வந்திருக்கிறார் என தினமணி திரை விமர்சனம் தெரிவிக்கிறது.
“அளவான நடிப்பில் அசத்தும் விக்ரம் பிரபு”
பட மூலாதாரம், X/Vikram Prabhu
மேலும் தினமணி விமர்சனத்தில்,”இடைவேளை மற்றும் காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. வசனங்களிலும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டதால் சில வசனங்களும் தனித்தனியான கதைகளைச் சொல்கின்றன. முக்கியமாக, ஒரு குற்றவாளி இஸ்லாமியராக இருந்தால் அதிகார அமைப்பு அவரை எப்படி கையாள்கிறது என்பதை அழுத்தமாக ஒரே காட்சியில் சொல்லப்பட்டது மனதை தொந்தரவு செய்ய வைக்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பை பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனத்தில், “விக்ரம் பிரபு, நிஜமான போலீஸ்காரராகவே நெஞ்சில் பதிகிறார். மனசாட்சிக்கும், மனிதாபிமானத்துக்கும் இடையே சிக்கும் இடங்களில் இயல்பான நடிப்பாலும் அலங்கரிக்கிறார். இந்த புதிய விக்ரம் பிரபு இனியும் தொடரவேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை போன்ற திரைப்படங்களின் வெற்றி, அதில் சிக்கியுள்ள மக்களைப் பற்றி நம்மை கவலைப்பட வைக்கிறதா என்பதைப் பொருத்து அமைகிறது எனக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், சிறை திரைப்படம் அதை விக்ரம் பிரபுவின் அளவான நடிப்பின் மூலம் செய்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
கதாசிரியராக ஜொலிக்கும் இயக்குநர் தமிழ்
தமிழ் எழுதும் காவல்துறை சார்ந்த காட்சிகள் சில புதுமையான அனுபவங்களைத் தருகின்றன என தினமணி விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். இவர் காவல்துறையில் பணியாற்றியதால் அதில் கிடைத்த அனுபவங்கள், கடைநிலை காவலர்களின் பணிச்சூழல், அதிகார அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார். முக்கியமாக, இந்தப் படத்தில் எஸ்கார்ட் காவலர்களின் பணிச்சூழல் எப்படி என பதிவாகியிருக்கிறது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மற்றும் பாதுகாப்புக்குச் சென்ற காவலரின் விதி சிறப்பான த்ரில்லராக உருவாக்கப்பட்டு, மத வெறிக்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கிறது என தி இந்து விமர்சனம் கூறுகிறது.
“இத்தகைய சிறிய கதை களத்திலும் கதாசிரியர் தமிழ் மற்றும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி மதவெறிக்கு எதிராக ஆழமான கருத்துக்களைத் தெரிவிக்க பல தருணங்களை வைத்துள்ளனர்,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Seven Screen Studios
காவல்துறை நடைமுறை எந்த விதமான பிரமாண்டமும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்திற்கு உதவி செய்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம் தெரிவிக்கிறது.
“தண்டனை கைதிகளை அழைத்துச் செல்வது, நீதிமன்ற விசாரணை, சார்புடன் செயல்படும் அதிகாரிகள் என எதுவுமே புதியவை கிடையாது. ஆனால் இவை அனைத்தையுமே தேவையான நேர்மையுடன் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தில் வழங்கியுள்ளார்,” என அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுமுகங்களின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக தி இந்து விமர்சனம் கூறுகிறது.
“படத்தில் ஆச்சரியமாக அமைந்தது புதுமுகங்களான அக்ஷய் மற்றும் அனிஷ்மாவின் நடிப்பு தான். இதில் அனிஷ்மா குறைவான காட்சிகளே கிடைத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்ஷயும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,” என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒளிப்பதிவு, படத்தொகுப்பு படத்தின் பலம்”
தொழில்நுட்ப ரீதியாகவும் அனைவரும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர் என தினமணியின் விமர்சனம் தெரிவிக்கிறது.
“இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. முக்கியமாக, அப்துலுக்கும் கலையரசிக்குமான காதல் பாடலை எடுத்த விதம் அழகு.”
“எடிட்டர் பிலோமின் ராஜ் தேர்ந்த கலைஞர் என்பதால் கதையை எவ்வளவு பரபரப்பாக்க வேண்டுமோ அவ்வளவு கட்ஸை வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் நெருங்க, நெருங்க ஒருவித பதற்றம் ஆட்கொள்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு சிறப்பான ஜஸ்டிஸ் வழங்கியிருக்கிறார். பின்னணி இசைகள் ஒவ்வொன்றும் கதைச்சூழலுக்கு ஏற்ப அமைக்கபட்டிருந்தது.” என தினமணி விமர்சனம் கூறுகிறது.
பட மூலாதாரம், X/Vikram Prabhu
“படத்தில் மேலோங்கும் டிராமாத்தனம்” – தடுமாறும் இடங்கள் எவை?
படத்தில் சில இடங்களில் டிராமாத்தனம் தெரிவதாகப் பரவலாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
“கலையரசி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை பின் தொடரும்போது படத்தில் டிராமாத்தனம் மேலோங்குகிறது. ஆனால் படம் குறைவான நேரமே ஓடுவதால் இந்தக் காட்சிகள் நிலைக்கவில்லை.” என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராமா என்பதைத் தாண்டி யதார்த்தத்தின் மீது படம் கவனம் செலுத்தினாலும் தேவைக்கும் அதிகமான இடங்களில் டிராமாத்தனம் எட்டிப் பார்க்கிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
“அப்துலின் கதையைக் கூறும் ஃப்ளேஷ்பேக்கில் தான் படம் தடுமாறுகிறது. பெரும்பான்மை இந்து கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் குடும்பம், வன்முறையாக மாறும் மத அடிப்படையிலான பாரபட்சம், மதுப்பழக்கம் கொண்ட வில்லன் கதாபாத்திரம் என அதிகமாக பழக்கப்பட்டதாகவே இருக்கிறது.” என்றும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

“ஆனால் இந்த சறுக்கல்கள் அனைத்தும் விக்ரம் பிரபுவின் நடிப்பு மற்றும் படத்தில் நடைமுறை நேர்மறையால் மறைக்கப்படுகிறது”
“பரபரப்பான திரைக்கதை பலம். சில இடங்களில் காட்சிகளில் தொய்வு தென்படுகிறது, யூகிக்கவும் முடிகிறது. ஆங்காங்கே லாஜிக் மீறலை தவிர்த்திருக்கலாம்,” என தினத்தந்தி விமர்சனம் தெரிவிக்கிறது.
கதையின் குறையைச் சுட்டிக்காட்டும் தினமணி விமர்சனத்தில், “அதேநேரம், சிறை தனித்துவமான கதையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தாலும் பாதியில் ஆரம்பித்தது போல் முதல் காட்சிகள் இருந்தது சிறிய குறை. விக்ரம் பிரபுவுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளை வழங்கியிருந்தால் சிறைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு