1
தயாரிப்பு : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : விக்ரம் பிரபு, எல் கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா, மூணார் ரமேஷ், பி. எல். தேனப்பன் மற்றும் பலர்.
இயக்கம் : சுரேஷ் ராஜகுமாரி
மதிப்பீடு: 3 / 5
கொலை குற்றவாளி என கருதப்பட்டு தமிழகத்தின் வட பகுதியான வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரவூப் ( எல். கே. அக்ஷய் குமார்) எனும் குற்றவாளியை தமிழகத்தின் தென் பகுதியான சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக ஆயுதப்படை காவலரான கதிரவன் ( விக்ரம் பிரபு) தலைமையிலான குழுவினர் அழைத்துச் செல்கிறார்கள். கைதியை பாதுகாப்புடன் பேருந்தில் அழைத்துச் செல்லும் போது உணவுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில் துப்பாக்கியுடன் கைதி தப்பி விடுகிறார்.
அதன் பிறகு காவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் அவரை தேடி கண்டுபிடித்தார்களா? நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தினார்களா? இல்லையா? அந்த கொலை குற்றவாளியின் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்து சொல்வது தான் இப்படத்தின் கதை.
காவலர் கதிரவனுடைய கோணத்தில் தொடங்கும் இந்த கதையில் மூன்றாவது நிமிடத்தில் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு உச்சகட்ட காட்சி வரை குறையாமல் நீடிக்கிறது.
முதல் பாதியில் பார்வையாளர்கள் எளிதாக யூகிக்கும் வகையில் கதை பயணித்தாலும் அதனை காட்சிப்படுத்தி இருப்பதில் ஒட்டுமொத்த படக் குழுவினரும் பார்வையாளர்களை நுட்பமான விவரணங்கள் மூலம் வியக்க வைக்கிறார்கள்.
அப்துல் ரவூப் – கலையரசி( அனீஷ்மா அனில் குமார்) இடையேயான காதல் காட்சிகள்- பிளாஷ்பேக்கில் வந்தாலும் இளமை துள்ளல்.
ஐந்தாண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்துலிடம் நீதி அரசர், நீதிமன்ற நடைமுறை குறித்து நீண்ட கால தாமதத்திற்காக அவரிடம் மன்னிப்பு கேட்பதை நீதிமன்றத்தில் இடம்பெற வைக்காமல் நீதியரசரின் பிரத்யேக அறையில் அவருடைய தனிப்பட்ட கருத்தாக இடம்பெற செய்யும் அளவிற்கு நுட்பமாக யோசித்த இயக்குநர் பேருந்தில் கைதியை விலங்கிட்டு அழைத்துச் செல்லும் காட்சியில் உணவு பசியாறிய பின் பேருந்தை இயக்கும் போது அந்த மூன்று பயணிகள் இல்லாமல் பேருந்தை நடத்துனரும், சாரதியும் எப்படி தொடர்ந்து இயக்க முடியும்? என்ற சட்டபூர்வமான நடைமுறையை மறந்தது ஏன்? என தெரியவில்லை.
இஸ்லாமியர்களை பற்றிய கருத்தியல் இயல்பாக விவரிக்கப்பட்டிருந்தாலும் .. அதிலும் பிரச்சார தொனி எதிரொலிக்க தான் செய்கிறது. குறிப்பாக காதர் பாட்ஷா எனும் காவலரின் உரையாடல் அப்பட்டமான திணிப்பு.
கதிரவன் என்ற ஆயுதப்படை காவலராக நடித்திருக்கும் விக்ரம் பிரபு அவருடைய திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறார். அத்துடன் படத்தின் இறுதிக் காட்சியில் சக காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, ‘வெகுஜன மக்களுக்கு நண்பனாக இருந்து உங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தின் மூலம் ஏதேனும் உதவி செய்ய வாய்ப்பு கிடைத்தால்.. உதவி செய்யுங்கள் ‘ என்ற கோரிக்கையை முன்வைக்கும் இடத்தில் இயக்குநர் – விக்ரம் பிரபு உள்ளிட்ட படக் குழுவினருக்கு ராயல் சல்யூட் வைக்கலாம்.
அப்துல் ரவூப் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் எல். கே. அக்ஷய் குமாருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக நாயகன் விருது கிடைக்கும் என உறுதியாக கூறலாம்.
கலையரசி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அனீஷ்மா அனில் குமார் இளமை துள்ளலுடன் காதல் காட்சிகளில் அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்கிறார்.
ஒளிப்பதிவு , பின்னணி இசை ஆகியவற்றை விட படத்தொகுப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
சிறை – ஆண்டின் இறுதியில் கிடைத்த சிறந்த இரை.