- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 7 குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, 72 வயது முதியவர் உட்பட ஏழு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளியில், பெண் குழந்தைகளுக்கு பாலியல் அத்துமீறல் மற்றும் ‘குட் டச், பேட் டச்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கேள்வி எழுப்பப்பட்டபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தாக்கியதாகவும், இதனால் காயமடைந்த அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? இம்மாதிரியான பாலியல் துன்புறுத்தல்களை பெண் குழந்தைகள் தாமாக முன்வந்து கூறுவதில் உள்ள சிக்கல்கள் என்ன, அவற்றை எப்படி களைவது என அலசுகிறது இந்த கட்டுரை.
என்ன நடந்தது?
சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த வாரம் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் நடத்தினர்.
இப்பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் குறித்தும், ‘குட் டச், பேட் டச்’ குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது. அப்போது, இதுபோன்ற அத்துமீறல்களை சந்தித்திருக்கிறீர்களா என அக்குழந்தைகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அதில் ஏழு பெண் குழந்தைகள், ஏழு நபர்கள் மீது பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நல குழுவினர் மானாமதுரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் கொடுத்ததன் அடிப்படையில், சிவகங்கை சிப்காட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில், ராமு (46), பழனி (42), மணி (50), சசிவர்ணம் (38), லெட்சுமணன் (46), முனியன் (66), மூக்கன் (72) ஆகிய ஏழு பேரிடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிறகு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் கைது செய்யப்படும் சமயத்தில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை தாக்கியதில், காயமடைந்த அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட 7 நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தத் திட்டம்
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “எங்கள் ஊரில் இருந்து பள்ளிக்குப் படிக்கச் செல்லும் பெண் குழந்தைளை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக ஆறு மாதத்திற்கு முன்பு எங்களிடம் வந்து கூறினார்கள். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து விசாரித்து கண்டித்தோம்.
ஆனால் தொடர்ச்சியாக அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தது எங்களுக்குத் தெரியாது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய வந்தது,” என கூறினார்.
இந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கடந்த முறை பெற்றோரிடம் கூறியபோது, தங்களுக்குப் படிப்பறிவு இல்லாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் விட்டுவிட்டதாகவும் தொடர்ந்து கிராமத்தில் கூட்டம் கூடி சம்பந்தப்பட்டவர்களை கண்டித்து மட்டும் விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
இனியும் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்க கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது சம்பந்தமாக பேசி வருவதாகவும் இனி விழிப்புடன் இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு என்ன நடந்தது?
இவ்வழக்கு விசாரணையில் தொடர்புடைய, அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஏழு சிறுமிகள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மாத காலமாக கிராமத்தில் வசித்து வரும் ஒரு சில ஆண்கள், குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை குழந்தைகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு குழந்தைகள் ஆளான நிலையில் அது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளனர். அதனடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு வரப்பட்டது,” என்றார்.
அதனடிப்படையில், பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர் பெண் குழந்தைகள் மத்தியில் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும், ‘குட் டச், பேட் டச்’ குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு எடுத்தனர்.
“பின்னர் குழந்தைகளிடம் இவ்வாறு யாராவது உங்களிடம் நடந்து கொண்டுள்ளனரா என கேட்டதற்கு, ஏழு பெண் குழந்தைகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக எங்களிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஐந்து பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கும் இரு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளது தெரியவந்துள்ளது என்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு சமூக ஆர்வலர் கூறுகிறார்.
சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெற்றோரிடம் புகார்களை பெற்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பள்ளிகளில் விழிப்புணர்வு வகுப்புகள் எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் புகார் அளிக்க முன்வருவதில் உள்ள சிக்கல்கள்
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பக இணை அமைப்பாளர் ஸ்டேகானா ஜென்சி, “குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் என்பது குறித்து அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்” என கூறினார்.
குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்றை யாராவது செய்யும்போது அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை முதலில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“கடந்த 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு அமைத்து குழந்தைகளுக்கு பாலியல் பிரச்னைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், இன்றும் பல பள்ளிகளில் அது பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர, முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஆனால், ஒரு சில பள்ளிகளில் அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.” என கூறினார்.
பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு குழு முறையாக செயல்படுகிறதா என தமிழக அரசு கவனம் செலுத்தி சரி செய்து முறைப்படுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ எனும் பெயரில் புகார் பெட்டி வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் பெறும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் அவர், குழந்தைகள் மத்தியில் நம்பகத்தன்மை ஏற்பட்டால்தான் அவர்கள் புகார் அளிக்க முன்வருவார்கள்,” என்றும் கூறினார்.
“குழந்தைகளுக்குப் புரியும்படி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வடிவிலான வீடியோக்களை பள்ளியில் வாரத்துக்கு இரு முறை ஒளிபரப்பி விவாதித்தால் நிச்சயம் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படும்,” என கூறுகிறார் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பக இணை அமைப்பாளர் ஸ்டேகானா ஜென்சி.
என்ன காரணம்?
போக்சோ வழக்குகளை விரைந்து விசாரித்து ஆறு மாத காலத்துக்குள் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கிறார், தமிழ்நாடு குழந்தை உரிமை கண்காணிப்பக சட்டப்பிரிவு அமைப்பாளர் வழக்கறிஞர் தென் பாண்டியன்.
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசியவர், “குழந்தைகள் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதனை முன்பு பொருட்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விழிப்புணர்வு அதிகரித்ததால் பெற்றோர் புகார் அளிக்க அதிகமாக முன் வருகின்றனர்” என கூறினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில், ஆறு மாத காலத்தில் போக்சோ வழக்குகள் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
“ஆனால் போக்சோ வழக்குகள் அனைத்தும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நடைபெறுவதால், சாட்சிகளை சரியாக விசாரிக்க முடியாமல், வழக்குகள் தேங்கி விடுகின்றன” என்கிறார் தென் பாண்டியன்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் செயல்படுவதால் வழக்கு அங்கு விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஏனைய மாவட்டங்களில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படுவதால், வழக்குகள் விரைந்து முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
போக்சோ வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுக் கொடுத்தால் நிச்சயம் போக்சோ வழக்குகள் குறையும் எனவும் தென் பாண்டியன் வலியுறுத்துகிறார்.
உதவியை நாட…
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக புகார் செய்ய அல்லது உதவியை பெற, 1098 எனும் 24 மணிநேர இலவச ஹெல்ப்லைன் எண்ணை தொடர்புகொள்ளவும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு