பட மூலாதாரம், Getty Images
பிரம்மாண்ட அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புதிய ஆயுதங்கள் சீனாவின் ராணுவ வலிமையைப் பற்றி என்ன சொல்கின்றன?
சீனா ஒரு பெரிய அணிவகுப்பில் பல புதிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்தியது. இதை அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெரிவிக்கப்படும் ஒரு தெளிவான செய்தியாக பலர் பார்க்கின்றனர்.
இந்த நிகழ்வில் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு அளித்தார். ரஷ்யாவும் வட கொரியாவும் பொருளாதார ஆதரவு மற்றும் பலவற்றிற்காக சீனாவை நம்பியுள்ளனர்.
இது உலக அரங்கில் அதிபர் ஷி-யின் வளர்ந்து வரும் சக்தியையும், சீனாவின் ராணுவ வலிமையையும் வெளிப்படுத்தியது – இந்த நிகழ்ச்சியில் “குவாம் கொலையாளி” (Guam Killer) ஏவுகணை, “விசுவாசமான விங்மேன்” (Loyal Wingman) ட்ரோன் மற்றும் ரோபோ ஓநாய்களும் இடம்பெற்றன.
ஆர்வத்தை தூண்டும் பளபளப்பான புதிய ஆயுதங்களுக்கு அப்பால், இந்த அணிவகுப்பின் மூலம் நாம் என்ன தெரிந்துக் கொள்ளக் கூடும் ஐந்து விசயங்கள் என்ன?
1. சீனாவிடம் நிறைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எவ்வளவு நன்றாகப் பயன்படுத்த முடியும்?
சீனா பலதரப்பட்ட ஆயுதங்களை விரைவாக உற்பத்தி செய்ய முடிந்துள்ளது என்பது புதன்கிழமை நடைபெற்ற அணிவகுப்பின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் காட்சிக்கு வைத்த ராணுவ தொழில்நுட்பம் அமெரிக்கா கண்டுபிடித்த மிகவும் மேம்பட்ட உபகரணங்களின் “அடிப்படை நகல்களாக” இருந்தன என்று சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ராணுவ உருமாற்றங்கள் திட்டத்தின் உதவிப் பேராசிரியர் மைக்கேல் ரஸ்கா குறிப்பிடுகிறார்.
ஆனால் இந்த அணிவகுப்பு மிகவும் புதுமையான மற்றும் மாறுபட்ட ஆயுதங்களை, குறிப்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது – இது அவர்களின் பாதுகாப்பு-தொழில்துறை வளாகம் எவ்வளவு மேம்பட்டதாக மாறியுள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.
சீனாவின் மேலிருந்து-கீழ் கட்டமைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க வளங்கள் பல நாடுகளை விட வேகமாக புதிய ஆயுதங்களை உருவாக்க உதவுகின்றன என்று பசிபிக் மன்றத்தின் துணை உறுப்பினர் அலெக்சாண்டர் நீல் சுட்டிக்காட்டுகிறார்.
சீனாவால் அவற்றை பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும், இது அவர்களுக்கு போர்க்களத்தில் எதிரியை திக்குமுக்காடச் செய்யும் அளவிலான சாதகத்தை தரக்கூடும்.
“வெடிமருந்துகள், கப்பல்கள், இந்த தளங்கள் அனைத்தையும் உருவாக்கும் திறன் சீனாவுக்கு உள்ளது… அரசு இந்த உத்தரவுகளை பிறப்பித்தால் போதும்,” என்கிறார் நீல்.
ஆனால் சீனாவின் ராணுவம் இந்த ஆயுத அமைப்புகளை எவ்வளவு நன்றாக ஒருங்கிணைக்க முடியும்?
“அவர்கள் இந்த பளபளப்பான மேம்பட்ட ஆயுதங்களை காட்ட முடியும், ஆனால் அவர்கள் விரும்பும் வழியில் அவற்றைப் பயன்படுத்த அவர்கள் அமைப்பு ரீதியாக திறன் கொண்டிருக்கிறார்களா? ” என டாக்டர் ரஸ்கா கேட்கிறார்.
சீன ராணுவம் மிகப்பெரியது, ஆனால் சோதிக்கப்படாதது என்பதால் இது எளிதானது அல்ல என்று அவர் கூறுகிறார். ஏனெனில் அவர்கள் பல தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
2. ஏவுகணைகளில் கவனம் செலுத்த காரணம் என்ன?
சில புதிய வகைகள் உட்பட ஏராளமான ஏவுகணைகளை சீனா காட்சிப்படுத்தியது.
இவற்றில் டோங்ஃபெங் -61 அடங்கும், இந்த ஏவுகணை பல ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது, அடுத்து வடக்கு சீனாவில் இருந்து ஏவப்பட்டு அமெரிக்காவைத் தாக்கக்கூடிய டோங்ஃபெங் -5 சி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை. இது தவிர , “குவாம் கில்லர்” டோங்ஃபெங்-26டி இடைநிலை தூர ஏவுகணை, இது குவாமில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளங்களைத் தாக்கக் கூடியது.
YJ-17 மற்றும் YJ-19 போன்ற பல ஹைப்பர்சோனிக் கப்பல் தாக்கும் ஏவுகணைகளும் இருந்தன. அவை மிக வேகமாக பறக்கக்கூடியவை, ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைத் தவிர்க்க கணிக்க முடியாத வகையில் பயணிக்கக் கூடியவை.
ஏவுகணைகள் மீது இவ்வளவு கவனம் செலுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
சீனா தனது தடுப்பு மூலோபாயத்தின் முக்கிய பகுதியாக ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் படைகளை உருவாக்கி வருகிறது, அமெரிக்காவின் கடற்படை மேலாதிக்கத்தை எதிர்கொள்ளவும் சீனா இதை செய்கிறது என்று நீல் கூறுகிறார்.
விமானந்தாங்கி கப்பல்கள், விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களின் மிகப்பெரிய கடற்படையுடன் அமெரிக்க கடற்படை உலகில் நிகரற்றதாக உள்ளது – சீனா இன்னும் அந்த விஷயத்தில் பின்தங்கியுள்ளது.
ஆனால், மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர்கள் சிலர் இந்த தாக்குதல் குழுக்கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவை என்று வாதிடுகின்றனர். ஏனெனில் இவை எந்தவொரு ஏவுகணை தாக்குதல்களிலும் எளிதில் தாக்கப்படலாம் என்று நீல் சுட்டிக்காட்டுகிறார்.
பெய்ஜிங் தடுப்புமுறையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், “இரண்டாவது தாக்குதல் திறன்” – அதாவது தாக்கப்பட்டால் பதிலடி தாக்குதலைத் தொடங்கும் ஒரு நாட்டின் திறனை உருவாக்கி வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.
மற்ற குறிப்பிடத்தக்க ஆயுதங்களில் அதிகம் பேசப்பட்டது LY-1 லேசர் ஆயுதமாகும். இது அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை முடக்கவோ எரிக்கவோ, அல்லது விமானிகளின் பார்வையை பறிக்கவோ கூடிய ஒரு மாபெரும் லேசர் ஆகும். இது தவிர ஜே -20 மற்றும் ஜே -35 விமானங்கள் உட்பட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் (ரேடாரால் சிக்குவதற்கு கடினமான ) விமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
3. செயற்கை நுண்ணறிவில் துணிச்சலுக்கு என்ன காரணம்?
நிறைய வகையிலான ட்ரோன்கள் இருந்தன, அவற்றில் சில செயற்கை நுண்ணறிவால் இயங்கக் கூடியவை. ஆனால் கண்களைக் கவர்ந்தது AJX-002 எனும் மாபெரும் நீர்மூழ்கிக் கப்பல் ட்ரோன் ஆகும்.
20 மீ (65 அடி) நீளம் கொண்ட இது, மிகப் பெரிய ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் (Extra-Large Uncrewed Underwater Vehicle) என்றும் அழைக்கப்படுகிறது. இது கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளைச் செய்ய முடியும்.
சீனா தனது ஜி.ஜே -11 (GJ-11) ஸ்டெல்த் தாக்குதல் ட்ரோனையும் காட்டியது. இது “விசுவாசமான விங்மேன்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போர் விமானத்துடன் பறந்து அதன் தாக்குதல்களுக்கு உதவக்கூடியது.
வழக்கமான வான்வழி ட்ரோன்களை தவிர, “ரோபோ ஓநாய்களும்” இருந்தன. வேவு பார்த்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல் முதல் எதிரி வீரர்களை வேட்டையாடுவது வரை பல்வேறு பணிகளுக்கு இவை பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ட்ரோன் காட்சிப்படுத்தலை பார்க்கும் போது, சீனா தனது ராணுவ மூலோபாயத்தை எந்த திசையில் நகர்த்த விரும்புகிறது என்று தெளிவாக தெரிகிறது. சீனா “அதிகரிக்க விரும்புவது மட்டுமல்லாமல், பாரம்பரிய கட்டமைப்புகளை மாற்றவும் விரும்புகிறது”.
சீனா யுக்ரேன் போரில் இருந்து தெளிவாக பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது. அதாவது ஒருவர் “எதிரிகள் மீது ட்ரோன்களை வீசி” எதிரியின் பாதுகாப்புகளை தகர்க்க முடியும் என்று டாக்டர் ரஸ்கா குறிப்பிடுகிறார்.
“கொலைச் சங்கிலியில் (ராணுவத்தில் ஒரு இலக்கை கண்டறிந்து, அதை நோக்கிச் சென்று, தாக்குவது என்ற படிப்படியான நகர்வுகளை குறிக்கும்) சுறுசுறுப்பு முக்கியமானது,” என்று நீல் கூறுகிறார். அதி வேகமாக நடைபெறும் போரில், எதிரியைத் தோற்கடித்து மேலாதிக்கத்தைப் பெறுவதற்கு “நானோ விநாடிகளில்” முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் – இதைத்தான் செயற்கை நுண்ணறிவு செய்ய முடியும்.
பல நாடுகள் தங்கள் ராணுவ அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்து இன்னும் கவலை கொண்டுள்ளன. மேலும் “செயற்கை நுண்ணறிவை இலக்கை தகர்க்கும் நகர்வுச் சங்கிலியில் பயன்படுத்துவதில் நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம்” என்று பல நாடுகளும் யோசிக்கின்றன என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆனால் சீனா அதை மிகவும் வசதியாக உணர்கிறது என்று டாக்டர் ரஸ்கா கூறுகிறார். “அவர்கள் செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அவர்கள் அதை தங்கள் அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க எல்லா வழிகளிலும் முயல்கிறார்கள்.”
4. சீனாவின் ராணுவ கட்டமைப்பு சிக்கலானதா?
சீனா அதன் ராணுவ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விரைவாக எட்டிப் பிடித்து வருகிறது என்பதையும், ஒரு பெரிய ஆயுதக் கிடங்கைக் கட்டியெழுப்புவதற்கான வளங்களைக் கொண்டுள்ளது என்பதையும் இந்த அணிவகுப்பு தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால், ராணுவ செயல்பாடுகளில் அமெரிக்கா இன்னும் முன்னிலை வகிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க ராணுவம் “சிறந்து விளங்குகிறது”, ஏனென்றால் களத்தில் உள்ளவர்கள் சூழ்நிலை பொருத்து முடிவுகளை எடுக்க முடியும், தேவைப்பட்டால் அவர்களின் சண்டை உத்திகளை மாற்ற முடியும். அது “கீழிருந்து மேல்” என்ற அணுகுமுறையாகும் என்று டாக்டர் ரஸ்கா குறிப்பிடுகிறார். இது ஒரு போரில் திறம்பட செயலாற்ற அவர்களுக்கு உதவுகிறது.
மறுபுறம், சீனா “மேல்-கீழ்” அணுகுமுறை கொண்டுள்ளது. அங்கு “அவர்கள் பளபளப்பான ஆயுதங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் மேலிருந்து ஒரு உத்தரவைப் பெறும் வரை அவர்கள் ஒரு விரலைக் கூட அசைக்க மாட்டார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
“சீனர்கள் அதன் தொழில்நுட்பம் தடுப்பை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். அது அமெரிக்காவை தடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்… ஆனால் செயல்பாட்டு மட்டத்தில், அவர்கள் சொல்வது போல் அவை சிறந்தவை அல்ல என்பதைக் காட்டும் நிகழ்வுகள் உள்ளன” என்று டாக்டர் ரஸ்கா கூறுகிறார். கடந்த மாதம் ஒரு சீன போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையை எதிர்கொண்டபோது அதன் சொந்த சிறிய கப்பல்களில் ஒன்றை மோதியது போன்ற சமீபத்திய சந்திப்புகளை சுட்டிக்காட்டுகிறார்.
5. சீனாவின் அணிவகுப்பு ஆயுத விற்பனை விளம்பரமா?
இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளின் அணிவகுப்பு அடிப்படையில் சீன ஆயுதங்களை வாங்கக்கூடியவர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒரு மாபெரும் களமாக இருந்தது என்று நீல் சுட்டிக்காட்டுகிறார்.
மியான்மர் போன்ற சில நாடுகள் ஏற்கனவே சீன ஆயுதங்களை அதிக அளவில் வாங்கி வருவதாக அறியப்படுகிறது. ஆனால் புதிய வாடிக்கையாளர்களுக்கு விற்பது அல்லது ஆர்டர்களை அதிகரிப்பது மூலமே சீன அரசாங்கம் தனது செல்வாக்கை உலகளவில் விரிவுபடுத்த முடியும் என்று டாக்டர் ரஸ்கா குறிப்பிடுகிறார்.
ஜின்பிங்குடன் எல்லா புறத்திலும் நின்ற முக்கியமான வாடிக்கையாளர்கள் – விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்.
மூவரும் ஒன்றாக அணிவகுப்புக்கு நடந்து சென்று மேடையில் நின்றபோது ஒரு ஐக்கிய முன்னணியாக தோன்றினர்.
இது அமெரிக்காவுக்கு ஒரு செய்தி என்று நீல் கூறுகிறார்: அமெரிக்கா உண்மையிலேயே அவர்களுக்கு சவால் விட விரும்பினால், “கொரிய தீபகற்பம், தைவான் ஜலசந்தி மற்றும் யுக்ரேன் என ஒரே நேரத்தில் பல சாத்தியமான களங்களில் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று அர்த்தம்.
“நீங்கள் அதை கருத்தில் கொண்டால், மூன்று களங்களிலும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தால், அது ஒன்றில் தோல்வியடையக்கூடும்.” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு