பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Image
சீனா புதன்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மூலம் தன் பலத்தைக் காட்டியுள்ளது. இந்த அணிவகுப்பில் நிறைய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான், சீனாவிடம் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த மாபெரும் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பை விட சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புதான் அதிக கவனம் பெற்றது. இவர்களை தாண்டி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
ஆனால், ஷி ஜின்பிங், புதின் மற்றும் கிம் ஜாங் உன் பற்றிதான் விவாதம் நடைபெற்றது.
உலகளவில் அதிக தடைகளை எதிர்கொள்ளும் புதின் மற்றும் கிம் ஜாங் உன், பொது மேடையில் ஷி ஜின்பிங்கை நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.
டிரம்பின் குற்றச்சாட்டும் ஷி ஜின்பிங்கின் பதிலும்
பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்ய ரஷ்யா மற்றும் வட கொரியாவுடன் இணைந்துள்ளதாக ஷி ஜின்பிங் மீது அவர் குற்றம் சாட்டினார்.
அதேசமயம், தனது உரையில் டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல், ‘சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை’ என ஷி ஜின்பிங் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகள் துறையின் பேராசிரியராக உள்ள ஸ்ரீபர்னா பதக் பிபிசி ஹிந்தி பாட்காஸ்டில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், “இந்த ராணுவ அணிவகுப்பால் அமெரிக்கா சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது. அதனால்தான் காலையிலேயே டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இரண்டாம் உலகப்போரின் போது சீனாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவியதாக குறிப்பிட்டிருந்தார்” என்கிறார்.
சீனா உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க அதிபர் இறக்குமதி வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்க இடையிலான உறவில் பல ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கு மத்தியில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா, இந்தியா இடையிலான உறவில் ஒரு இணக்கம் தெரிகிறது.
2020ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதலால் இருநாட்டு உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டது. பின் டிரம்பின் வரிவிதிப்பால் இந்த உறவு மேம்பட்டுள்ளது.
கடந்த மாதம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்தியா வந்தார். பின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீனா சென்றார். மறுபுறம், பிரதமர் நரேந்திர மோதியும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்.சி.ஓ) பங்கேற்றதை தாண்டி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார். இது இந்தியா, சீன இடையிலான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
ராணுவ அணிவகுப்பில் பிரதமர் மோதி பங்கேற்காதது ஏன்?
பட மூலாதாரம், Reuters
எஸ்.சி.ஓ மாநாட்டின்போது பிரதமர் மோதி, ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே நல்ல நெருக்கம் காணப்பட்டது.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடந்த எஸ்.சி.ஓ மாநாட்டில், 10 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் தவிர கூட்டணி நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
புதன்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பிலும், ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் போன்ற பல தலைவர்கள் பங்கேற்றனர். 4 நாள் சுற்றுப்பயணமாக புதின் சீனா சென்றுள்ளார்.
எனினும், பிரதமர் மோதி இந்த அணிவகுப்பில் பங்கேற்காதது அதிக பேசுபொருளாகியுள்ளது.
பிரதமர் மோதி ஏன் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை?
இந்த கேள்விக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யேலாரி பிபிசியிடம் பதிலளித்தார். “பாசிசத்துக்கு எதிரான சீனாவின் இந்த அணிவகுப்பு இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஆதிக்கத்துக்கு எதிரானது. அதனால் இந்த அணிவகுப்பில் பங்கேற்று ஜப்பானுக்கு எந்த செய்தியும் சொல்ல இந்தியா விரும்பவில்லை. இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குதான் எதிரானதே தவிர ஜப்பானுக்கு அல்ல” என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்த அணிவகுப்பில் பங்கேற்றார். ஆனால், பிரதமர் மோதி பங்கேற்கவில்லை.
இதுகுறித்து ஸ்ரீபர்னா பதக் கூறுகையில், “ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோதி செல்லவில்லை. இந்த அணிவகுப்பு ஜப்பான் ராணுவத்துக்கு எதிரான கொண்டாட்டம். ஜப்பான் இந்தியாவின் நட்பு நாடு. சீனா இந்தியாவை இதற்கு முன் நம்பியதில்லை. இப்போதும் நம்பவில்லை” என்றார்.
அதேசமயம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய மையத்தின் இணைப் பேராசிரியர் அமிதாப் சிங்கும் அரவிந்த் யேலாரி மற்றும் ஸ்ரீபர்னா பதக்கின் கருத்தை ஒப்புக்கொள்கிறார். இவர் மேலும் ஒரு கூற்றை முன்வைக்கிறார்.
பட மூலாதாரம், SPUTNIK/KREMLIN POOL/EPA/Shutterstock
சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் செயல்படாத சக்திகளுடன் நிற்க இந்தியா விரும்பவில்லை என, பேராசிரியர் அமிதாப் சிங் கூறுகிறார்.
பிரதமர் மோதி முதலில் ஜப்பான் சென்றார், அதன்பின் அங்கிருந்து சீனா சென்றார். சீனா மற்றும் வடகொரியா உடனான ஜப்பானின் பதற்றமான உறவு நன்கு தெரிந்த ஒன்றாகும்.
“ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் தனிப்பட்ட விரோதம் உள்ளது. சீனாவில் தேசியவாத உணர்வை தூண்ட வேண்டும் என்றால், ஜப்பான் மற்றும் இரண்டாம் உலகப் போர் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், சீனா மற்றும் வடகொரியாவுடன் ஒரே மேடையை பகிர்ந்துகொள்வது இந்தியாவுக்கு அசௌகரியமாகவே இருக்கும்” என அமிதாப் சிங் கூறுகிறார்.
“நம்மை பொறுத்தவரை ஜப்பான் பாசிச சக்தி கிடையாது. அதனால்தான் இந்தியா இந்த அணிவகுப்பில் இருந்து விலகியது. ஒருவேளை இந்தியா இந்த அணிவகுப்பில் பங்கேற்றிருந்தால், அது சீனாவின் ராணுவ படைகளுக்கு ஆதரவளித்திருக்கும்” என அரவிந்த் யேலாரி கூறுகிறார்.
“இன்று எந்த பாசிச சக்திகளும் இல்லையென்றாலும்கூட, சீனா மற்றும் PLA (சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம்), தனது ராணுவ வலிமையை அதிகப்படுத்தி வருகிறது. பிரதமர் மோதியின் பங்கேற்பை சீனா தனக்கு சாதகமாகவும் பயன்படுத்தியிருக்கக் கூடும். அதனால்தான் பிரதமர் மோதி இதில் பங்கேற்கவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
பிரதமர் மோதி அணிவகுப்பில் பங்கேற்காததற்கு டிரம்ப் காரணமா?
பட மூலாதாரம், Reuters
டிரம்பின் வரி விதிப்புக்குப் பிறகு இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு சற்று கசப்பாக மாறிவிட்டது.
இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ளார் அதிபர் டிரம்ப். பிரதமர் மோதியின் சீன பயணம் மற்றும் எஸ்.சி.ஓ மாநாட்டில் ஷி ஜின்பிங் மற்றும் புதின் உடன் நெருக்கமாக இருந்தது அமெரிக்காவுக்கான செய்தியாகவே கருதப்பட்டது.
சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்று டிரம்பை மேலும் கோபத்துக்கு ஆளாக்க வேண்டாம் என பிரதமர் மோதி நினைத்தாரா?
பிரதமர் மோதி டிரம்புக்காக இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என அமிதாப் சிங் கருதுகிறார்.
“பிரதமர் மோதி இந்த அணிவகுப்பில் பங்கேற்காதது டிரம்புக்காக அல்ல என நான் நினைக்கிறேன். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வந்து சென்ற பின் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் சென்றார். ஒருவகையில் அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சமன் செய்ய முயற்சித்தார்” என்றார் அவர்.
மேலும், “இதற்கு முன்பாகவும் நிறைய வெளிநாட்டு தலைவர்கள் சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேபோலவே, பிரதமர் மோதியும் முதலில் ஜப்பான் சென்றார்.” என்றார்.
இந்த சந்திப்பு சீனாவின் உலக அரங்கில் இணைய விரும்பும் நாடுகளின் சந்திப்பாகும். அதனால் இந்தியா அதில் கலந்துகொள்ளவில்லை என அமிதாப் சிங் கூறுகிறார்.
“இந்த அணிவகுப்பில் பங்கேற்ற நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்க்கையில் அவர்கள் அனைவரும் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகளில் கீழே உள்ளவர்கள். இந்த அணிவகுப்பு அதிகாரத்தை காட்சிப்படுத்த மட்டுமல்ல, மாற்று உலக அதிகாரத்துக்காகவும் ஆனது” என்றார்.
மோதியின் இருதரப்பு சுற்றுப்பயணம் ஒரு செய்தி சொல்லவே என்கிறார் அமிதாப் சிங். “சீனாவுடன் பல பிரச்னைகள் உள்ளன. அது ஒரே சுற்றுப்பயணத்தில் தீர்ந்துவிடாது எனபதை இந்தியா நன்கு அறியும்.” என்றார்.
மேலும், “தற்போது உலகளவில் ஒற்றுமையை நிலைநாட்டும் ஒரு சூழல் உள்ளது. ஆனால், சீனா தலைமையிலான இந்த உலக ஒழுங்கில் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியா, சுதந்திர மற்றும் ஜனநாயக உலக ஒழுங்குடன் இணைந்து நிற்கவே விரும்புகிறது” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு