26
சீனாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“என் கணவரின் வணிக நடவடிக்கைகளில் நான் ஒரு பகுதியாக இல்லை” என்று கூறிய குறித்த எம்.பி, தனது கணவர் எந்தச் சட்டத்தையும் மீறியதாக சந்தேகிக்க வைக்கும் “எதையும் நான் பார்த்ததில்லை” என்றும் கூறியுள்ளார்.
இலண்டன் மற்றும் வேல்ஸில் பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக 39, 43 மற்றும் 68 வயதுடைய மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டதாக மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நபர்களும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது இங்கிலாந்து நலன்களுக்கு எதிராகச் செயல்படும் நபர்களைத் தடுப்பதற்காக 2023-இல் கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.
பொதுமக்களுக்கு “உடனடி அல்லது நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இலண்டன், கார்டிஃப் மற்றும் ஈஸ்ட் கில்பிரைட் ஆகிய இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சமீபத்திய ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலண்டன் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தளபதி ஹெலன் பிளானகன் தெரிவித்தார்.
இந்தக் கைது நடவடிக்கைகள், பிரதமர் கீர் ஸ்டார்மர் சீனாவுடனான பொருளாதார உறவுகளைச் சீரமைக்க பெய்ஜிங்கிற்குச் சென்ற சில வாரங்களிலேயே நடந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் இது குறித்துக் கூறுகையில், “பொருளாதார அணுகலுக்காக இங்கிலாந்து தனது பாதுகாப்பை விட்டுக்கொடுக்காது” என்றும், சீனத் தலையீடு நிரூபிக்கப்பட்டால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் நிழல் அமைச்சர் அலெக்ஸ் புர்கார்ட், இத்தகைய அச்சுறுத்தல்களை இங்கிலாந்து எதிர்த்து நிற்காவிட்டால் நாடு தொடர்ந்து அவமரியாதையுடன் நடத்தப்படும் என்று விமர்சித்துள்ளார். மத்திய இலண்டனில் சீனத் தூதரகம் அமைப்பது தொடர்பான பாதுகாப்பு அபாயங்கள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
செய்தி மூலம் – பிபிசி