பட மூலாதாரம், AFP via Getty Images
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீனா மாபெரும் ராணுவ அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த அணிவகுப்பில் தங்களின் அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தியது. அதில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றிதான் அதிகம் பேசப்பட்டது.
அந்த சமயத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாம் உலகப்போரில் சீனாவுக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் பல தியாகங்களை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
“சீனா சுதந்திரம் பெறுவதற்காக அமெரிக்க எவ்வளவு ஆதரவு அளித்தது எவ்வளவு ரத்தம் சிந்தியது என்பதை அதிபர் ஷி ஜின்பிங் குறிப்பிடுவாரா என்பது பெரிய கேள்வியாக உள்ளது” என தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
“சீனா வெற்றி பெறுவதற்காக பல அமெரிக்கர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். தங்களின் வீரம் மற்றும் தியாகத்திற்காக அவர்கள் நினைவுகூரப்படுவார்கள் என நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்களுடன் இணைந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
உண்மையில், டிரம்ப் கூறிய அமெரிக்க ராணுவ வீரர்களின் தியாகம் பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட மறுத்துவருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
சீன – ஜப்பானிய போரின் போது அமெரிக்கா ராணுவ தளவாடங்களை கொடுத்து முக்கிய உதவி புரிந்ததாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனா – ஜப்பானிய போர்
பட மூலாதாரம், AFP via Getty Images
1931ஆம் ஆண்டு மஞ்சூரியாவில் புகுந்து சீனாவின் பல பகுதிகளை ஜப்பான் கைப்பற்றியது.
சீனா மீதான ஆதிக்கத்தை ஜப்பான் மேலும் வலுப்படுத்தியது. இந்த சமயத்தில் சீனா கம்யூனிஸ்டுகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்டிருந்தது.
1931ஆம் ஆண்டு ஜப்பான் சீனாவில் உள்ள மஞ்சூரியா பகுதியில் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்து அதை கைப்பற்றியது.
ஆனால் 1937ஆம் ஆண்டு நான்ஜிங்கில் ஜப்பானிய படைகள் நடத்திய படுகொலை முழுமையான போருக்கு வழிவகுத்தது.
சீனாவின் தேசியவாத தலைவரான சியாங் காய்-ஷேக், நான்ஜிங்கை தலைநகராக அறிவித்தார். எதிரெதிராக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் கோமிண்டாங்கும் (தேசியவாத கட்சி) ஜப்பானுக்கு எதிராக ஒன்று திரண்டன.
நான்ஜிங் நகரை கட்டுப்பாட்டை எடுத்த ஜப்பானிய படை, அங்கு படுகொலை, பாலியல் வன்கொடுமை, பணப் பறிப்பு போன்ற கொடுமைகளை நிகழ்த்தியது. 1937ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய படுகொலை 1938ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடித்தது.
வரலாற்று நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, அந்த சமயத்தில் நான்ஜிங்கில் சுமார் 2.5 முதல் 3 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய எண்ணிக்கையிலான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம்.
சீனா மட்டுமல்ல கொரியா (அப்போதைய மலாயா), பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை ஆக்கிரமித்திருந்த போது அத்துமீறல்களில் ஈடுபட்டதாக ஜப்பான் ஒருபோதும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
பட மூலாதாரம், AFP via Getty Images
1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஜெர்மனியின் நாஜிப் படை, இத்தாலி மற்றும் ஜப்பானின் கூட்டணி ஆக்ஸிஸ் அல்லது அச்சு நாடுகள் என அழைக்கப்பட்டது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனா நாடுகளின் கூட்டணி மற்றொரு புறம் இருந்தது.
கோமிண்டாங் தலைவர் சியாங் காய்-ஷேக் நேச நாடுகள் கூட்டணியில் இருந்தார்.
1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி பியர்ல் துறைமுகத்தில் அமெரிக்கா ராணுவ தளத்தின் மீது ஜப்பான் குண்டுவீசி தாக்கிய பிறகே அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலகப்போருக்குள் நுழைந்தது.
ஒன்றே கால் மணி நேரம் நடந்த குண்டுவீச்சில் 2400 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 8 போர்க்கப்பல்கள் உட்பட 19 தளவாடங்கள் அழிக்கப்பட்டன. 328 அமெரிக்க விமானங்களும் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.
இரண்டாம் உலகப் போரில் இருந்து ஒதுங்கி இருந்த அமெரிக்கா, இந்த சம்பவத்திற்குப் பிறகு நேரடியாகப் போரில் இறங்கியது.
“இந்தோ-பசிபிக் பிராந்தியம் உத்தி ரீதியாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கே மிகவும் முக்கியமானதாக இருந்தது” என்கிறார் வெளியுறவுத்துறை நிபுணர் கமர் ஆகா.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டிற்கு எதிராக சண்டையிட்ட அனைவருக்கும் அமெரிக்கா ஆதரவளித்ததாக அவர் கூறினார்.
600 போக்குவரத்து விமானங்களை இழந்த அமெரிக்கா
பட மூலாதாரம், AFP via Getty Images
இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ தளவாடங்களை வழங்கச் சென்ற ஏராளமான அமெரிக்க விமானங்கள் இமயமலை பகுதிகளில் விழுந்து நொறுங்கின.
சீனாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்கும் அமெரிக்காவின் விமான ஆபரேஷன் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸ் தகவல் சேகரித்தார்.
இந்தியா வழியே சீனாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்கும் இந்த ஆபரேஷன் சுமார் 42 மாதங்கள் நீடித்தது. அமெரிக்க, சீன விமானிகள், ரேடியோ ஆபரேட்டர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதன் மூலம் இந்தியாவின் அசாம் மற்றும் பெங்கால் வழியாக குன்மிங் மற்றும் சுன்கிங் (இப்போது சோங்கிங்) பகுதிகளில் இருந்த சீன படைகளுக்கு தளவாடங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
1942 ஏப்ரல் முதல் இந்த வழியே 650,000 டன் ராணுவ தளவாடங்களை சீனாவுக்கு அமெரிக்கா அனுப்பிவைத்தது.
சீன வீரர்களை பாராசூட் மூலம் இறக்கிவிடுவது இந்த நடவடிக்கையில் அடங்கும்.
ஃப்ளையிங் டைகர்ஸ்
பட மூலாதாரம், Air Force History Museum Program
பிராக்ஸ்டன் ஐசலின் ‘தி ஃப்ளையிங் டைகர்ஸ்: ஷெனால்ட்ஸ் அமெரிக்கன் வாலண்டியர் குரூப் இன் சீனா’ என்ற புத்தகம் அமெரிக்க வெளியுறவுத்துறை வலைத்தளத்தில் கிடைக்கிறது.
சுமார் 300 ராணுவ வீரர்கள் மற்றும் சில செவிலியர்கள் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியமர்த்தப்பட்டனர் இவர்கள் அமெரிக்க தன்னார்வலர் குழு (AVG) அல்லது ஃப்ளையிங் டைகர்ஸ் என அழைக்கப்பட்டனர் என 1941ஆம் ஆண்டு பிராக்ஸ்டன் எழுதியுள்ளார்.
அந்தக் காலத்தில், இந்தக் கடுமையான போரின் அனுபவத்தைப் பெறுவதற்கும், அச்சு நாடுகளுக்கு எதிராகப் போரிடும் கூட்டணி நாடுகளுக்கு ஆதரவை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவிற்கு இந்தக் குழு உதவியாக இருந்தது.
1932ஆம் ஆண்டு முதன் முறையாக கர்னல் ஜேக் ஜௌட் தலைமையில் சீனாவில் அமெரிக்கா தனது முதல் விமானப்படை ஆபரேஷனை நடத்தியதாக பிராக்ஸ்டன் குறிப்பிடுகிறார்.
சியாங் காய்-ஷேக் அரசு கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அமெரிக்காவிடம் உதவி கேட்டது. இதற்கான உரிய உத்தரவுகள் கிடைக்காத போதிலும், கர்னல் ஜாக் உதவினார் இந்த மிஷன் தோல்வியடைந்தது.
பின் மீண்டும் 1937ஆம் ஆண்டு நான்ஜிங்-ல் பிரச்னை வெடித்தபோது அமெரிக்காவிடம் உதவி கேட்கப்பட்டது. அமெரிக்கா கேப்டன் கிளாரி ஷெனால்ட்டை நியமித்தது. இவர் சீனாவில் பல்வேறு விமானத் தளங்களை அமைக்கவும், விமானப் பயிற்சி அளிக்கவும், தளவாடங்களை வழங்கவும், ராணுவ கட்டமைப்பை உருவாக்கவும், சீன விமானப்படையை அமைக்கவும் உதவினார்.
இந்த சமயத்தில்தான் சீனாவுக்கு உதவ பல்வேறு படைப்பிரிவுகளை சோவியத் யூனியன் அனுப்பியது. ஆனால் 1941ஆம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையின் படையெடுப்புக்குப் பிறகு அவர்கள் உதவுவதை நிறுத்திவிட்டனர்.
அந்த சூழ்நிலையில் அமெரிக்க தன்னார்வலர் குழு (AVG) முக்கிய பங்காற்றியது. போர் விமானங்கள் இந்தியா வழியாக பர்மாவின் ரங்கூனுக்கும், சீனாவுக்கும் பறந்தன. இமயமலை பகுதிகளிலும், சீனாவின் பீடபூமி பகுதிகளிலும் பல விமானங்கள் விழுந்து நொறுங்கின.
இதுதான் இரண்டாம் உலகப்போரில் சீனா பர்மா இந்தியா (CBI) போர் பிராந்தியம். இங்கு கடுமையான போர் நடந்தது. பர்மா வழியாகதான் இந்தியாவிற்குள் ஜப்பான் ஊடுருவியது.
ஷெனால்ட்டின் சுயசரிதையை மேற்கோள் காட்டி, அமெரிக்க தன்னார்வலர் குழு (AVG) 12 பி-40 விமானங்களை சண்டையில் இழந்ததாகவும், அதன் 61 விமானங்கள் தரையிலேயே அழிக்கப்பட்டதாகவும் பிராக்ஸ்டன் கூறுகிறார். அதேநேரத்தில், அமெரிக்க தன்னார்வலர் குழு (AVG) 299 ஜப்பானிய போர் விமானங்களை அழித்துள்ளது.
சீனா இதை குறிப்பிட மறுப்பது ஏன்?
பட மூலாதாரம், AFP via Getty Images
அமெரிக்கா முதல் உலகப்போரில் பங்கேற்கவில்லை. இரண்டாம் உலகப்போரிலும் தாமதமாகவே வந்து சேர்ந்ததாக கமர் ஆகா குறிப்பிடுகிறார். தனது தொழிற்துறையை வளர்ப்பதில்தான் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தியது.
ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்தது. சீனா அவர்களுடன் சண்டையிட்டது. இதில் ஜப்பானை எதிர்க்க சீனாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்கியதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறுகிறார்.
சீனா-ஜப்பானிய போரில் அமெரிக்காவின் பங்களிப்பு பற்றி சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் குறிப்பிடவில்லை.
உண்மையில் 1949ஆம் ஆண்டுக்கு முன் சீனாவை தேசியவாத கட்சியான கோமிண்டாங்கும் (KMT) மற்றும் அதன் தலைவர் சியாங் காய்-ஷேக்குமே ஆண்டனர். அவர் நேச நாடுகளிடம் உதவி கோரி, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டை கெய்ரோவில் சந்தித்தார்.
“வரலாற்றை மறுக்கமுடியாது. சீனாவுக்கு அமெரிக்கா நிறைய உதவிகளை செய்துள்ளது. வரலாற்று ரீதியாக இதுதான் உண்மை” என கமர் ஆகா கூறுகிறார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கோமிண்டாங் கட்சி இரண்டுமே ஜப்பானிய படையெடுப்புக்கு எதிராக ஒன்றிணைந்தன. ஆனால் 1945ல் ஜப்பான் சரண்டைந்த பிறகு அந்த இரு தரப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
இந்த உள்நாட்டுப் போரில் கோமிண்டாங் கட்சி தோற்கடிக்கப்பட்டது. அதன் ஆதரவாளர்கள் பின்வாங்கி தைவானில் தஞ்சம் புகுந்தனர்.
தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றத்திற்கான அடித்தளம் இந்த உள்நாட்டுப் போருடன் தொடர்புடையவை. அமெரிக்காவுடனான மோதலின் அடித்தளமும் அங்குதான் செல்கின்றது.
“கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராகவே இருந்தது. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு அமைந்த பிறகு அமெரிக்காவுடன் அந்த நாடு கசப்பான உறவைக் கொண்டுள்ளது என்பது ஆச்சர்யப்படுத்தக்கூடியது அல்ல.” என்கிறார் கமர் ஆகா.
வடகிழக்கில் மஞ்சூரியாவில் இருந்து தென்மேற்கில் சோங்கிங் வரை 8 ஆண்டுகள் சீனா ஜப்பானுடன் போரிட்டது. சுமார் 1 முதல் 2 கோடி சீன மக்கள் இதில் கொல்லப்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 4.8 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு தெரிவித்தது.
சுவாரஸ்யம் என்னவென்றால், சீனாவை முதலில் அங்கீகரித்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
சீனாவின் தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங் தேசியவாதத்தை தனது உள்நாட்டுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கியுள்ளார். ஜப்பானின் போர்க்குற்றங்களுக்கு எதிரான சீற்றம் தேசிய ஒற்றுமையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
ஷி ஜின்பிங் ஜப்பானுடனான போர் தொடங்கிய தேதியையும் மாற்றியுள்ளார். இதனால் போர் தற்போது 8 ஆண்டுகளுக்கு பதிலாக 14 ஆண்டுகளாக கணக்கிடப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் பங்களிப்பை சீனா அங்கீகரிக்குமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு