• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

சீன லைட்டர் விவகாரம் | ‘வெற்று அரசியலுக்காக பொய்’ – ராம சீனிவாசனுக்கு துரை வைகோ கண்டனம் | Chinese lighter ban issue –  Durai Vaiko response to Rama Srinivasan

Byadmin

Oct 23, 2024


சென்னை: “வெற்று அரசியலுக்காக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அவதூறு கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், “சீன லைட்டர்கள் தடை செய்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தடை பெற்றது போல் துரை வைகோ பேசி வருகிறார். யார் பெயரை வேண்டுமானாலும் இனிஷியல் போடக்கூடாது,” என தெரிவித்திருந்தார். இதற்கு துரை வைகோ சமூக வலைதள பதிவில் பதிலளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “சீன பிளாஸ்டிக் லைட்டர்கள், அதை தயாரிக்க தேவைப்படும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என நீண்ட காலமாகவே மதிமுக குரல் கொடுத்து வந்திருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த சீன லைட்டர் விவகாரம் குறித்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இருந்தேன்.

இதில் ராம சீனிவசான் என்ன குற்றம் கண்டுபிடித்தாரோ? தெரியவில்லை. எங்களுக்கு மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் கவலை இல்லை. மக்கள் நல பிரச்சினைகளுக்காக யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களிடம் முறையிடுவோம். எங்களது உழைப்பினால் கிடைக்கப்பெற்ற திட்டங்களுக்கு கூட மற்றவர்கள் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதை கண்டு இருக்கிறோம். ஆனால், அடுத்தவர்களின் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் எப்போதும் மதிமுகவுக்கு இல்லை.

எனவே, தலைவர் வைகோ பற்றியும், மதிமுக பற்றியும் உண்மை நிலை தெரிந்தும் அரசியலுக்காக விமர்சனம் செய்யும் பாஜக ராம சீனிவாசனின் அவதூறு கருத்துக்களை விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல அங்கு இருக்கும் பாஜகவினரே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வெற்று அரசியலுக்காக இனியாவது அவதூறு பொய் கருத்துக்களை பரப்புவதை நிறுத்திவிடுங்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.



By admin