சென்னை: பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: “அப்போது நான் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் சீமானுக்கு நெருக்கமாக இருந்த ஒருவரும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தார். ஒருநாள் அவர் பிரபாகரன் உடன் இயக்குநர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் இருந்த புகைப்படங்களை ஒரு டிவிடியில் எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்தார். அதில் சீமானுடைய புகைப்படமும் இருந்தது. இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து வேண்டும் என்று என்னிடம் அவர் சொன்னார்.
அதை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நான் எடிட் செய்து கொடுத்திருந்தேன். அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன். பிரபாகரனுக்கு நிழல் வைக்க மறந்திருப்பேன். அந்த நண்பரை பின்னாட்களில் நேரில் சந்தித்த போது, ‘அந்த புகைப்படம் வீட்டில் பிரேம் போடுவதற்கு என்று சொன்னீர்கள். ஆனால் அது இப்போது வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறதே’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நம்முடைய புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவரை உருவாக்கியிருக்கிறோம். நல்ல விஷயம்தானே’ என்று கூறினார்.
சீமான் நேரில் சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா என்றெல்லாம் என்னால் சொல்லமுடியாது. ஆனால் இந்த புகைப்படம் ஒரிஜினல் இல்லை என்பதை என்னால் சொல்லமுடியும்” இவ்வாறு சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார்.
முன்னதாக சங்ககிரி ராஜ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் ‘இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்’ என்று தெரிவித்திருந்தார்.
இவர், அவரை சந்திக்கவே இல்லை.
எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்.
— Sankagiri RAJKUMAR (@Rajkumar_Dir) January 19, 2025