சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் பெண்கள் குறித்து சீமான் பேசியது பற்றி அவர் வீட்டில் உள்ள பெண்களும், அவரது கட்சியில் உள்ள பெண்களும் கேள்வி கேட்க வேண்டும் என கனிமொழி எம்.பி கருத்து தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி நடிகை விஜயலட்சுமி போலீஸில் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் சீமானிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து வந்த சீமான், நடிகை விஜயலட்சுமி குறித்து தெரிவித்த கருத்துகள் வைரலாகியுள்ளன.
அதுதொடர்பாக கனிமொழி எம்.பி.யிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டபோது, “சீமான் பேசிய பேச்சுக்கள் குறித்து அவரது வீட்டில் உள்ள பெண்களும், நாம் தமிழர் கட்சியில் உள்ள பெண்களும் கேள்வி கேட்க வேண்டும். இதைவிட பெண்களை கேவலமாகப் பேச முடியாது. இதைக் கேட்டுக் கொண்டு அவரது வீட்டிலும், அக்கட்சியிலும் பெண்கள் எப்படி சகித்துக் கொண்டு, பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என பதில் அளித்தார்.
மகளிர் காங்கிரஸ் கண்டனம்: இதனிடையே, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சையத் அஜீனா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மகளிரை மகாலட்சுமியாகப் பார்க்கும் தமிழகத்தில் பெண்களைத் தொடர்ந்து கேவலப்படுத்தி வரும், நாம் தமிழர் என கட்சியின் பெயர் வைத்துக்கொண்டு தமிழ் பெண்களையும் கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் வகையில் சீமான் பேசியிருப்பதை தமிழக மகளிர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை தென்னங்கீற்றால் ஓலை பின்னி அதில் அமர வைத்து பாதுகாக்கும் தமிழ் பண்பாட்டினை கேவலப்படுத்தி பேசிய சீமானை கண்டித்து தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் அதே தென்னங்கீற்றால் தயாரிக்கப்பட்ட துடைப்புக் கட்டையால் அடிக்க தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தயாராக இருக்கிறது. அவரை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க தமிழகப் பெண்கள் திரள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.